Aadujeevitham: 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் ஆடுஜீவிதம்!
மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி பிருத்விராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னை: மலையாளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆடுஜீவிதம் திரைப்படம் ரிலீஸான நாள் முதல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆடுஜீவிதம் என்ற நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. அதேநேரம் ஆடுஜீவிதம் நாவலோ நஜிப் என்பவரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குடும்ப வறுமை காரணமாக அரபு நாட்டிற்கு வேலைக்குச் செல்லும் நஜீப், பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலை பார்க்க நேரிடுகிறது. அங்கே அடிமையாக பல இன்னல்களை சந்திக்கும் நஜீப் எப்படி சொந்த ஊர் திரும்புகிறார் என்பதே ஆடுஜீவிதம் கதையாகும். நாவலாகவே ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையானது ஆடுஜீவிதம். அதனால் இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளாக உருவாகி வந்த ஆடுஜீவிதம் ஒருவழியாக கடந்த வாரம் திரைக்கு வந்தது.
ஆடுஜீவிதம் படம் பார்த்த ரசிகர்கள் பிருத்விராஜ்ஜின் நடிப்புக்கு கண்டிப்பாக பல விருதுகள் கிடைக்கும் என பாராட்டினர். அதேபோல், ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம், சுனிலின் சினிமோட்டோகிராபி என டெக்னிக்கலாகவும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். இதனால் வேர்ல்ட்வைட் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியது ஆடுஜீவிதம். அதன்படி இந்தப் படம் 5 நாட்களில் 75 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது மலையாள திரையுலகில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஆடுஜீவிதம் படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு ஹீரோ பிருத்விராஜ் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தாண்டு வெளியான மலையாள படங்களான பிரேமலு 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், மஞ்சும்மல் பாய்ஸ் 200 கோடியை கடந்தும் வசூல் செய்தன. அதனைத் தொடர்ந்து ஆடுஜீவிதம் படமும் விரைவில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?