Heavy rain alert: வேகமெடுக்கும் மழை.. தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ள நிலையில், இன்றைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) பகுதியில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருப்பூர் PWD (திருப்பூர்) தலா 15 செ.மீ, ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்), அடையாமடை (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 13 செ.மீ, ஊத்துக்குளி (திருப்பூர்) 12 செ.மீ, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்) 11 செ.மீ மழை பெய்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனடிப்படையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு-
05-04-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-04-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
07-04-2025 முதல் 11-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (05-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






