மின்சார உதடுகள்-இன்னொரு நான்!

கேம்பிரிட்ஜ் காவல் துறையில் ஏஜெண்ட் நிக்கோலஸை சந்தித்த ராதிகா, மர்மமான முறையில் உயிரிழந்த மஹிமாவின் மரணம் மற்றும் அவரது டைம் டிராவல் ஆராய்ச்சி குறித்து விசாரணையில் ஈடுபடுகிறார். மஹிமாவின் ஆய்வு, மெட்டாவெர்ஸ் மற்றும் மாற்று பிரபஞ்சங்கள் தொடர்பான கோட்பாடுகளுடன் இணைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், நிக்கோலஸ் அறிவியல் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் பின்னணிகளை ஆராய்கிறார். மாற்று வாழ்க்கைப் பாதைகள் மற்றும் பல பிரபஞ்சங்கள் குறித்து விவாதம் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில், ராதிகாவுக்கு சில்வியாவிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு புதிய திருப்பத்துக்கான அறிகுறியாக அமைகிறது.

மின்சார உதடுகள்-இன்னொரு நான்!
மாலைமதி


கேம்பிரிட்ஜ் காவல் துறை அலுவலகம் ஐந்து மாடி அரை நூறு மீட்டர் கிரிம்ஸன் கலர் கட்டிடம்.

ஆகஸ்ட் 24.8.2025 ஞாயிற்றுக்கிழமை. அன்று தமிழ்நாட்டில் உலக ஜூனியர் ஹாக்கி போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணி மலேசியாவிடம் தோற்றுக்கொண்டு இருந்தபோது டி.எஸ்.பி ராதிகா மேடம் கம்பீரமாக அந்த அலுவலகத்தில் வந்து ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரிலிருந்து இறங்கினார். அந்த கார் துருக்கி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர். ஆலிஃப் மிகப் பிரபலமான எழுத்தாளர். ராதிகாவிற்கு ஒரு சிரமம் என்றால், "என் எல்லா ஆற்றலும் உங்கள் பின்னால் வரும்" என்று சொல்லிவிட்டார்.

அந்த அலுவலகத்தில் ஏஜெண்ட் நிக்கோலஸ் என்பவரோடு மீட்டிங் 11 மணிக்கு ஏற்பாடாகியிருந்தது. நிக்கோலஸ் எதிரில் வந்து கைகுலுக்கி வரவேற்றார். "மேடம், வாங்க! நேற்று துரதிர்ஷ்டவசமாக உங்கள் தோழி இனியாவின் மகள் மஹிமா இறந்தது சோகமானது. நீங்களே எங்களுக்குத் தேவையான இன்வெஸ்டிகேஷன் லீட் தருவதற்காக வந்திருப்பது மிகவும் என்கரேஜிங்காக இருக்கிறது. மஹிமாவுடைய அம்மா இனியா தாஸாஜெரா மெடிட்டேஷன் ரெட்ரீட் போயிருக்கிற நிலையில், உங்கள் உதவி சிறப்பானது. வாங்க மேடம், இந்த வழி..." முன்னால் நிக்கோலஸ் நடக்க, ராதிகா கம்பீரமாக அவர் பின்னால் நடந்தார்.

"மஹிமா சமீபத்தில் கல்லூரியில் நடக்கவிருக்கும் மாணவர் தேர்தலில் போட்டியிட நினைத்திருக்கிறார். மிக இளம் வயதில். நியூயார்க் மேயரான 'ஜோர்ஹான்' இவளுடைய முன்னுதாரணமாக இருக்கிறார். அந்தச் சிக்கலில் யாராவது இப்படி ஒரு விபரீத முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதா என்று ஒரு கோணத்தில் விசாரிக்கிறோம். மஹிமாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மூச்சுத் திணறி இறந்ததாகத்தான் சொல்லியிருக்கிறது. இதோ, நீங்களும் பார்க்கலாம். மேடம், பிளட் மற்றும் வைட்டல் டிஸ்யூ சாம்பிள்கள் ஃபாரன்ஸிக் போயிருக்கின்றன! அவளுடைய ஆராய்ச்சியில் ஏதோ புதிதாய் டெக்னிகலாக டைம் டிராவல் பற்றிக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்.

அதன் மூலம் மெட்டாவெர்ஸ்க்குள் பிரவேசிக்கலாம் என்று டொனால்ட் என்கிற அவள் ஃபிரண்ட் சொல்கிறான். எவ்வளவு தூரம் அதை நம்புவது என்றும், அது என்ன என்றும் தெளிவாக தெரியவில்லை. மேக்ஸ்வெல் என்கிற புரொபசர் கொஞ்சம் ஐடியா கொடுத்தார். அல்ட்டர்னேட்டிவ் யுனிவர்ஸ் என்பது கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விதத்தில் ஒரே ஆள் இருப்பதைச் சாத்தியமாக்குகிறது. தமிழில் 'பிளாக்' என்று ஒரு திரைப்படம் கடந்த 2024 ல் வந்தது. ஜீவா நடித்தது. அந்தப் படத்தில் இவர் சொன்ன மாதிரி மெட்டாவெர்ஸ் வரும்."

"நிக்கோலஸ், மஹிமா பண்ணிக்கிட்டிருந்த புராஜெக்ட்டுக்கும் அவங்களோட மரணத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறீங்களா?"
"காலப் பயணம் என்கிற வரலாற்றில் முன்பின்னாகப் போவதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். திரைப்படங்கள், புத்தகங்களில் சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதுகிறவர்கள் லட்டு மாதிரி எழுதுவாங்க. ராபர்ட் ஹெய்ன்லைன் படிச்சு இருக்கீங்களா. ஆல் யூ ஜாம்பீஸ்.. டெஸ்டினேஷன் மேன் - அப்படீன்னு படமா வந்தது. டீன் ஆஃப் சயின்ஸ் ஃபிக்ஷன் இவருதான். சைன்டிஃபிக் அக்யூரசி.. அதாவது, கதைகளில் ஓர் அறிவியல்பூர்வமான உண்மைத்தன்மை இருக்கணும்னு சொல்லி, அதன்படி எழுதியவர். ஆனா, நீங்க சொல்ற மெட்டாவெர்ஸ் மாற்று உலகம் அல்டர்நேட்டிவ் ரியலிட்டி, இன்னும் கொஞ்சம் புதுசு.

தமிழில் 12B அப்படின்னு ஒரு படம். பாட்டெல்லாம் செமயா இருக்கும். சுஜாதா வசனம் எழுதியிருப்பார். 'ஸ்லைடிங் டோர்ஸ்' என்ற இங்கிலிஷ் படத் தழுவல். 2001லேயே வந்தது. ஒரே சமயத்துல ஒரே ஆளை ரெண்டு விதமா காட்டியிருப்பாங்க. ஜீவா கதை எழுதியிருப்பார்." இப்படியாக அறிவியல் பின்னணியைப் புரிந்துகொள்வதற்காகக் கதைகளையும் திரைப்படங்களையும் அவரே அப்படியான ஒரு இரண்டாவது மூன்றாவது நான்காவது விதமாகக் காட்டப்படும் கதாபாத்திரம்தான் என்பது அவருக்கு தெரிய வருமா? அதை இப்போது வாழ்க்கை முடிவு செய்யவில்லை.

ஏனென்றால், இந்த ராதிகா 15.4.1998 அன்று ஓடக்கல்பாளையம் செம்பூ தோட்டத்தில் காசைச் சுண்டிப் போட்டபோது ஹெட் விழுந்தது. இவர் எஸ்.ஐ ஆகிறார்; இனியா ஐ.பி.எஸ் ஆகிறார். "எக்ஸலென்ட் மேடம்! இந்த வாழ்க்கையின் மாற்றுப்பாதை விவரங்களைப் பற்றி வந்த கதைகள், புத்தகங்கள், கலைஞர்கள் திரைப்படங்கள் பற்றிப் பல மணி நேரம் தேடினாலும் கிடைக்காத அரிய விவரங்களை ஜஸ்ட் லைக் தட் சில விநாடிகளில் சொல்லிவிட்டீர்கள். நான் எஞ்சினியரோ, டாக்டரோ ஆக வாய்ப்பு இருக்கும்போது, ஒன்றைத் தேர்ந்தெடுத்து டாக்டர் ஆகிவிட்டால், அதோடு நின்றுவிடுகிறேன். அப்படி அல்ல... எஞ்சினியராக இன்னொரு நான் ஆகி இருக்கக்கூடும். அந்த எஞ்சினியர் இருக்கிற உலகம் ஒன்று தனியாக இருக்கக் கூடும். இப்படிப் பல கிளைகள் ஒவ்வொரு விநாடியிலும் பல பிரிவுகள் ஏற்பட்டு, அவ்வளவு உலகங்கள் இருக்க முடியும்.

ஆனால், ஒரு உலகத்தில் உள்ள நான் மறு உலக என்னைப் பார்க்க இதுவரை முடிந்ததில்லை. அப்படி முடியவில்லை என்பதாலேயே, இன்னொரு நான் இல்லை என்று முடிவு செய்துவிட முடியாதில்லையா?” "ஒரு நிஜத்திற்குத் தடயம் கிடைக்கலேன்னா அது நடக்கவே இல்லேன்னு சொல்ல அது போதாது!" நஸீம் நிக்கோலஸ் தலேப் சொன்னது. தன் பெயரிலான உளவியலாளரை மேற்கோள் காட்டினார் நிக்கோலஸ்.
அப்போது ஃபோன் அடித்தது. ராதிகா எடுத்தார்.

மறுமுனையில் கேட்ட குரல்..
சில்வியாவினுடையது..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow