திமுக கூட்டணி கட்சிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பிப்ரவரி முதல் வாரத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவும், பாஜகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டணியை உறுதி செய்தன. இந்தக் கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாகா, அமமுக, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரசு, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் என ஏராளமான கட்சிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளே தற்போதும் நீடித்து வருகின்றன. கூடுதல் தொகுதி வேண்டும் என திமுகவிடம் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். டிசம்பர் 15-க்குள் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்திய நிலையில், திமுக அலட்சியம் காட்டுவதாகவும், இதனால் கூட்டணி அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிக்கயிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

