நடிகை குஷ்புவை கண்டித்து போராட்டம்... உருவபொம்மை எரிப்பு... திமுக மகளிர் அணியினர் ஆவேசம்...
மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கொச்சைப்படுத்திய நடிகை குஷ்புவை கண்டித்து பூவிருந்தவல்லியில் திமுக மகளிர் அணி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமான கலைஞர் உரிமைத் தொகை திட்டம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மகளிருக்கு ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டளித்து விடுவார்கள் என திமுக எண்ணி விட்டதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ தெரிவித்திருந்தார். குஷ்பூவின் இந்த கருத்துக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னை பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கத்தில், திமுக மகளிர் அணியினர் குஷ்பூவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உருப்படம் மற்றும் பொம்மையை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும், எரித்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் உரிமைத் தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்தனர். திமுக மகளிர் அணியினரின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
What's Your Reaction?






