ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாதம் திருப்பதி போறீங்களா?.. ஆன்லைன் தரிசன டிக்கெட் ரிலீஸ் - முழு விபரம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்ஜித சேவைகளுக்கான ஆகஸ்ட் மாத தரிசன டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு வரும் 18ம்தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியாகிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரியும் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தினசரியும் இலவச தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விரைவு தரிசனத்திற்காக கட்டண சேவைக்காக பக்தர்கள் 4 மாதங்களுக்கு முன்பிருந்தே ஆன்லைன் மூலம் புக் செய்து செல்வார்கள்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஆர்ஜித சேவைக்கான தரிசன டிக்கெட் வரும் 18ஆம் தேதி முதல் தேவஸ்தான இணைய தள பக்கத்தில் வெளியாகிறது.
இந்த சேவை டிக்கெட்டுகளில் குலுக்கல் மூலம் தேர்வு செய்யும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்டவற்றுக்கு 18ம்தேதி காலை 10 மணி முதல் தொடங்கி மே 20ம்தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்தெடுக்கப்படுபவர்கள் வரும் 20ம்தேதி முதல் 22ம் மதியம் 12 மணி வரை முன் பணம் செலுத்தியவர்களுக்கு குலுக்கலில் தேர்தெடுக்கப்பட்ட டிக்கெட் வழங்கப்படும்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 17ஆம்தேதி வரை நடைபெறும் பவித்திர உற்சவத்திற்குரிய டிக்கெட் மே 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இதேபோல் கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளில் நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்யும் விர்சூவல் சேவைகளுக்கான டிக்கெட் மே 21ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ஆகஸ்ட் மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் வரும் 23ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் டிக்கெட் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆகஸ்ட் மாதத்திற்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் வரும் 23ம்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும்.
ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வரும் 24ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். திருமலை-திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் அறைகள் முன்பதிவு செய்ய வரும் 24ம்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை-திருப்பதியில் ஸ்ரீவாரி சேவா தன்னார்வ சேவைக்கு வரும் 27ம்தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவைக்கு மதியம் 12 மணிக்கும், உண்டியல் காணிக்கை எண்ணும் பரக்காமணி சேவைக்கு மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும். எனவே தேவஸ்தான இணையதளம் மூலம் ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?