“இது யார் வீட்டுக் காசு சார்?” – மின்சார ஊழல் To 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் Purchase வரை... விஜய் அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் மின்வெட்டு ஒருபக்கம்... ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 வரை கொடுத்து வாங்கும் விவகாரம் மறுபக்கம். இந்தச் சூழலில், தவெக அரசைச் சரமாரியாக விமர்சித்திருக்கிறார் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.

Oct 13, 2026 - 17:30
“இது யார் வீட்டுக் காசு சார்?” – மின்சார ஊழல் To 15 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் Purchase வரை... விஜய் அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் மின்வெட்டு அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 வரை கொடுத்து வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், விலைவாசி உயர்வே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் கூறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மின்வெட்டு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல மாதங்களாகவே எச்சரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், அப்போதே அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காரணம் காட்டுவதாகவும், முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாகவும் விமர்சித்த அவர், கடைசி நேரத்தில் அவசரமாக அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக ஆட்சியில் குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவதற்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், தற்போது அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதுதான் தவெக அரசு கொண்டுவந்த மாற்றமா என்றும் சாடியுள்ளார்.

“அதிமுகவில் இருந்து 15 பேரை வாங்கப் பணம் வேண்டுமா?”

ஸ்டாலினின் விமர்சனத்தில் அரசியல் ரீதியாகக் கவனத்தை ஈர்த்திருப்பது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான குற்றச்சாட்டுதான்.

அதிமுகவிலிருந்து மேலும் 15 பேரை வாங்கப்போவதாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான பணத்தைத் திரட்டுவதற்காகத்தான் மின்சாரக் கொள்முதலில் ஊழல் நடக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழுவதாகத் தெரிவித்துள்ளார்.

“இது யார் வீட்டுக் காசு சார்?” என்ற அவரது கேள்வி, மின்சாரக் கொள்முதல் விவகாரத்தைத் தாண்டி, தவெக அரசின் செலவினங்கள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்த விவாதத்தையும் முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

விவசாயிகள் பிரச்சினையையும் கையில் எடுத்த ஸ்டாலின்!

மின்சார விவகாரத்துடன் நிற்காமல், டெல்டா விவசாயிகளின் நிலை குறித்தும் ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமல் மேட்டூர் அணையைத் திறந்ததாகக் குற்றம்சாட்டிய அவர், அணை திறப்பு முடிவில் ஜோதிடரின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும், ”5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்”என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

“முதலமைச்சர் ஊர் ஊராகச் செல்கிறார்... ஆட்சி நிர்வாகம் என்னவாகிறது?”

விஜய்யின் பயணங்களையும் ஸ்டாலின் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

”வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. உடுப்பி, லண்டன், விஜயவாடா எனத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலேயே முதலமைச்சர் கவனம் செலுத்துகிறார்” என்று குற்றம்சாட்டிய அவர், மாநிலத்தின் அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக அமைச்சரவையின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், திட்டமிடல் இல்லாத நிர்வாகத்தால் தமிழ்நாடு பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், மின்சாரக் கொள்முதல் விலை, விலைவாசி உயர்வு, விவசாயிகளின் பிரச்சினைகள், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான அரசியல் குற்றச்சாட்டு எனப் பல விவகாரங்களை இணைத்து தவெக அரசைச் சாடியிருக்கிறார் ஸ்டாலின்.

ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.35 வரை உயர்ந்திருக்கும் நிலையில், இந்தக் கொள்முதல் ஏன் அவசியமானது, அதன் செலவுக் கணக்கு என்ன, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதுதான் இப்போது அரசியல் களத்தில் எழுந்துள்ள முக்கியக் கேள்விகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow