பணியும் ஆச்சு.. பயிற்சியும் ஆச்சு.. இதையும் செய்வீங்களா? முதல்வருக்கு யோசனை...
அரசுத் துறைகளில் கல்லூரி மாணவர்களுக்கு பணிப் பயிற்சி வழங்குவது, நிர்வாகச் செயல்திறனையும் இளைஞர்களின் அனுபவத்தையும் மேம்படுத்த வலியுறுத்துகிறது.
பணியும்... பயிற்சியும்
அரசு நிர்வாகத்தில் தேவையான நல்ல மாற்றங்களை முன்னெடுக்க, 'அதிரடி நடவடிக்கைகள்'தான் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு நேரடிப் பயன் தருகிற விதத்தில், ஆரோக்கியமான முன்னெடுப்புகள் மூலமாகவும் வியக்கத்தக்க சீர்திருத்தங்களைச் செய்ய முடியும்.
அரசு நிர்வாகத்தில், செலவுகளைக் குறைத்துச் செயல்திறனை மேம்படுத்த ஒரு நல்ல வழி அதுதான் 'பணிப் பயிற்சி. அரசுத் துறைகளில் ஏராளமான பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. அளவுக்கு அதிகமான நிதிச்சுமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதன் விளைவாக, அரசு நிர்வாகச் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படக்கூடும் அல்லவா? இதனைச் சரி செய்ய, ஒரு சரியான வழி - பணிப் பயிற்சி. அரசுக் கல்லூரி மாணாக்கர்களைச் சுழற்சி முறையில், அரசுத் துறைகளில் பணிப் பயிற்சியில் ஈடுபடுத்தலாம்.
கலை / அறிவியல், தொழிற் கல்வி பட்டப் படிப்பின் நிறைவு ஆண்டில், ஒவ்வொரு மாணாக்கரும் இரு வாரங்களுக்கு ஏதேனும் ஓர் அரசுத் துறையில் பயிற்சிப் பணி ஆற்ற வேண்டும். மாணாக்கர் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே, அரசுத் துறையில் அல்லது அரசு நிறுவனத்தில், 'ரோஸ்டர் முறையில், பயிற்சிப் பணி ஒதுக்கீடு செய்யலாம். இதற்கான சான்றிதழ், அரசால் முறையாக வழங்கப்பட வேண்டும். இதனை மாணாக்கர்கள் தங்களின் கல்வித் தகுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.
நிதி வசதி இடம் கொடுத்தால், பயிற்சிக் கால ஊதியம் என்று ஏதேனும் ஒரு தொகையையும் அவர்களுக்கு வழங்கலாம். இதே போன்று, பட்ட (Post Graduation), ஆராய்ச்சிப் படிப்பு (Ph.D) மேற்கொள்வோர்.
ஆசிரியர் ! விரிவுரையாளர் பணிக்குப் 'பயிற்சிக்காக' அமர்த்தப்படலாம். பல பள்ளிகள் / கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் / பேராசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு கிடைத்தாற் போலும் இருக்கும். பெரும்பாலான அரசுப் பணிகள், நடைமுறை சார்ந்த சாதாரண பணிகள்தாம். ஒருமுறை சொல்லித் தந்தால் போதும், இன்றைய இளைஞர்கள் உடனே சுற்றுக்கொண்டு திறம்படச் செயலாற்றுவார்கள்.
உதாரணத்துக்கு, மின்வாரிய அலுவலகத்தில் கட்டணம் வசூலித்தல், அரசு அலுவலகங்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று அதனை முறையாகக் கணினியில் பதிவேற்றுதல், அனுமதிக்கப்பட்ட ஆவணங்களைப் பிரதி எடுத்துத் தருதல் போன்ற பணிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி நன்கு செய்வார்கள், கணினியில் தேர்ந்த இன்றைய இளைஞர்கள்.
பொதுப் பணி ஆற்றுகிறோம் என்கிற பெருமிதம் இருக்கும்: 'இது நமது அரசு' என்கிற பொறுப்பு உணர்வும் ஏற்படும். கோரிக்கைகளுடன் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களுக்கு இந்த இளைஞர்களைக் காணும்போதே ஒருவித நம்பிக்கை பிறக்கும். கிராமப்புறங்களில் சொல்வதுண்டு ஏதாச்சும் வேலை கொடுத்தா, பொறுப்பு தானா வந்துரப் போவுது!" ஏதும் இலக்கு இல்லாமல் வீணே ஊர் சுற்றிக் கொண்டு, பொன்னான நேரத்தைப் பாழாக்குவதாய் இன்றைய இளைஞர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பணிப் பயிற்சி' மூலம் முற்றிலும் மறைந்துபோகும்.
பொறுப்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும்; அரசு நிர்வாகத்தில் செயல் திறனை மேம்படுத்தும்; நிர்வாகச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும். கல்லூரி இளைஞர்களுக்குப் பணிப் பயிற்சி புதிய அரசுக்குப் புதுப் பொலிவு!
ஏன் நிறைவேற்றக் கூடாது? .
What's Your Reaction?