திமுகவிற்கு கம்யூனிஸ்டுகள் வைத்த செக்... பரந்தாமனுக்கு எதிராக களமிறங்கும் பிரபலம்..!
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழ்நாடு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு எதிராக தோழர் பி. சுகந்தியை களமிறக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்).
திமுக வேட்பாளர் பரந்தாமன்
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஐ. பரந்தாமன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது. முன்னாள் எழும்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பரந்தாமன், திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளித்த சிபிஎம், தனித்து போட்டியிடுவது என அறிவித்தது திமுக மட்டுமல்ல தவெகவிற்கும் பெரிய ஷாக் தான். அந்த வகையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்து வேட்பாளரை நிறுத்த உள்ளதாக அறிவித்த சிபிஎம் தற்போது தோழர் சுகந்தியை களமிறக்கியுள்ளது.
யார் இந்த சுகந்தி?
சிபிஎம் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவரான பி. சுகந்தி, சமூக நீதி, பெண்கள் உரிமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான களப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் (AIDWA) துணைத் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், தலித் மற்றும் பழங்குடியின பெண்களின் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகவும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
தேர்தல் களத்தில் ஏற்கனவே போட்டி
சுகந்திக்கு சட்டமன்றத் தேர்தல் களம் புதிதல்ல. கடந்த 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக அவர் போட்டியிட்டுள்ளார்.
தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் சிபிஎம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது நீண்டகால களப்பணி மற்றும் மக்கள் பிரச்னைகள் தொடர்பான அரசியல் செயல்பாடுகளை முன்வைத்து அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.
சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல்
தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிபிஎம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் சுகந்தி முக்கியப் பங்காற்றியுள்ளார்.
காதல் மற்றும் கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சட்ட மற்றும் களப் போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்ப வன்முறை மற்றும் பெண்களின் சம உரிமை தொடர்பான பிரச்னைகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
திமுக வேட்பாளரை எதிர்த்து முன்னாள் கூட்டணிக் கட்சியான சிபிஎம் வேட்பாளரை நிறுத்தியிருப்பது மதுராந்தகம் இடைத்தேர்தலின் அரசியல் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
திமுகவும் சிபிஎம்மும் பல்வேறு தேர்தல்களில் கூட்டணியாக செயல்பட்டு வந்துள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் இரு கட்சிகளும் நேரடியாக போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் திமுகவின் அமைப்பு பலத்துக்கும், சிபிஎம் வேட்பாளர் சுகந்தியின் நீண்டகால களப்பணிக்கும், அதிமுகவின் மிகப்பெரும் செல்வாக்குக்கும், தவெகவின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் இடையே நடைபெறவுள்ள போட்டி, தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அதிமுக, தவெக, சிபிஎம், ஆகிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ள நிலையில், திமுக ஒரு ஆண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது எந்த வகையில் திமுகவிற்கு கைக் கொடுக்கும் என்ற கேள்வியையும், மற்ற கட்சிகளில் உள்ள பெண் வேட்பாளர்களை காட்டிலும் தோழர் சுகந்திக்கு அரசியல் களத்தில் நற்பெயர் உள்ளது. ஆனால், இது அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
What's Your Reaction?

