Director selvaraghavan: கார்த்தி இல்லாம ஆயிரத்தில் ஒருவன் 2 இல்ல.. செல்வராகவன் ஓபன் டாக்
ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 எப்போது எடுக்க திட்டமிட்டு இருக்கீங்க? என எழுப்பிய கேள்விக்கு இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்கள் என பட்டியல் எடுத்தால் அதில் நிச்சயம் செல்வராகவனின் பெயரும் இடம்பெறும். அவரின் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்திக், ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் போன்ற முன்னணி நடிகர்கள் உட்பட 1000-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்.
நவீன தமிழ் சினிமா களம் காணாத ஒரு திரைக்கதையினை கையில் எடுத்து பிரம்மிக்க வைத்திருந்தார் செல்வராகவன். ஆனால், படம் திரையில் வெளியாகிய போது போதிய வரவேற்பினை ரசிகர்களிடமிருந்து பெறவில்லை. வசூல் அளவில் பெரிய அடி வாங்கியது. உயிரை கொடுத்து நடித்திருந்த நடிகர்கள், திறமைகளை கொட்டித்தீர்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் என யாருக்கும் எந்த அங்கீகாரமும் படம் வெளியானபோது கிடைக்கவில்லை. இதனால், பெருமளவில் மனமுடைந்துள்ளதாக பல நேர்க்காணலில் வெளிப்படையாகவே செல்வராகவன் பேசியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியாகி 5-6 ஆண்டுகள் கழித்து, திடீரென்று படத்தை தலையில் வைத்து கொண்டாடத் தொடங்கினர் ரசிகர்கள். செல்வராகவன் பங்கேற்கும் நிகழ்வு, நேர்க்காணல் என அனைத்திலும் ஆயிரத்தில் ஒருவன் அடுத்த பாகம் எப்போது எடுப்பீங்க? என கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
கார்த்தி இல்லாம AO2 இல்ல..
இந்நிலையில் சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து மனம் திறந்துள்ளார் செல்வராகவன். “நாங்கள் செய்த தவறு தனுஷ் நடிப்பதாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து ரொம்ப விரைவாக அறிவிப்பு வெளியிட்டது தான். கார்த்தி இல்லாமல் ஆயிரத்தில் ஒருவனின் இரண்டாம் பாகம் இல்லாமல் பண்ண முடியாது. சோழர்கள்,பாண்டியர்கள் என திரைக்கதை கொஞ்சம் சிக்கலானது. படம் பண்ணுவேன் என்கிற ஆசையெல்லாம் இருக்கு. இப்போ இருக்கிற காலத்தில், ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 எடுப்பது ரொம்ப எளிது. பொருட்செலவும் பெரிதாக இருக்காது முதல் பாகத்துடன் ஒப்பீடு செய்யும் போது.. தயாரிப்பாளர், இந்த படத்தில் நடிக்க நடிகர்களின் குறைந்தப்பட்சம் ஒரு வருடம் கால்ஷீட் தேவைப்படுகிறது. நேரம் கைக்கூடினால், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகம், மெண்டல் மனதில் போன்ற படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






