”அந்த” ரகசியம்.. எடப்பாடி பழனிசாமி கம்பி எண்ண வேண்டும்..! பரபரப்பை பற்ற வைக்கும் ஏ.வி.ராஜு..!
எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் தலைவராக இருந்த போது எவ்வளவு ஊழல் செய்தார் என்பதை வெளியிடட்டுமா?
எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து வைத்துள்ளார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு ரூ.100 கோடி என ரூ.4000 கோடி செலவழிக்க தயாராக உள்ளார் எனவும், அவரது ரகசியங்களை வெளியிட்டால் அவர் சிறை செல்ல வேண்டியிருக்கும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜு பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி.ராஜு கட்சி கொள்கையை மீறியதாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஏ.வி.ராஜு, சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில், எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்து வைத்துள்ளார்.எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு ரூ.100 கோடி என ரூ.4000 கோடி செலவழிக்க தயாராக உள்ளார். சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம், பல நூறு கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார்.
என்னிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.60 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டார். 300 சதுர அடி சொத்து வைத்திருந்த வெங்கடாச்சலம், தற்போது பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகர மாவட்ட செயலாளருக்கு ரூ.1000 கோடி சொத்து இருப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை பார்த்தால், எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பினாமியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
நான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ராஜினாமா கடிதம் கொடுத்தேன்.இதுவரை அது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. இவர் எப்படி பொதுச் செயலாளராக இருக்கிறார்? என்னை கட்சியில் இருந்து நீக்கும் முன் நோட்டீஸ் தர வேண்டும் என்ற அடிப்படை விதி கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது.
கட்சியின் சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருப்பது வேதனைக்குரியது.எடப்பாடி பழனிசாமி, பணத்தோடு வரும் முன்னாள் அமைச்சர்களை மட்டுமே சந்திக்கிறார்.அதிமுக தொண்டர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கியது போல அதிமுக மாவட்ட செயலாளர்கள் யாரையாவது 2 பேரை நீக்க முடியுமா? அப்படி நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவியே பறிபோய்விடும்.
எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் தலைவராக இருந்த போது எவ்வளவு ஊழல் செய்தார் என்பதை வெளியிடட்டுமா? பால் கடத்தல் செய்தது, நெய்யை கடத்தியது போன்ற ஊழல்களைச் செய்ததை சொல்லவா? எடப்பாடி பழனிசாமி பால் பண்ணை தலைவராக இருந்தபோது, நான் இயக்குனராக இருந்தேன். எனவே அவர் செய்த ஊழல் அனைத்தும் எனக்குத் தெரியும்" என்றும் ஏ.வி.ராஜு தெரிவித்தார்.
What's Your Reaction?