”கொளத்தூர்ல ஜெயிக்க முடில.. ஆனா பர்சேஸ் மட்டும் நடக்குது..” – அமைச்சர் சரமாரி கேள்வி..!

குதிரை பேரம் குற்றச்சாட்டு குறித்தும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது குறித்தும் பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், திமுகவிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

Jul 3, 2026 - 19:00
Jul 3, 2026 - 19:07
”கொளத்தூர்ல ஜெயிக்க முடில.. ஆனா பர்சேஸ் மட்டும் நடக்குது..” – அமைச்சர் சரமாரி கேள்வி..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “திமுகவும் திமுக சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் ஸ்டாலின் அவர்களும் மகன் உதயநிதி தூண்டுதலின் பேரில் தான் அனைத்து குதிரை பேரமும் நடைபெறுகிறது. அதற்கு ஆதாரத்துடன் இன்று பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

குதிரை பேரத்தின் மூலம் எங்களுடைய எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ண முயன்றது ஸ்டாலினும் அவருடைய உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி சார்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் பலர் அது மாதிரியான வேலைகளை செய்து வருகிறார்கள். 30 நாட்கள் தான் இந்த அரசு இருக்கும் என எந்த தைரியத்தில் ஸ்டாலின் சொன்னார்? ஸ்டாலின் 40 நாட்களில் மக்களின் நன்மதிப்பை பெற்று மாபெரும் தலைவராகிவிட்டாரா? ஐந்து வருடம் முதல்வராக இருந்த கொளத்தூர் தொகுதியிலே ஜெயிக்க முடியவில்லை. அஞ்சு வருஷம் உங்கள் மீது இருந்த நன்மதிப்புதான் கொளத்தூர் தொகுதியில் காட்டி விட்டார்கள். எங்கள் எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ணுவதை வைத்து தான் நீங்கள் 40 நாட்கள் என  சொன்னீர்களா

50 கோடிக்கு பேரம் பேசுவதை மனதில் வைத்துக்கொண்டு அந்த தைரியத்தில் மட்டும் தான் சொன்னார். அது நிச்சயமாக நடைபெறாது. எங்களுடைய எம்எல்ஏ அருகில் கூட நெருங்க முடியாது. நெருங்கினால் ஆதாரப்பூர்வமாக மாட்டுவார்கள். நாங்கள் எந்த குதிரை பேரத்திலும் ஈடுபடவும் மாட்டோம் அதற்கான தேவையும் இல்லை. இன்றைக்கு என்றாலும்  நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.

மக்கள் 100 சதவீதம் எங்களோடு இருக்கிறார்கள். ஸ்டாலினும் எடப்பாடியும் தான் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள் அது ஒரு காலத்திலும் நடக்காது” என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow