இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்... பல்வேறு விஷயங்களில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம்!

பல்வேறு விஷயங்களை முன்வைத்து ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா கூட்டணி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

Jul 1, 2024 - 08:52
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்... பல்வேறு விஷயங்களில் அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகள் திட்டம்!
நாடாளுமன்றம்.

டெல்லி: 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.  காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி 233 இடங்களை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. 

மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை கடந்த 24ம் தேதி கூடியது. இதில் முதல் 2 நாட்களும் பிரதமர் மோடி உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். 

அதன்பிறகு மாநிலங்களவை கூடிய நிலையில், இரு அவைகளிலும் கடந்த 28ம் தேதி ( வெள்ளிக்கிழமை) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சிறப்புரையாற்றினார். இந்நிலையில், 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. 

கூட்டம் தொடங்கியதும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தாக்கல் செய்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார். 

அதன்பின்பு பல்வேறு விஷயங்களை முன்வைத்து ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி கொடுக்க இந்தியா கூட்டணி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மேலும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இன்று முதல் நாட்டில் அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்திலும் இது குறித்தும் பேச முடிவு செய்துள்ளனர். 

இதுதவிர அக்னி பாத் திட்டம், விலைவாசி உயர்வு, தொடர் ரயில் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபடவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow