நாகதோஷம் போக்கும் திருவேற்காடு....கருணையே உருவான கருமாரி!

திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலின் ஸ்தல புராணம், சுயம்பு மூர்த்தி சிறப்பு மற்றும் பக்தர்கள் நம்பும் வழிபாட்டு பலன்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Sep 22, 2026 - 07:00
நாகதோஷம் போக்கும் திருவேற்காடு....கருணையே உருவான கருமாரி!
Thiruverkadu Karumariamman

பலன் தரும் பரிகாரம்: - வி.ராம்ஜி

சூரனை அழிக்க முருக்கடவுளுக்கு அன்னை பார்வதிதேவி வேல் கொடுத்ததாகச் சொல்கிறது புராணம். அப்படி வேல் தந்த தலம் என்று நாகைக்கு அருகில் உள்ள சிக்கல் திருத்தலம் போற்றப்படுகிறது. ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்கிற வார்த்தையே மிகப்பிரபலம். ஆனாலும் திருவேற்காடு திருத்தலமும் ‘வேல் வழங்கிய தலம்’ என்று ஸ்தல புராணம் விவரிக்கிறது. இதனால்தான் வேல் வழங்கிய காடு என்றும் அதுவே வேற்காடு என்றும் மருவியதாகச் சொல்லுவார்கள்.

வேலமரங்கள் நிறைந்த காடு என்பதால் வேற்காடு என்று பெயர் அமைந்ததாகவும் சொல்லுவார்கள். எது எப்படியோ... மதுரை மீனாட்சி போல், காஞ்சி காமாட்சி போல், திருவேற்காடு கருமாரியம்மனும் கருணையே உருவெனக்கொண்டு அகிலத்தையே காக்கும் ஒப்பற்ற தெய்வமாக இங்கே திருக்காட்சி தருகிறாள்.

சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டால் சர்ப்பதோஷமெல்லாம் விலகும் என்பது ஐதீகம். இங்கே நாக வடிவில் புற்றில் இருந்து வெளிப்பட்டாள் கருமாரியம்மன். சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினாள். ஆகவே திருவேற்காட்டின் கருமாரி அன்னையை, கண்ணாரத் தரிசித்து மனதார வழிபட்டால், தடைப்பட்ட மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும் என்கிறார்கள் பக்தர்கள்.

பொதுவாக, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அம்மன் கோயில்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்; தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். இங்கே திருவேற்காடு தலத்தில், ஞாயிற்றுக்கிழமையும் எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள். ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளவர்களும் ஜாதகத்தில் சூரிய ஆதிக்கமும் சூரிய பலமும் கிடைப்பதற்காகவும் ஞாயிற்றுக்கிழமைகளில், கருமாரியைத் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

சூரிய பகவான், தனக்கு நேர்ந்த தோஷத்தைப் போக்கிக் கொள்வதற்காக, இந்தத் தலத்தில் அம்மனை நோக்கி தவமிருந்து வரம் பெற்று, தோஷ நிவர்த்தியை அடைந்தார் என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.

தமிழகத்தின் தொன்மை மிக்க ஆலயங்களில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலும் உண்டு. இங்கே சுயம்புவாகத் தோன்றியவள் என்பதால், அம்மனுக்கு சக்தியும் சாந்நித்தியமும் அளப்பரியதாக அமைந்திருக்கிறது என்பது கூடுதல் விசேஷம். கருவறையில் சுயம்பு அம்மனாக இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சுபிட்சத்தை அள்ளித் தருகிறாள் கருமாரி அன்னை!

இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் வேப்பமரம். அம்மனின் அடையாளங்களில் ஒன்று வேம்பு விருட்சமெனத் திகழும் திருவேற்காடு, சமயபுரம் மாரியம்மன் போல் ஒப்பற்ற தெய்வமாகவே போற்றி வணங்குகிறார்கள் பக்தர்கள்.

செவ்வாய் தோஷத்தைப் போக்கி அருளுவாள் என்பதால் செவ்வாய்க்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனுக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்கிறார்கள். அதேபோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கிக் காத்தருளுவாள் என்றும் தீராத நோய்களையெல்லாம் போக்கி ஆரோக்கியத்துடன் வாழச் செய்வாள் என்றும் திருவேற்காடு திருத்தலத்தைச் சொல்லி சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்.

அம்மனுக்கு புடவையும் வளையலும் சார்த்தி வேண்டிக்கொண்டால், திருமண பாக்கியம் விரைவில் நடந்தேறும். அதேபோல், செவ்வரளி முதலான செந்நிற மலர்கள் சார்த்தி பிரார்த்தனைகள் செய்துவந்தால்,குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும். பிரிந்த கணவன் மனைவி ஒன்றுசேருவார்கள் என்பது திருவேற்காடு கருமாரியம்மன் திருக்கோயில் சிறப்புகளில் ஒன்று எனக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.

திருவேற்காடு வந்தால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் சொல்லுகின்ற சத்தியவார்த்தை!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow