தைலாபுரம் டூ பனையூர்.. அருளுடன் டீலை முடித்த ஜான் ஆரோக்கியசாமி..?

தைலாபுர டாக்டர்கள் இணைவால், தனித்துவிடப்பட்டுள்ள அருள், பாமகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Jul 23, 2026 - 12:29
Jul 23, 2026 - 12:45
தைலாபுரம் டூ பனையூர்.. அருளுடன் டீலை முடித்த ஜான் ஆரோக்கியசாமி..?

பாமக முன்னாள் எம்எல்ஏ அருளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பது தொடர்பாக அக்கட்சி தலைமை முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் இருந்து நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களை தவெகவில் சேர்ப்பதற்கு அக்கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அருளின் விவகாரத்தில் மட்டும் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில்  ஆட்சியை அமைத்துள்ள தவெக, கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசியல் அனுபவம் கொண்டவர்களை கட்சிக்குள் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக அதிமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகள் தவெகவில் இணைந்தனர். சொல்லப்போனால் அதிமுக கூடாரமே காலியாகிக் கொண்டிருப்பதாக்க் கூறப்படுகிறது. தொடர்ந்து பிற கட்சிகளிலிருந்தும் முக்கிய பிரமுகர்கள் சனிக்கிழமை சம்பிரதாயமாக பனையூருக்கு படையெடுத்து கொத்து கொத்தாக தவெகவில் இணைந்து வருகின்றனர். 

ஆனால், பாமகவில் இருந்து யாரையும் தவெகவில் இணைக்கக் கூடாது என்ற நிலைப்பாடு மட்டும் தொடர்ந்து வந்ததாக பனையூர் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

அதாவது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான அரசியல் சூழலும், எதிர்காலத்தில் பாமக ஆதரவு தேவைப்படலாம் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் பாமகவில் இருந்து யாராவது வந்தால் அவர்களை கட்சியில் சேர்க்க்க் கூடாது என்பதே தவெகவின் நிலைப்பாடாக இருந்து வந்ததாம். 

இந்த நிலையில், தைலாபுரம் மீண்டும் பழைய நிலைமை திரும்பியுள்ளதால், பெரிய டாக்டருக்கு ஆதரவாக நின்றவர்கள் தனித்துவிடப்பட்டுள்ளதாக்க் கூறப்படுகிறது. குறிப்பாக, ஜி.கே.மணி, பாமக அருள், போன்றோர் தங்களது அடுத்தகட்ட அரசியல் முடிவு குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருளுக்கு திமுக மற்றும் தவெக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்ததாகவும் கூறப்படும் நிலையில், தவெகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக்க் கூறப்படுகிறது. அன்புமணியின் வேண்டுகோளுக்குப் பிறகு அருளை தவெகவில் இணைப்பதில் தயக்கம் காட்டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருடன் தவெக அமைச்சர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. 

மேலும், ஜான் ஆரோக்கியசாமியும் அருளை கட்சியில் இணைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விரைவில் பனையூர் அலுவலகத்தில் அருள் தவெகவில் இணையலாம் என்றும், அவருடன் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow