பிறவிப் பயனைத் தரும்...பஞ்ச மயானத் தலங்கள்!
சிவபெருமானுக்கு உரிய பஞ்ச மயானத் தலங்களான கச்சி மயானம், காழி மயானம், வீழி மயானம், நாலூர் மயானம், கடவூர் மயானம் ஆகிய புனித கோயில்களின் வரலாறு மற்றும் ஆன்மிக சிறப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
ஆலய உலா..! - வி.ராம்ஜி
ஆன்மிகத்தில் ஐந்து, ஏழு, ஒன்பது முதலான எண்கள் வலிமைமிக்கவையாக பார்க்கப்படுகின்றன. இறைவனைப் போற்றி தியாகப்பிரம்மம் பாடி பஞ்சரத்ன கீர்த்தனை என்பதும் மிகப்பிரபலம். இதேபோல், சப்தவிடங்க தலங்கள், சப்த ஸ்தான தலங்கள், நவதிருப்பதிகள், நவ கயிலாயக் கோயில்கல், நவக்கிரகக்கோயில்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. நமசிவாயம் ஐந்தெழுந்து மந்திரக்காரரான சிவபெருமானுக்கு பஞ்ச மயானத் தலங்கள் இருப்பதாக ஆச்சார்யர்கள் வியப்புடன் சொல்கிறார்கள்.
சுடுகாட்டுச்சித்தன் என்று வணங்கப்படும் சிவபெருமானுக்கு மயானம் என்று சொல்கிற கோயில்கள் இருப்பதில் வியப்பேதுமில்லைதான். கிராம தெய்வ வழிபாடுகளில் மயானக்கொல்லை எனும் வைபவம், வெகு பிரசித்தம். மயானக்கொல்லை குறித்த விவரங்கள் நாட்டார் தெய்வங்கள் நூலில் மறைந்தும் மறையாத எழுத்தாளர் தொ.ப. என்று அழைக்கப்படும் தொ.பரமசிவன் குறிப்பிட்டிருக்கிறார்.
மயானம் என்பதை சுடுகாடு என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மயானம் என்பது அமைதி. ஒரு ஆத்மா, இகவாழ்க்கையில் ஏகப்பட்ட அல்லாட்டங்களையும் ஆசைகளையும் கொண்டு ‘அது கிடைக்கணுமே... இது கிடைக்கலையே...’ என்று போராடிக்கொண்டே இருந்தது. அந்த ஆத்மா, தன் மூச்சினை நிறுத்திக் கொண்டதும், ஒரு அமைதி கிடைத்துவிடுகிறது.
மயானம் என்றால் அமைதி என்று அர்த்தம். நிறைவு என்று பொருள். ஆனால் நாம் ‘நடு செண்டர்’ என்பது போல், மயான அமைதி என சொல்லிக்கொண்டிருக்கிறோம். ‘ஆத்மா அமைதி அடைய பிரார்த்தனைகள்’ என்று இரங்கல் தெரிவிக்கிறோம். இன்னும் வேகமாக, Rest in Peace என்பதை, RIP என்று சுருக்கிச் சொல்லிவிட்டு, அடுத்த வேலைக்குப் போடுகிறோம். ஆக, மயானத்தலங்களில் ஐந்தெழுத்து மந்திரம் கொண்ட சிவனாருக்கு ஐந்து கோயில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அழிவு, ஒடுக்கம், ஞானம், முக்தி, மீண்டும் ஜனனம் என்பதுதான் உலகச் சுழற்சியின் அடிப்படை என்கிறது சைவ சித்தாந்தம். இந்த தத்துவங்களைக் கொண்டே வழிபாடுகள், பூஜைகள், விரதங்கள், தலங்கள், விருட்சங்கள், நேர்த்திக்கடன்கள் எல்லாமே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன; கடைபிடிக்கப்படுகின்றன.
சரி... பஞ்ச மயானத் தலங்களைத் தரிசிப்போமா?
காஞ்சிபுரத்தை ‘நகரேஷுகாஞ்சி’ என்றுதான் விவரிக்கிறது காஞ்சிபுராணம். அதாவது நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று அர்த்தம். காஞ்சியை, கச்சி மயானம் என்றும் அழைப்பார்கள். காஞ்சிபுரத்தில் ஒரு தெருவுக்குள் நுழைந்தால் கோயில்; அடுத்தத் தெருவைத் தொட்டால் இன்னொரு கோயில் என்றிருக்கும் அற்புத பூமி! சாக்தம் எனப்படும் சக்தி வழிபாட்டுக்கு காமாட்சி அம்பாள் கோயில், வைஷ்ணவ வழிபாட்டுக்கு வரதராஜர் கோயில் என அமைந்துள்ளது.
அவ்வளவு ஏன்... சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்றே இருக்கிறது. இங்குதான், சிவ காஞ்சி தலமாக, கச்சி மயானத் தலமாக அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில். இங்கே சிவனாரின் திருநாமம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கச்சி மயானேஸ்வரர். இங்கே உள்ள தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம் என போற்றப்படுகிறது.
பண்டாசுரன் எனும் அரக்கன். இவனை ஒடுக்கி அழிப்பதற்காக, வேள்வித்தீயில் இருந்து சிவனார் வெளிப்பட்டு, அழித்தொழித்தார் என்கிறது ஸ்தல புராணம். பிரமாண்டமான அந்த வேள்வித்தீயில் தேவர்கள், பிரம்மா, முனிவர் பெருமக்கள் கூட, ஒடுங்கிபோனார்கள் என்றும் பண்டாசுரனை அழித்ததும் தேவர்கள் முதலானவர்களை அவர்களை தீயிலிருந்து வெளிக்கொண்டு வந்ததாகவும் சொல்கிறது சிவபுராணம்! அந்த வேள்வித்தீயில் இருந்து சிவலிங்கத் திருமேனி வெளிப்பட்டது என்றும் அதுவே மயான லிங்கம் என்றும் வணங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்!
பாடல் பெற்ற தலம், வைப்புத்தலம் என்றும் பிரித்துச் சொல்லுவார்கள். அப்பர் பெருமான் தேவாரம் பாடிய வைப்புத்தலம் எனும் பெருமையும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு உண்டு. அதில் கச்சி மயானம் என்று காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் குறித்து பாடிப் பரவசமாயிருக்கிறார் அப்பர் பெருமான்! பிரமாண்டமான கோயிலை வலம் வந்துவிட்டு, ஏகாம்பரேஸ்வரரை தரிசித்தால் முக்தி நிச்சயம் எனும் வழக்கமும் இங்கே உள்ளது!
அடுத்து... காழி மயானம் தலத்தைப் பார்ப்போம்!
மயிலாடுதுறையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி எனும் புண்ணியத் திருத்தலம். உமையவளே அன்னையாக வந்து, சிறுவன் ஞானசம்பந்தருக்கு பாலூற்றி, பசியாற்றிய தலம் இது. ஞானசம்பந்தர் அவதரித்த புனித பூமி எனும் பெருமையும் சீர்காழி தலத்துக்கு உண்டு.
பஞ்ச மயானத் தலங்களில் இதுவும் ஒன்று. இதை காழி மயானம் என்கிறார்கள். காழி என்றும் சீர்காழி என்றும் ஆதியில் வழங்கப்பட்ட பன்னெடுங்கால ஊர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். இங்கே ஞானசம்பந்தருக்கு பாலூட்டிய அம்பிகையின் திருநாமம் பெரியநாயகி. சிவனுக்கு ஏராளமான திருநாமங்கள்... பிரம்மபுரீஸ்வரர், சட்டநாதர், தோணியப்பர் என்றெல்லாம் சிவனார் அழைக்கப்படுகிறார்.
பிரளய காலம், உலகின் அழிவுக்கான தருணம். பல ஊர்களும் மனிதர்களும் அழிந்த நிலையில், காழி என்றும் சீர்காழி என்றும் அழைக்கப்படுகிற கிராமம், ஒரு தோணி மீது வைத்துக் காத்தருளினார் சிவபெருமான் என்பதால் தோணியப்பர் எனும் திருநாமம் அமைந்தது.
பிள்ளைச் செல்வம் வேண்டும், தங்கள் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும், பரம்பரை வம்சம்வம்சமாகச் செழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்பவர்கள், சீர்காழி தலத்துக்கு வந்து காழி மயானத் தலத்தின் இறைவனை வேண்டிக்கொண்டால், வம்சம் தழைக்கும்; பித்ருக்கடன் எனும் மூத்தோருக்கான கடமைகள் தடையின்றி செய்ய வாரிசு கிடைக்கும். நாம் மட்டுமின்றி நம் முன்னோர்களுக்கும் முக்தி கிடைக்கும் என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள்!
இதையடுத்து மூன்றாவது வீழி மயானத் திருத்தலம்!
திருவாரூருக்கு அருகிலும் கும்பகோணத்துக்கு அருகிலும் இருக்கிற திருத்தலம்தான் திருவீழிமிழலை எனும் மிக அருமையான க்ஷேத்திரம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகாமாட்சி அன்னை. சிவனாரின் திருநாமம் ஸ்ரீவீழி மயானேஸ்வரர்.
சங்காரம் எனப்படும் ஊழிக்காலத்தில் தொடர்பு கொண்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. சொல்லப்போனால், கும்பகோணம் மற்றும் திருவாரூர் முதலான ஊர்களைச் சுற்றி இப்படியான ஊழித் தொடர்பு கொண்ட ஆலயங்களை ஸ்தல புராணங்களின் மூலமாக அறியலாம். ஊழிக்காலத்தில், மொத்த உலகத்தையும் அண்டசராசரத்தையும் தன்னுள் ஒடுக்கிக்காத்தார் சிவபெருமான்.
இதன் பொருட்டு, மகாவிஷ்ணு ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு சிவார்ச்சனை செய்து பூஜித்தார். ஆனால் 999 மலர்கள் மட்டுமே இருந்தனவாம்! மீதம் ஒருமலர் இல்லையே என வருந்திய மகாவிஷ்ணு, தன் கண்ணையே ஒரு தாமரை மலருக்கு இணையாக எடுத்து அர்ப்பணித்தார் என்று திருவீழிமிழலை ஸ்தல புராணம், சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இதையடுத்து மகாவிஷ்ணுவுக்கு சுதர்சனம் எனும் வீரியமிக்க சக்கரத்தை சிவபெருமான் வழங்கினார் என்று புராணம் விவரிக்கிறது.
ஞானசம்பந்தரும் அப்பர் பெருமானும் தேவாரம் பாடிய திருத்தலம் இது. பஞ்ச மயானத் தலங்களில் வீழி மயானம் என்று இதைச் சொல்கிறார்கள். இங்கு வந்து வேண்டிக்கொண்டால், உலகைக் காத்த சிவனார், உலகைக்காண நம் கண்களையும் காத்தருளுவார். நம் கண்களுக்கு ஒளியூட்டி அருளுவார். பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் வணங்கவேண்டிய தலம் என்று இந்தக் கோயிலைக் கொண்டாடுகிறார்கள் சிவனடியார்கள்! நான்காவதாக நாலூர் என்றும் திருமெய்ஞ்ஞானம் என்றும் சொல்லுகிற தலத்தைத் தரிசிப்போம். இதை நாலூர் மயானம் என்கிறார்கள்.
கோயில் நகரம் என்றால் அது கும்பகோணம்தான். கும்பகோணத்தில் உள்ள கோயில்களையும் அதனைச் சுற்றியுள்ள ஆலயங்களையும் தரிசிக்க இந்தவொரு பிறவி போதாது என்பார்கள். கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வந்தால் அங்கே சிவாலயமும் உள்ளது; பெருமாள் கோயிலும் அமைந்திருக்கிறது. அதேபோல் அடுத்து வந்தால், குடவாசல் சிவன்கோயில் வெகு பிரசித்தம். இதையடுத்து பயணித்தால், நாலூர் எனும் கிராமம் வரும். இப்போது இந்த ஊருக்கு திருமெய்ஞ்ஞானம் என்று பெயர்.
ஞானம், மெய்ஞானம் என்றெல்லாம் ஊரின் பெயரைக் கொண்டிருக்கும்போதே, இது ஞானத்தையும் மெய்ஞானத்தையும் தருகிற தலம் என்பது தெரிந்திருக்கும். கோயிலின் நாயகனான சிவனாருக்கு ஸ்ரீஞானபரமேஸ்வரர் என்று திருநாமம். பலாசவன நாதர் என்றும் திருநாமம் உண்டு. இங்கே உள்ள தீர்த்தம் கூட ஞானதீர்த்தம் என்றுதான் அழைக்கப்படுகிறது.
அசுரன் என்றால் பூதம் போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அரக்கன் என்றால் எண்ணற்ற கரங்களைக்கொண்டவன் என்றும் ஏராளமான தலைகள் கொண்டவன் என்பதுமாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அரக்கனுக்கான உருவத்தை புராணங்கள் அப்படி உருவக்கப்படுத்தி, கெட்டவனின் துர்குணங்களை வெளிப்படுத்துவதற்காக இப்படியெல்லாம் சொல்லிவைக்கப்பட்டதாக ஆச்சார்யர்கள் விவரிக்கிறார்கள். அரக்கர்கள் என்றால் அடுத்தவர் நலன் குறித்து சிந்திக்காதவர்கள் என்று அர்த்தம். அவர்களையெல்லாம் கொடுமைப்படுத்தி, அவர்களின் கண்ணீரில் இன்பத்தை நாடுபவர்கள் என்று பொருள்.
பலாசுரன் எனும் அரக்கன், மக்களைத் துன்புறுத்தி வந்தான். அவனை அழித்து சிவபெருமான் மக்களையும் ஊரையும் காத்தருளினார் என்பது ஒருபக்கம்... பலாமரங்கள் கொண்ட வனத்தில் சிவலிங்கத்திருமேனியராக ஈசன் திருக்காட்சி தந்தார் என்றும் இன்னொரு பக்கம் சொல்கிற ஸ்தல புராணமும் இருக்கிறது.
சோழர்கள் காலத்தில் கோயில் கட்டுமானங்களில் இரண்டு வகையிலான கட்டமைப்புகள் பிரபலம். மாடக்கோயில்கள் என்பதும் கஜப்பிருஷ்ட விமானம் கொண்ட கருவறை என்பதும் அவற்றில் முக்கியமானவை. கஜம் என்றால் யானை. பிருஷ்டம் என்றால் பின்பகுதி. அதாவது கோயிலில் இறைவன் குடிகொண்டிருக்கும் விமானமானது, கஜப்பிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்!
இந்தப் பிறவியில் நமக்கு கண் முன்னே இருக்கும் எதிரிகள், கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் என்றெல்லாம் இருப்பார்கள். அவ்வளவு ஏன்... ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது போல், நாமே நமக்கு எதிரியாக இருந்து, பாவங்களைச் செய்வோம்; தவறான பாதைகளில் பயணிப்போம். அடுத்தவரைக் கெடுத்து அதில் இன்பம் காணும் குணம் குன்றியவர்களாக இருப்போம்.
திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பட்ட இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால், இந்த இப்பிறவியில் நாம் செய்த பாவங்களும் எதிரிகள் தொல்லைகளும் ஒழியும் என்பது ஐதீகம்!
ஐந்தாவதாக... கடவூர் மயானம் என்கிற திருக்கடவூர்!
மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூருக்கு நிறைய பேருந்துகள் இருக்கின்றன. சொல்லப்போனால்,’ஆயிரமானாலும் மாயூரம் ஆகுமா’ என்கிற மயிலாடுதுறையில் இறங்கி. திருக்கடவூர் என்கிற திருக்கடையூர் தலத்துக்குச் செல்லும் பக்தர்கள்தான் ஏராளம்!
திருக்கடையூர் என்றதும் அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் செய்துகொள்ளும் தலம் என்பதெல்லாம் நம் கண் முன்னே நிழலாடும்! அத்தகைய ஒப்பற்ற தலம்தான் திருக்கடையூர். அமிர்தகடேஸ்வரர் என்பது ஸ்வாமியின் திருநாமம். இந்தக் கோயிலுக்கு அருகில் ஆதிகடவூர், ஆதிகடையூர், திருமயானம், திருமெய்ஞ்ஞானம் என்றெல்லாம் சொல்லப்படுகிற கோயிலும் இருக்கிறது.
சிவனாருக்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்று திருநாமம். அம்பிகைக்கு மலர்க்குழல் மின்னம்மை என்று திருநாமம். கோயிலின் தீர்த்தம் காசி தீர்த்தம் எனப் போற்றப்படுகிறது. தமிழகத்தில் உள்ள புண்ணிய க்ஷேத்திரங்களில் மிகத் தொன்மையான, நல்ல அதிர்வுகள் கொண்ட தலம் என்று கொண்டாப்படுகிறது இந்தக் கோயில்.
பிரம்மாவின் கர்வத்தை ஒடுக்குவதற்காக, பிரம்மாவின் சிரசில் ஒன்றைக் கொய்தார். படைப்புத்தொழிலையும் பிடுங்கினார். இதனால், உலகில் படைப்புமில்லாத, இறப்புமில்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மனமிரங்கிய சிவபெருமான், பிரம்மாவுக்கு விமோசனம் அளித்து, படைப்புத் தொழிலை வழங்கினார். ஸ்தம்பித்த உலகம் மீண்டும் இயங்கியது. இயல்புநிலைக்கு வந்தது.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் என மூவராலும் தேவாரம் பாடப்பட்ட திருத்தலம் இது. மார்க்கண்டேயனை என்றும் பதினாறு ஆக்கி, நீண்ட ஆயுளுடன் வாழவைத்த புராணத் தொடர்பு கொண்ட பூமி இது. அதனால் இளம் வயதில் திருமணம் செய்துகொண்டவர்கள் சஷ்டியப்த பூர்த்தி எனும் அறுபதாம் கல்யாணத்தையும் பீமரத சாந்தி எனும் எழுபதாம் திருமண வைபவத்தையும் சதாபிஷேகம் எனும் எண்பதாம் கல்யாண புண்ணிய வைபவத்தையும் இங்கே நடத்திப் பிரார்த்தனை செய்துகொண்டால், பிறவியின் முழுப்பயனைப் பெறலாம் என்பது ஐதீகம்!
மனிதப் பிறவி எடுத்து உலவிக்கொண்டிருக்கும் இந்த உலகில், இப்பிறவியில் ஒருமுறையேனும் இந்த ஐந்து மயானத் தலங்களுக்கும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ... அப்போது சென்று தரிசித்தால், முன் ஜென்மப் பிறவியில் செய்த பாவங்களும் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களும் தொலையும் என்பதும் அடுத்த பிறவி இல்லாமல்,பிறப்பை பூர்த்தி செய்துகொள்ள சிவனார் அருளுவார் என்றும் சொல்லிப் பூரிக்கிறார்கள் சிவனடியார்கள்!
சிவகடாட்சம்... சிவகடாட்சம்... சிவகடாட்சம்!
What's Your Reaction?