ஜென் ஸீ vs மூத்த தலைமுறை... உறவுச் சிக்கல்களின் பின்னணி

ஜென் Z தலைமுறையின் சுயசார்பு மனப்பான்மைக்கும் மூத்த தலைமுறையின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையே உருவான தலைமுறை இடைவெளிக்குப் பின்னால் இருக்கும் சமூக, குடும்ப மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களின் பின்னணியை இந்தக் கட்டுரை அலசுகிறது.

Sep 22, 2026 - 14:54
ஜென் ஸீ vs மூத்த தலைமுறை... உறவுச் சிக்கல்களின் பின்னணி

இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களின்  100% சுதந்திர போக்கு மற்றும் தொழில்நுட்ப திறனுடன் பொருந்திப் போக முடியாத பொறாமையில், மூத்த தலைமுறையினர் அவர்களுக்கு வைத்த பெயர்தான் ஜென் ஸீ.

இந்த ஜென் ஸீ தலைமுறை, கல்வி வேலைவாய்ப்பு திருமணம் விவாகரத்து உள்ளிட்ட எல்லா முடிவுகளையும் தாங்களே சுயமாக எடுக்கிறார்கள். இதற்கு முன் இருந்த தலைமுறையில் இந்த முடிவுகளை பெற்றோர்,  கணவர் அல்லது  கூட்டுக் குடும்பத்தின் தலைவர்தான் எடுத்து வந்தார்கள்.

இளம் தலைமுறைக்கு மூத்த தலைமுறை எப்படி ஜென் ஸீ என பெயர் சூட்டி அழைக்கிறார்களோ, அதேபோல் இளம் தலைமுறையினர் மூத்த தலைமுறைக்கு ‘பூமர்” என பெயர்சூட்டி அழைக்கிறார்கள். இந்த  ‘பூமர்கள்’  ஜென் ஸீக்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வகையில் அவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

வலிமையான தாயின் தலைமையில் வேட்டையாடிய நம் முன்னோர்கள், பின் மெல்ல மெல்ல விலங்குகளைப் பழக்கும் குழுவாகி, ஆண்களுக்கு தலைமையைப் பகிர்ந்தது. பின் விவசாயம் கற்று, சொத்து உரிமைக்காக கூட்டுக்குடும்பமாக மாறியது. இந்த வாழ்க்கை முறை மாற பல்லாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது

தத்துவ  அறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன், தனது வால்கா முதல் கங்கை வரை நூலில் (தமிழில் அதிகம் விற்கும் நூல்களில் ஒன்று ) ஒவ்வொரு அத்தியாயமாக இதை கதை போல விவரித்துள்ளார்.

காலம் மாற மாற,  பெண் கல்வி,  பொருளாதார சுதந்திரத்தால் கூட்டுக் குடும்பங்கள் தனிக் குடித்தனமாக மாறத் தொடங்கியது. இந்த தனிக் குடித்தனத்தின் கடைசி கட்டத்தில் கணவன் - மனைவி இருவரும் ஒருவரை மற்றவர் சார்ந்து இருந்த வரை குழந்தைகள் மீது கண்மூடித் தனமான பாசமும் தியாக மனப்பான்மையும் இருந்தது.

1980 களில் இருந்து பெண்களின் கல்வி சேர்க்கை கணிசமாக அதிகரித்தது. SSLC,  + 2 தேர்வுகளில் பெண் குழந்தைகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றார்கள்

கணினி புரட்சியிலும் பெண்கள் ஆண்களை விஞ்சினார்கள்..

விமான நிலையத்தில் தன்னந்தனியாக நள்ளிரவில் சர்வதேச விமானத்தில் வேலைக்காக 20 + வயது பெண்கள் போவது 2000 த்தில் சாதாரண விஷயமாகி விட்டது.  ஐரோப்பிய அமெரிக்க அனுபவம் பெற்ற தலைமுறை அந்நாட்டு டாலர் ஸ்டெர்லிங் உடன் free men பண்பாட்டையும் இறக்குமதி செய்தது

குடும்பம் என்பது ஒருவரை மற்றவர் சுரண்டுவது என பல மடங்கு அதிக சம்பளம் ஈட்டத் தொடங்கிய வெளிநாடு சென்ற தலைமுறை சிந்திக்கத் தொடங்கியது. இந்த பண்பாட்டு தாக்கம் இந்தியாவில் வாழும் பொருளாதார உயர் வகுப்பினரிடமும் எளிதாக தொற்றியது.

குடும்ப அமைப்பு  பலவீனமான இந்த சூழலில் பிறந்த குழந்தைகள் தாயும் தந்தையும் சுய நலமாக ஒளிவு மறைவாக இருப்பதை அருகில் இருந்து கவனித்தது

குழந்தைகள் பெற்றோரிடம் கிடைக்காத அன்புக்காக ஏங்கி தனக்குள்ளேயே வாழ முடிவு செய்தன. இதற்கு இண்டர்னெட் புரட்சி மிகவும் உதவியாக இருக்கிறது. இதன் விளைவாக இப்போதைய குடும்ப அமைப்பின் பலவீனமான   சூழலில் பிறந்த குழந்தைகளுக்கு ஜென் சி என்ற முத்திரை விழுந்தது.

இது ஜென் சி என்ற இளைய தலைமுறையை அதற்கு முந்தையை தலைமுறை உருவாக்கியதன் பிளாஷ் பேக். இதானால் இரு தலைமுறைக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகளை அடுத்து பார்ப்போம்.

மித்ரன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow