தம்பியை தாக்கிய வழக்கு ... அமைச்சர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

தனது சொந்த தம்பி குடும்பத்தையே தாக்கியதாக தமிழக அமைச்சர் மரிய வில்சன் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கையை பெற நாளை(ஜூலை 04) புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Jul 3, 2026 - 18:30
Jul 3, 2026 - 18:04
தம்பியை தாக்கிய வழக்கு ... அமைச்சர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை எழில் நகரில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத்தி வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையில் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரிய வில்சன், 2022 ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி அன்று, மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட்டையும் தாக்கியதாக லாஸ்பேட் போலீஸார் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. 

அந்த புகாரின் அடிப்படையில் மரிய குளோத்தின் சகோதரரும், தற்போதைய தமிழக நிதித்துறை அமைச்சருமான மரிய வில்சன் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மரிய வில்சன் விசாரணைக்கு ஆஜராகாமல் அவ்வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் போன்றவை ஆதாரங்களாக இவ்வழக்கில் சேர்க்கப்பட, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு குற்றப்பத்திரிகையை லாஸ்பேட்டை போலீஸார் தாக்கல் செய்தனர். தற்போது மரிய வில்சன் தமிழகத்தின் நிதியமைச்சராக உள்ள நிலையில், நீதிமன்ற வாய்தாவிற்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். 

இந்நிலையில், இவ்வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில், குற்றப்பத்திரிக்கையை நேரில் ஆஜராகி பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜூலை 4-ம் தேதி புதுச்சேரி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகுமாறு உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சட்டமன்றத் தேர்தலின்போது ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரிய வில்சன் அறிவிக்கப்பட்ட சமயத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow