Reporter Special: நால்வர் வளையத்தில் முதல்வர் விஜய்..? தடுமாறும் ஐஏஎஸ் & ஐபிஎஸ் அதிகாரிகள்..!

கடந்த மே 10ம் தேதி முதல்வராக பதவியேற்ற விஜய், 'எனது ஆட்சியில் பவர் சென்டரே கிடையாது. நான் மட்டுமே பவர் சென்டர்' என நரம்பு புடைக்க முழங்கினார். ஆனால், புதிய ஆட்சி பதவியேற்று ஒரு மாதத்துக்குள்ளாகவே, முதல்வரைச் சுற்றி நான்கு பேர் பவர் சென்டர்களாக தலைமைச் செயலகத்தை ஆக்கிரமித்து, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.கள் உட்பட ஒட்டுமொத்த தலைமைச் செயலகத்தையுமே அவர்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுதான் ஹாட் டாபிக்!

Reporter Special: நால்வர் வளையத்தில் முதல்வர் விஜய்..? தடுமாறும் ஐஏஎஸ் & ஐபிஎஸ் அதிகாரிகள்..!

முதல்வர் விஜய்யைச் சுற்றி என்ன நடக்கிறது? ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். 1967ல் இருந்தே முதல்வர்களின் நடவடிக்கைகளை பார்த்துவருகிறோம். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு முதல்வர்களும் தங்கள் ஆட்சிக்காலத்தில் தங்களுடைய தனிப்பட்ட உதவியாளர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துவந்தது கிடையாது. அரசு அதிகாரியாக்கி, தனி அறைகள் ஒதுக்கி, கூடவே வைத்துக்கொண்டது கிடையாது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரின் தனிப்பட்ட உதவியாளர்கள் யாரும் தலைமைச்  1969-1976, 1989-1991, 1996-2001, 2006-2011 ஆகிய ஐந்து ஆட்சிக்காலங்களிலும் அரசு அலுவலராக இல்லாத ஒருவரைகூட கருணாநிதி தனது பணியாளராக அரசு சம்பளத்தில் நியமனம் செய்ததில்லை.

2006 ஆட்சிக்காலத்தில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் அமர்ந்து தலைமைச் செயலகம் வந்தபோதுதான், நித்தியானந்தம் என்கிற நித்யா என்பவர் உதவியாளராக தலைமைச் செயலகம் வந்திருக்கிறார். அப்போதுகூட முதலமைச்சர் அறையில் நித்யா தென்பட மாட்டார்.

அதற்கு முன்பாகவும் பின்பாகவும் 1991-1996 மற்றும் 2001-2006, 2011-2016 வரை முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, தனது தனிப்பட்ட உதவியாளராக ஒருவரைக்கூட தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்ததே இல்லை. சசிகலா அவ்வளவு நெருக்கமாக இருந்தபோதும், அவரை தலைமைச் செயலகம் வரவழைத்தது இல்லை ஜெயலலிதா.

எடப்பாடி பழனிசாமி 2017-2021 வரை முதலமைச்சராக இருந்தபோது அருண் என்பவரை உதவியாளராக வைத்திருந்தார். அவருக்கும் தனி அலுவலக அறை என்று தலைமைச் செயலகத்தில் ஒதுக்கப்படவில்லை. 2021-2026ல் முதல்வராக இருந்த மு..ஸ்டாலினின் தனி உதவியாளரான தினேஷுக்கும் அப்படியே.

நான்கு பேர் வளையத்தில் முதல்வர்!

ஆனால் முதல்வர் விஜய் அரசு அலுவலர்களாக இல்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணுரெட்டி, ஜெகதீஷ் ராம் குமார் ஆகிய நான்கு பேர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்து கொடுத்து, கோட்டையில் அமர வைத்திருப்பதுதான் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சலாம் போடும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்.கள்!

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே, பிறகு பா.ம.க. அன்புமணி. அ.தி.மு.க. வேலுமணி ஆகியோருக்காக பணியாற்றியவர் ஜான் ஆரோக்கியசாமி. 2023 வாக்கில் விஜய்க்கு அறிமுகமாகி, தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை ஏற்றார் ஜான். விஜய்க்கு இருந்த தனிப்பட்ட சினிமா செல்வாக்கு, 2026ல் அவரை முதல்வராக்கியது.

தேர்தல் வியூக வகுப்பாளரின் பணி என்பது. தேர்தல் முடிந்தவுடன் நிறைவடைந்துவிடும். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் கிளம்பிவிட்டார். அவரை கூப்பிட்டு வைத்து அரசு பதவி கொடுக்கவில்லை ஸ்டாலின். மாறாக விஜய் முதல்வரான பிறகு ஜானுக்கு முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்கிற அரசுப் பதவி வழங்கப்பட்டு, முதல்வர் அறைக்கு அருகிலேயே அமரவைக்கப்பட்டுள்ளார். இதனால், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், பன்னாட்டு தொழிலதிபர்கள், மத்திய அரசு அதிகாரிகள் என அனைத்து வி.ஐ.பிக்களும் அவருக்கும் சலாம் போட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

'மக்களின் தீர்ப்பை ஏற்று முதல்வருக்கு மரியாதை செலுத்துவது எங்கள் கடமை ஆனால், அவரின் நண்பர்களுக்கு எல்லாம் மரியாதை செலுத்துவதும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய சூழல் உருவாகியிருப்பதும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் பதவிகளுக்குரிய மாண்பையே கேள்விக்குறியாக்குகிறது என்று உயரதிகாரிகள் வேதனைப்படுவதையும் கேட்க முடிகிறது.

 நெளியும் அதிகாரிகள்!

விஜய்யின் கல்லூரி நண்பரும் தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டிக்கும் பொது நிகழ்வு ஆலோசகர் என்ற அரசுப் பதவி வழங்கப்பட்டு, முதல்வர் அறைக்குப் பக்கத்திலேயே அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஆட்சி அமைக்க அனுமதி கோரி ஆளுநரை விஜய் முதல்முறையாக சந்தித்தபோதே விஷ்ணு ரெட்டியும் உடனிருந்தார். முதல்வருடனே இவரும் இருப்பதால் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் மனவேதனையுடனேயே மரியாதை செலுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு நிமிடம்கூட பிரியாத ஜெகதீஷ்!

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ஜெகதீஷ் பழனிசாமி, சென்னைக்கு வேலை தேடி வந்திருக்கிறார். திரைத்துறையில் சிலரிடம் ஏற்பட்ட அறிமுகத்தை அடுத்து 'த ரூட்' எனும் பெயரில் திரையுலக பிரபலங்களின் திறமைகளை புரமோட் செய்து வந்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவரது பணிவையும் விசுவாசத்தையும் பார்த்த விஜய் ஜெகதீஷை தனது மேனேஜராக நியமித்துக் கொண்டார். த ரூட் மீடியா மூலம் திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு விஜய்யை முன் நகர்த்தியவர் ஜெகதீஷ். த.வெ.க வெற்றிபெற சோஷியல் மீடியாவில் பாகுபலி பாய்ச்சலையும் காட்டியது இவரது ரூட் நிறுவனம். எனவே. விஜய் முதல்வரானவுடன், அவரை விட்டு ஒரு நிமிடம்கூட பிரியாமல் 24 மணிநேரமும் கூடவே பயணிக்க தொடங்கிவிட்டார் ஜெகதீஷ்.

விஜய் நீலாங்கரை அல்லது பட்டினப்பாக்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு வரும்போது, அவரது காரிலேயே வருகிறார் ஜெகதீஷ். சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க விஜய் டெல்லி சென்றிருந்தபோதும் ஜெகதீஷும் சென்றிருந்தார். ஜான், விஷ்ணு போல இவர் தனி அறைகளில் அமராமல் முதல்வரின் அறையிலேயே தென்படுகிறார்.

முதல்வர் ஓய்வறையில் ராம்குமார்!

இந்த மூன்று பேரைத் தவிர திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் என்பவரும், விஜய்யுடன் தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார். அங்கு துறைவாரியாக உயரதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தும்போது மட்டும் முதல்வர் ஓய்வெடுப்பதற்கென வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் அறையில் அமர்ந்து கொள்கிறார் ராம்குமார்" என்றவர் சில நொடிகள் யோசனைக்கு பிறகு தொடர்ந்தார்.

துறை செயலாளர்களுக்கு பறக்கும் உத்தரவு!

விஜய்யின் நண்பர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ், ராம்குமார் ஆகிய நான்கு பேரை பகைத்துக் கொண்டால் தங்கள் பதவிக்கு அல்லது செல்வாக்கிற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்துடனேயே ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியாற்றிவரும் நிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. மேலும் இந்த நான்கு பேர்களுக்கு இடையிலும் யார் முதல்வரை அதிகம் கவனம் ஈர்ப்பது என்பதில் பனிப்போர் ஏற்பட்டுள்ளது.

தவிர மேற்கண்ட நான்கு பேர்களில் ஒருவர்தான் முதல்வருக்கான நிர்வாகப் பணிகளில் உத்தரவிடுவார் என்று தலைமைச் செயலாளரிடமே தகவல் பாஸ் செய்யப்பட்டுள்ளது. தவிர, தலைமைச் செயலாளர் வழியாக அல்லாமல் முதல்வரின் நண்பர்களில் ஒருவரே அனைத்து துறை செயலாளர்களையும் செல்போனில் அழைத்து நேரடியாக உத்தரவுகளை போடுகிறார். இதனால், ஒட்டுமொத்த துறை செயலாளர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்

திரைப்பட நடிகராக இருக்கும்போது வேண்டுமானால் விஜய்க்கு இவர்களில் சிலரது உதவி தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் தற்போது எட்டு கோடி மக்களுக்கான முதலமைச்சர். விஜய்க்கு அன்றாட அரசு நடவடிக்கைகளில் உதவுவதற்காகவே, முதல்வரின் தனிச் செயலாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, தமிழ்நாடு அரசை வழிநடத்த தலைமைச் செயலாளர் சாய்குமாரும். 50க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளுக்கென தனித்தனியாக செயலாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், ஆணையர்களும் இருக்கிறார்கள். அதுபோலவே சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட டி.ஜி.பி. தலைமையில் நூற்றுக்கணக்கான ஐ.பி.எஸ்.கள் இருக்கிறார்கள்.

விபரீத செயல்

தலைமைச் செயலகம் என்பது முழுக்க முழுக்க அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பணியாற்றக் கூடிய கட்டமைப்புக் கொண்ட உச்சபட்ச அதிகாரம் படைத்த அரசு அலுவலகமாகும். இந்த அமைப்பில், அரசு நிர்வாகத்துக்கு தொடர்பில்லாதவர்களை அமர வைப்பது. தமிழக அரசு இதுவரை கண்டிராத விசித்திரமான, விபரீதமான செயலாகும்.

அதேபோல ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ், ராம்குமார் ஆகிய நான்கு பேர் பற்றி அரசல்புரசலாக வெளியாகும் தகவல்களும் அதிர்ச்சி அளிக்கின்றன. ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டெண்டர்களில் தலையீடு, தொழிலதிபர்களுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டுவதாக சர்ச்சைகள் எழுகின்றன.

இப்படி நான்கு பேரின் வளையத்தில் சிக்கியுள்ள முதல்வர் விஜய் எப்படி சுதந்திரமாக முடிவெடுத்து, தூய்மையான ஆட்சியை தர முடியும் என்பதே பெரும்பாலான அதிகாரிகளின் கேள்வி. பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக் கோளாகக் கொண்டிருக்கும் அவரின் நண்பர்களின் செயல்பாடுகளால் விஜய் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. அதில் இருந்து அவர் தப்பிக்க வேண்டுமென்றால், நான்கு நண்பர்களையும் தலைமைச் செயலக எல்லைக்கு அப்பால் வைத்து, தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி, யாருடைய தலையீடு இன்றியும் தூய ஆட்சியை கொடுப்பது குறித்து இனிமேலாவது சிந்திக்க வேண்டும்" என்று கூறி பெருமூச்சுவிட்டார்.

ஆட்சி நிர்வாகம் வேறு. நட்பு வேறு என்பதை புரிந்துக்கொள்வாரா முதல்வர்?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow