‘முத்துவேல் பாண்டியன்’களுக்கெல்லாம் அப்பாதான் ‘பில்லா’...ரஜினியின் ஸ்டைல் சாம்ராஜ்யம் தொடங்கிய கதை!
1980-ல் வெளியான ரஜினிகாந்தின் ‘பில்லா’ திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த நிலையில், இரட்டை வேட நடிப்பு, ஸ்டைல், அதிரடி என ரசிகர்களைக் கவர்ந்த இப்படம், ரஜினியின் மாஸ் ஹீரோ பிம்பம் உருவாக முக்கியப் பங்கு வகித்தது.
கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா!
’ராவணன் மவண்டா’ என்று பாடல் ஹிட்டானாலும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல’ என்று ‘என் வழி தனி வழி’ என வலம் வரும் ரஜினி, சினிமாவில் எட்டாவது அதிசயம்தான்; அபூர்வம்தான்! ‘ஜெயிலர் 2’ அதிரிபுதிரி ஹிட்டடித்து, ‘சூப்பர்ஸ்டார்’ பட்டத்துக்கு யார் அடித்துக் கொண்டாலும் ‘இக்கடச்சூடு’ என 75 வயதிலும் மாஸ் காட்டி மிரட்டிக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்!
திரையுலக வாழ்க்கையில், ஒரு சில படங்கள் மிகமிக முக்கியத்துவம் பெற்றுவிடுவது உண்டு. நடிகர்களுக்கோ இயக்குநர்களுக்கோ இசையமைப்பாளர்களுக்கோ அவர்களை அடுத்தகட்டத்துக்கு, அடுத்த உயரத்துக்கு கொண்டுசென்று நிறுத்தும். அங்கே அரியாசனம் போடும். அமரச்சொல்லும். கிரீடம் சூட்டும். மாலை அணிவித்து மரியாதை செய்யும். நடந்து வருவதற்கு ரெட்கார்ப்பெட் விரிக்கும். அடுத்த பயணம் இன்னும் எளிதாகவும் இனிதாகவும் அமைய, வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ரஜினி எனும் ரஜினிகாந்த் எனும் சூப்பர்ஸ்டாருக்கு, அப்படியொரு படங்களில் ஸ்பெஷல்... பில்லா! சொல்லப்போனால், ரஜினியின் முதல் கேங்க்ஸ்டர் படம் இது! ரஜினியை கலெக்ஷன் ஹீரோவாக, வசூல் சக்கரவர்த்தியாக கொடிநாட்டியதும் ‘பில்லா’தான்! இப்படி எக்ஸ்பிரஸ் வேக திருப்பங்களும் காட்சிகளும் பிரமாண்டங்களும் எல்லாவற்றுக்கும் மேலாக ரஜினியின் ஸ்டைல் கலந்த நடிப்பும் என மனதில் தனியிடம் பிடித்து நிற்கிறான் பில்லா! இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய குட்டீஸ்களும் அண்ணன்களும் ரஜினியின் வெறிகொண்ட ரசிகர்களாகவே ஆகிப்போனார்கள். ரஜினி ஸ்டைலில் பெல்பாட்டம் போடுவதும் முடியை நிறைய வளர்த்துக்கொண்டு, அதை அடிக்கடி தலைகோதிவிட்டுக்கொள்வதும் என பெண்களைக் கவர்ந்த கதையெல்லாம் வாழ்வின் யதார்த்த சுவாரஸ்யங்கள்! ‘எனக்கு பணம் முக்கியம் என்று நினைத்திருந்தாலோ, அப்போது பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட ரஜினியுடன் நடிக்கலாமே என்று ஆசைப்பட்டிருந்தாலோ நான் நடித்திருக்கலாமே. ஆனால் எனக்கு அப்போது நடிக்க விருப்பமில்லை. அதனால் ’பில்லா’ படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன்’ என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மனம் திறந்து சொல்லியிருக்கிறார். . ’பில்லா’ ஃபார்முலா என்கிற ஆக்ஷன் டிராமா, ரஜினிக்கு எப்போதுமே கைகொடுத்துவந்திருக்கிறது. அதனால்தான் இப்போது வந்திருக்கிற ‘ஜெயிலர் 2’ படத்தை ‘பாட்ஷா’வுக்கு இணையாகச் சொல்லுகிறார்கள். அப்போது வந்த ‘பாட்ஷா’வை, ‘பில்லா’ படம் போல மாஸ் காட்டிருக்கார்பா தலைவரு என்று கொண்டாடினார்கள்!
அபூர்வராகங்கள் தொடங்கி, அவர்கள், மூன்று முடிச்சு என்றெல்லாம் பண்ணிக்கொண்டிருந்த காலகட்டத்தில், ஒரு கலர் படம்...அதாவது வண்ணப்படம். ஒரு டான் படம்... அதாவது கேங்க்ஸ்டர் படம். கே.பாலாஜி படம்... அதாவது ரசிகர்களின் ‘பல்ஸ்’ அறிந்த தயாரிப்பாளரின் படம். ஹிந்தியில் அமிதாப் பண்ணிய ‘டான்’ படத்தின் ரீமேக்... என்று பல பெருமைகளைக் கொண்ட படமாக ரஜினியின் ஸ்டைலையெல்லாம் திரட்டிக் காட்டிய படம் பில்லா! 25 வாரங்கள் கடந்து ஓடிய மெகா ஹிட்டடித்த படம்.
1980ஆம் ஆண்டு வெளியானது. கே.பாலாஜி என்றாலே ரீமேக் படங்களைப் பண்ணுவதில் அசகாயசூரர் என்கிற பேருண்டு. சிவாஜியை வைத்தே படங்கள் பண்ணிக்கொண்டிருந்தவருக்கு, கமலும் ரஜினியும் நடுநடுவே கைகொடுத்தார்கள். 'டான்’ என்ற பெயரில் மிகப்பெரிய ஹிட்டடித்த படத்தில், அமிதாப் கலக்கியிருப்பார். அதை தமிழில் ’பில்லா’ என எடுத்தார்கள். ரஜினி, தன் ஸ்டைலிலும் நடிப்பிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார். இரண்டு ரஜினிக்கும் இருபதுவிதமான வெரைட்டி காட்டியிருப்பார்.
இன்னொரு உண்மை... 79களில், ரஜினிக்கு பெரிய மார்க்கெட் இல்லை. சிலபல காரணங்களால், ரஜினியை அணுகவே எல்லோரும் பயந்தார்கள். அப்படி எல்லோரும் தயங்கியவேளையில், கே.பாலாஜிதான் ரஜினியை அழைத்துப் பேசினார். ‘டான்’ கதையைச் சொன்னார். ‘படம் பண்ணுங்க ரஜினி. எனக்கு ‘டான்’ படம் மேலயும் நம்பிக்கை இருக்கு. ரஜினி மேலயும் நம்பிக்கை இருக்கு’ என்றார். எப்படிப் பார்த்தாலும் ரஜினியின் சினிமா வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் பில்லாவுக்கு தனியிடம் உண்டு. இந்தப் படம் வந்து வெற்றி அடைந்த பிறகுதான், ஏவிஎம் முதலான நிறுவனங்கள் ரஜினியை அணுகின. பலரும் ரஜினியியம் கதை சொல்லச் சென்றார்கள். தர்மயுத்தம், முரட்டுக்காளை என்றெல்லாம் படங்கள் வரத்தொடங்கின என்பதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
மிகப்பெரிய கடத்தல் தலைவன் பில்லா.போலீசுக்கு தண்ணிகாட்டுகிற ஒவ்வொரு காட்சியும், அத்தனை அழகு. அவ்வளவு நுணுக்கம். ஒருகட்டத்தில், போலீசார் சுட்டுவிட, அடுத்து அந்தக் கூட்டத்தை, எப்படிப் பிடிப்பது, என்ன செய்வது என்பது தெரியாமல் தவிக்கும்போது, போலீஸ் அதிகாரி கே.பாலாஜியின் கண்களில், ராஜா என்கிற ராஜப்பா தென்படுவார். பார்ப்பதற்கு அச்சு அசலாக பில்லா போலவே இருப்பதால், அவரை அழைத்து வந்து, பில்லாவாக்கி, அந்தக் கூட்டத்துக்குள் அனுப்புவார்.
அந்தக் கூட்டத்தின் வேலையையும் கூட்டத்தையும் எப்படி மடக்கிப் பிடிக்கிறது போலீஸ், நடுவே பில்லாவாக நடிக்கும் ராஜப்பா மாட்டிக்கொள்ள, அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதை திடுக் திருப்பங்களும் நகைச்சுவையும் கொஞ்சம் கிளாமரும் கலந்து கொடுத்திருப்பார்கள்.
இண்டர்போல் போலீஸ் ஆபீசர் கோகுல்நாத்தாக மேஜர் சுந்தர்ராஜன், போலீஸ் அதிகாரிகளாக கே.பாலாஜி, ஏவிஎம்.ராஜன், பில்லாவுடன் பிரவீணா, ஆர்.எஸ்.மனோகர், நடுவே கொஞ்சகாலம் இந்தக் கூட்டத்தில் இருந்துவிட்டு, விலகி வந்திருக்கும் தேங்காய் சீனிவாசன், கூட்டத்தில் உள்ள ரஞ்சித், அவனுடைய சகோதரி ஸ்ரீப்ரியா, ராஜப்பா, அவரின் நெருங்கிய தோழியும் சகோதரியுமாக மனோரமா என்று மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம். ஆனால், கதையின் நேர்த்தியும் திரைக்கதையின் தெளிவும் நட்சத்திரப் பங்களிப்புகளும் மிக அழகாகக் கையாளப்பட்டிருக்கும். அதுதான் தயாரிப்பாள் கே.பாலாஜியின் தனித்துவம்!
முதல் காட்சியே ரசிகர்களே மிரட்டியெடுத்துவிடும். ரஜினி ஒற்றை ஆளாக காரில் வந்து இறங்குவார். மூன்று பேர் நிற்பார்கள். ‘என்ன பில்லா தங்கம் கொண்டாந்துருக்கதானே.’ ’பணம் கொடுத்து வாங்க முடியாது. வீரம் காட்டித்தான் வாங்கணும்’ என்று துப்பாக்கி எடுப்பார்கள். பெட்டியக் கொடு என்பார்கள். தூக்கிப் போடுவார். டம்மென்று வெடிக்கும். டைட்டில் அங்கிருந்து ஆரம்பிக்கும். டைட்டிலிலும் ரஜினியின் விதம்விதமான ஸ்டைல்கள். இவை எல்லாம் சேர்ந்துதான் அவரை மாஸ் ஹீரோவாக்கின!
கூட்டத்தில் உள்ள ஒருவனைச் சுட்டுவிடுவார் பில்லா. எல்லோரும் வந்து கேட்பார்கள். ‘ஒரு சின்சியர் வேலைக்காரன்’ என்பார் மனோகர். ‘இந்த பில்லா தேவையில்லாம புல்லட்டை வேஸ்ட் பண்ணமாட்டான்’ என்பார் ரஜினி. ‘அவனை எனக்குப் பிடிக்கல. முக்கியமா அவனோட ஷூ... சுத்தமாப் பிடிக்கலை’ என்பார். எல்லோருக்கும் குழப்பம். அவனுடைய வலது ஷூவைக் கழற்றி ஓப்பன் செய்யச் சொல்வார். அதற்குள் ஒரு பேப்பர். போலீசின் கையாள் என்பது தெரியவரும்! இப்படி படம் நெடுகிலும் அதிரிபுதிரியான சரவெடிகள், கொளுத்திக்கொண்டே இருப்பார்கள். வெடித்துக்கொண்டே இருக்கும்.
பில்லாவின் கூட்டத்தில் ஸ்ரீப்ரியா சேருவார். வழக்கம் போல், பாலாஜி படத்தின் நாயகி பெயரான ராதாதான் இவரின் பெயர். அப்படிச் சேர்ந்ததே தன் அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்குவதற்குத்தான். ஆனால் என்ன, அதற்குள் பில்லா போலீசில் சிக்கி இறந்துவிடுவார். அந்த இடத்துக்குத்தான் ராஜப்பா, பில்லா வேஷமிட்டு வந்திருப்பார். இவரைக் கொல்ல திட்டமிடுவார் ஸ்ரீப்ரியா. இப்படியாக... விறுவிறு சுறுசுறு பரபர என ரஜினியைப் போலவே ரஜினிக்கு ஈடுகொடுத்து தடதடக்கும் திரைக்கதை, மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.
எம்.எஸ்.வி.யின் பாடல்கள் மொத்தமும் அமர்க்களம். அப்போது விவிதபாரதியிலும் சிலோன் ரேடியோவிலும் இந்தப் பாடலை ஒலிபரப்பாத நாளே கிடையாது. விரும்பிக் கேட்ட நேயர்களின் அடுத்த பாடல்... என்றதும் ‘மை நேம் இஸ் பில்லா’ என்று ஒலிபரப்பிவிட்டு,நிறுத்துவார்
‘நாட்டுக்குள்ளே எனக்கொரு பேருண்டு,’ ‘இரவும் பகலும் முழுதும்’, ‘நினைத்தாலே இனிக்கும் சுகமே...’ என்கிற எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல், ‘மை நேம் இஸ் பில்லா’ , ‘வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி’ என்று எல்லாப் பாட்டுமே சூப்பர் ஹிட்டு. ஒருபக்கம் எஸ்.பி.,பியும் இன்னொரு புறம் மலேசியா வாசுதேவனும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.
படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியம்தான். அந்த கோட்டும்சூட்டும் ரஜினிக்கு தனி அழகு கூட்டித்தரும். வாயில் புகைந்துகொண்டிருக்கும் பைப் கூட ரஜினிக்குக் கட்டுப்பட்டு ஸ்டைல் காட்டும். ராஜப்பாவாக ஒரு பாடி லாங்வேஜ் காட்டி நெளிந்து வளைந்து பேசி அசத்தியிருப்பார் இன்னொரு ரஜினி. பில்லா மிடுக்குக் காட்டி, மிரட்டியிருப்பார் என்றால் இவர் காமெடியில் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்திருப்பார்! .
இது பில்லா இல்லை என்று தெரிந்த ஒரே நபர், போலீஸ் அதிகாரி பாலாஜி. அவர் இறந்துவிடவே, போலீஸ் துரத்தும். நான் பில்லா இல்லை என் பெயர் ராஜப்பா என்பார். நம்ப மறுக்கும் போலீஸ் கூட்டம். இன்னொரு பக்கம் பில்லாவின் கூட்டமும் ரஜினியைக் கொல்லத் துரத்தும். நல்லவேளையாய், ஸ்ரீப்ரியாவுக்கு உண்மைகள் தெரியவர, காதலும் பிறக்கும்.
பொதுவாகவே கே.பாலாஜியின் படங்கள், ஜனவரி 26ம் தேதி, ஏப்ரல் 14ம் தேதி என ரிலீசாகும். இந்த பில்லா, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீசானதாக நினைவு. ஸ்ரீப்ரியாவின் நடிப்பு அபாரம். அண்ணனைக் கொன்ற பில்லாவைப் பழிவாங்க நினைப்பதும் அதற்காக அசோகனிடம் கராத்தே முதலான பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதும் கிளாமரில் மயக்கப் பார்ப்பதும் டிங்டிங் என்று கண்சிமிட்டும் நர்ஸ் வேடமணிந்து அசத்துவதும் என எல்லாக் காட்சிகளிலும் நடிப்பில் பின்னியிருப்பார். அந்த ’வெத்தலயைப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி’ என்கிற அந்தப் பாடலைப் பார்த்தால், ‘ஸ்ரீப்ரியாவுக்கு தாராள மனசுப்பா’ என்று ரசிகர்கள் புகழ்வார்கள்! குத்தாட்டம் போட்டிருப்பார் ஸ்ரீப்ரியா. .
’பில்லா’வைச் சொல்லும்போது போயஸ்கார்டன் தலைவர் ரஜினியைச் சொல்லியே ஆகவேண்டும். அதேபோல், போயஸ்கார்டன் என்றாலே நம் நினைவுக்கு வரும் ஜெயலலிதாவையும் குறிப்பிட்டாகவேண்டும். ’பில்லா’ படத்தில் ஸ்ரீப்ரியாவின் கேரக்டரில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஜெயலலிதாவைத்தான் அழைத்தார் பாலாஜி. கே.பாலாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆத்ம நட்பு உண்டு. எனவே ஜெயலலிதாவுக்கு ஒரு ரிலாக்ஸ் தரும் விதமாக,’பில்லா’வில் நடிக்க அழைத்தார் கே.பாலாஜி. ஆனால் என்ன நினைத்தாரோ... ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
ரஜினி என்றாலே கொண்டாட்டம்தான்! ஆக, ‘முத்துவேல் பாண்டியன்’களுக்கெல்லாம் அப்பாதான் ‘பில்லா!’
What's Your Reaction?

