இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் மாயாஜாலம்... ‘பொன்வானம் பன்னீர் தூவுது’ பாடலின் பின்னணி!
இளையராஜா–வைரமுத்து–ஜானகி கூட்டணியில் உருவான ‘பொன்வானம் பன்னீர் தூவுது’ பாடல், காதல், ஏக்கம், காமம் என சொல்லத் தயங்கிய உணர்வுகளுக்கு இசையும் வரிகளும் கொடுத்த உயிர்ப்பை அலசுகிறது.
‘அவன் ஆம்பள’ என்று சொல்லுவார்கள். பொம்பளை எல்லையைத் தாண்டினா பூமி தாங்காது என்று கண்ணாம்பா காலத்து வசனம் சொல்லுவார்கள். ‘முள்ளுல சேலை பட்டாலும் சேலைல முள்ளுபட்டாலும்’ என்று வசனம் பேசுவார்கள். மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள நோயாளியாக இருக்கும் கணவன் போராட்டத்தை ‘சாரதா’ எனும் திரைப்படம் சொல்லியது.
சபலம், சரசம் என்கிற சாமான்ய வார்த்தைகளுக்குள் சிக்காத வலிகள்தான் ஆசாபாசங்கள். காம எண்ணங்கள். அந்த உணர்வுகளை, ரத்தமும் வலியுமாக, சதையும் கண்ணீருமாகச் சொன்ன பாடல்களில், ‘பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்ற பாட்டு, மனசைப் போட்டு பிசைந்தெடுத்த பாட்டு!
‘இவர் இப்படித்தான் படம் எடுப்பார்’ என்று பலரையும் முத்திரை குத்துகிற மாதிரியில்லாமல், தான் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவிதமாக எடுத்தார் மேஜர். அதில் அவரின் தீராத கலைத்தாகம் தெரியும். கமலை வைத்து ‘அந்த ஒரு நிமிடம்’ மாதிரி ஆக்ஷன் படம் எடுத்தவர்தான், சிவகுமாரை வைத்து ‘இன்று நீ நாளை நான்’ எடுத்தார்.
ஆனால் போகிற போக்கில் பாடலைத் தரவில்லை இளையராஜா. லட்சுமி கதாபாத்திரத்தின் மொத்த வேதனைகளையும் உள்வாங்கிக்கொண்டு இசைஞானி, காம உணர்வுகளின் பாழந்த பங்களாவுக்கு வெளிச்சப்பாய் வீசினார். அதற்கு சாமர வரிகளையும் இளைப்பாறலுக்கான கிளைகளையும் உருவாக்கினார் கவியரசு வைரமுத்து. காதல், களியாட்டம், குத்தாட்டம், இழப்பு, தாய்மை, பெண்மை, விரகம், வில்லங்கம் என எல்லா உணர்வுகளுக்கும் பொருந்துகிற ஜானகியம்மாவின் குரல், இந்தப் பாடலுக்கு ஜீவன், உயிர், நாடி எல்லாமே!
சில பாடலை வரிகளுடன் ஆரம்பிப்பார் இளையராஜா. இசையின் பயணங்களுக்குப் பிறகு வரிகளைத் தொடங்குவார். சில தருணங்களில், ஹம்மிங்கில் மொத்த பாரத்தையும், தாகத்தையும் சொல்லிவிடுவார். இவையெல்லாம் இளையராஜா ‘ரூம் போட்டு’ யோசிப்பதில்லை. ஆர்மோனியத்தில் கைவைக்கும் போது, அவரின் ஆத்மா சொல்லும். அதை அப்படியே இளையராஜா நோட்ஸாக்கிவிடுவார்!
இடி, மின்னல், மழை, காற்று. இங்கிருந்து கொஞ்சமாக இசை தொடங்கும். அப்படியே ‘ஆஆஆஆஆஆஆஆ...’ என்கிற ஆலாபனையில் ஹம்மிங் பாடுவார் ஜானகியம்மா. மிருதங்கமெல்லாம் ‘தடங் தடங்’ என்று நம் நெஞ்சில் அறையும்.
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அந்தக் கேரக்டருக்கே தெரிகிறது. ‘எண்ணம் மீறுகிறோம்’ என்று! ‘வெள்ளை’யில் இருந்து வண்ணத்துக்கு மாறுகிற சிந்தனை கண்களின் ஓரத்தில் எட்டிப்பார்க்கிறது. கவியரசு வைரமுத்து லேசாக மழையில் நனைந்திருப்பார். பிறகு அந்த நாயகி வேறு, வைரமுத்து வேறு என்றில்லாமல் உருமாறுவார். பாலினம் மாறுவார்!
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
காம மழையில் நனையும் பூக்கள் ஒதுங்கிக்கொள்ள இடம் பார்க்கிறதாம். பூக்களெல்லாம் அம்புகள் போல் உயிர் வரை வந்து தாக்குகின்றனவாம்! என்னவொரு உவமை. இத்துடன் விட்டாரா வைரமுத்து?
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
கோளாறு, பாலாறு, காதல் ஆசை, காமன் பூஜை, ஜோடி வண்டுகள், கோடு தாண்டுமா? என்று காமம் தருகிற பேரானந்தத்தை, வரிகளில் சொல்ல, ’புருஷன் அழைத்தால்தான் காமம்’ என்றிருக்கும் உலகத்துப் பெண்களையும் உசுப்பிவிட்டு, கண்ணீர் கசியச் செய்யும்!
தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
என்று வைரமுத்து எழுத, இளையராஜாவின் இசையும் ஜானகியம்மாவின் உச்சரிப்பும் அந்த ஏக்கத்தை நாம் உணரச்செய்யும்.
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
என்ற வரிகளில், காமத்துக்கும் கண்ணியம் சேர்த்திருப்பார். கிரீடம் சூட்டியிருப்பார் வைரமுத்து!
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
இளையராஜா எத்தனையோ மெலடிப் பாட்டுகளைப் போட்டிருக்கிறார்.
What's Your Reaction?