சட்டப்பேரவையில் விஜய் vs திமுக...உதயநிதியின் ‘சுறா’ ரிப்ளை!

சட்டப்பேரவையில் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உதயநிதி பகிர்ந்த ‘சுறா’ படக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது!

Sep 7, 2026 - 21:43
சட்டப்பேரவையில் விஜய் vs திமுக...உதயநிதியின் ‘சுறா’ ரிப்ளை!
Udhayanidhi’s Sura Story Goes Viral

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இன்று நடைபெற்ற அவை நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக பரபரப்பாக மாறின. காவல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார்.

அப்போது, எதிர்க்கட்சியான திமுகவை விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்தார். தனது உரையில் அமலாக்கத்துறை வழக்குகள், மிசா காலகட்டம், சர்க்காரியா ஆணையம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

விஜய் உரைக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு :

முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையை தொடர்ந்து கொண்டிருந்தபோது, அவரது கருத்துகளுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக உறுப்பினர்கள் அவையில் எழுந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததுடன், அவையின் மையப்பகுதியில் தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

வெளிநடப்பு செய்த திமுக :

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் உரைக்கு பதிலளிக்க எதிர்க்கட்சிகளுக்கு சட்டப்பேரவைத் தலைவர் உரிய நேரம் ஒதுக்கவில்லை என திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

சட்டம் ஒழுங்கு குறித்து திமுக குற்றச்சாட்டு :

தவெக அரசின் முதல் நூறு நாட்களில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தாங்கள் முன்வைத்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்த விவகாரங்கள் குறித்து ஆதாரங்களுடன் சட்டப்பேரவையில் எடுத்துரைத்ததாகவும், அதற்கு உரிய பதிலை வழங்குவதற்குப் பதிலாக முதலமைச்சர் விஜய் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

"வழக்குகள் இருப்பது புதிதல்ல" :

முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட பல்வேறு விவகாரங்கள் வழக்குகள் தொடர்பானவைதான் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், அரசியலில் இருப்பவர்கள் மீது வழக்குகள் இருப்பதை வைத்து மட்டும் குற்றம் சாட்ட முடியாது என்ற கருத்தையும் முன்வைத்தார்.

மேலும், முதலமைச்சர் விஜய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் மீதும் வழக்குகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வைரலாகும் உதயநிதியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி :

இதற்கிடையே, உதயநிதி ஸ்டாலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

அதில், முதலமைச்சர் விஜய் நடித்த ‘சுறா’ திரைப்படத்தில் இடம்பெறும் கட்சியான வெண்ணிறாடைமூர்த்தி மற்றும் வடிவேலுவின் பிரபலமான காமெடி சீனை ஸ்டோரியாக வைத்துள்ளார். 

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கும் திமுகவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்குப் பின்னர் உதயநிதி பகிர்ந்த இந்த சுறா படக்காட்சி தற்போது இணையத்தில் அரசியல் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow