Spoiler Alert: ‘Avengers Endgame: Encore’... லீக்கான 3 காட்சிகள்! 

‘Avengers: Doomsday’ படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் மூன்று புதிய போஸ்ட் கிரெடிட் காட்சிகள் ‘Avengers Endgame: Encore-ல் இடம்பெற்றுள்ள நிலையில், அந்தக் காட்சிகள் திரையரங்கில் வெளியாகும் முன்பே இணையத்தில் லீக் ஆகிவிட்டன. 

Sep 24, 2026 - 18:00
Spoiler Alert: ‘Avengers Endgame: Encore’... லீக்கான 3 காட்சிகள்! 

மார்வெல் ரசிகர்களுக்கு செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது. 2019-ல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘Avengers: Endgame’, கூடுதல் காட்சிகளுடன் ‘Avengers Endgame: Encore’ என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெறும் 3 முக்கிய காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளன. 

ஸ்பாய்லர் அலர்ட்!

இந்தக் காட்சிகள் முதலில் ஒரு பிரிவியூ ஸ்கிரீனிங்கில் எடுக்கப்பட்டதாகவும், பின்னர் Reddit உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை நீக்க மார்வெல் தரப்பு காப்புரிமை நடவடிக்கைகளை எடுத்தாலும், புதிய பதிவுகள் மீண்டும் மீண்டும் இணையத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

அப்படி லீக்கானதாகக் கூறப்படும் மூன்று காட்சிகளில் என்ன இருக்கிறது?

கேப்டன் அமெரிக்கா வீட்டுக்கு வந்த லோகி!

ஸ்டீவ் ரோஜர்ஸ் - பெக்கி கார்ட்டர் மீண்டும் சந்திக்கும் அந்த உணர்ச்சிகரமான தருணம் நினைவிருக்கிறதா? அதற்குப் பிறகு ஒரு புதிய காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருவரும் முத்தமிட்ட பிறகு, அவர்களின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கேப்டன் அமெரிக்கா சுவருக்குப் பின்னால் மறைந்து கொள்ள, பெக்கி கதவைத் திறக்கிறார். அங்கே நிற்பது... லோகி!

அடுத்து என்ன பேசுகிறார்கள் என்பது ரசிகர்களின் ஆரவாரத்தில் சரியாகக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், லோகியைப் பார்த்ததும் ஸ்டீவ் உள்ளிட்டோர் ஒருவரையொருவர் கவலையுடன் பார்க்கும் காட்சி இடம்பெறுகிறதாம்.

இதற்காகவே ‘Loki’ தொடரின் இரண்டாவது சீசன் கதையை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் போல!

TVA-வில் என்ன நடக்கிறது?

இரண்டாவது காட்சியில், TVA அலுவலகத்தில் Mobius M. Mobius ஒரு பெரிய பிரச்னையை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.

இரண்டு மல்டிவெர்ஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதத் தயாராகும் காட்சி முதலில் காட்டப்படுகிறது. ஆனால் உற்றுப் பார்த்தால், அந்த இரு பிரபஞ்சங்களும் ஒன்றையொன்று நோக்கி ஏவுகணைகளை வீசிக்கொண்டிருப்பது தெரியவருகிறதாம்.

தொடர்ந்து, பல்வேறு பிரபஞ்சங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதாக எச்சரிக்கைகள் திரைகளில் தோன்றுகின்றன. அப்போது Ouroboros, மல்டிவெர்ஸ் சிதைந்து கொண்டிருப்பதைத் தெரிவிக்கிறார். அதாவது... ‘Doomsday’க்கு முன்னாடியே மல்டிவெர்ஸ் கதவு தட்டத் தொடங்கிவிட்டது!

பங்கருக்குள் ஹல்க்... தேடி வந்த டாக்டர் டூம்?

மூன்றாவது காட்சிதான் ‘Avengers: Doomsday’ உடன் நேரடியாக இணையும் வகையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பூமிக்கு அடியில் ஆயிரக்கணக்கான மைல்கள் ஆழத்தில் அமைந்துள்ள பங்கர் ஒன்றில் Bruce Banner தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். “Hulk வெளியே வர முடியாது... யாராலும் உள்ளே வர முடியாது” என்ற வகையில் அவர் தன்னைப் பற்றிய பதிவைச் செய்து வைத்திருக்கிறாராம்.

மேலும், அந்த பங்கருக்குள் காமா கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் சாதனத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதும் காட்சியில் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால்... பங்கர் அத்தனை பாதுகாப்பானதாக இல்லை போல!

திடீரென அங்கே ஒரு மர்ம நபர் நுழைகிறார். அந்த நபர் யார் என்பது காட்சியில் நேரடியாகக் காட்டப்படவில்லை என்றாலும், தரையில் தோன்றும் பச்சை நிற மாயச் சின்னங்கள் அது Doctor Doom என்பதை உணர்த்துவதாக லீக் வீடியோவைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

டாக்டர் டூம் ஏன் ப்ரூஸ் பேனரைத் தேடி வருகிறார்? ஹல்க்கை அவர் என்ன செய்யப் போகிறார்? என்பதுதான் இப்போது ரசிகர்களின் அடுத்த கேள்வி.

மொத்தமாக லீக்கானதாகக் கூறப்படும் இந்த மூன்று காட்சிகளும் சுமார் நான்கு நிமிடங்கள் ஓடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் செல்போனில் எடுக்கப்பட்ட மங்கலான வீடியோவில் பார்ப்பதைவிட... செப்டம்பர் 25 முதல் திரையரங்கில் இந்தக் காட்சிகளை முழுமையாகப் பார்ப்பதற்காகக் காத்திருப்பதுதான் மார்வெல் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே வழி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow