குழந்தை பாக்கியம் தரும் புத்தூர் சுப்ரமணிய சுவாமி திருத்தலம்...

முருகப் பெருமான், பக்தர் அருள்வதற்காக அப்பன் பரமனைப்போலவே பலவேறு வடிவங்கள் தரிப்பவன். வேலனாக, வேடனாக, விருத்தனாக என்றெல்லாம் காட்சி தரும் குமரன், வித்தியாசமான வடிவம் உள்ள மலை ஒன்றின் அருகே கோயில் கொண்டு அருளாட்சி செய்யும் தலம், புத்தூர்.

குழந்தை பாக்கியம் தரும் புத்தூர் சுப்ரமணிய சுவாமி திருத்தலம்...
பக்தி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கவுண் டன்பட்டி சாலைநாலு சுரை புத்தூர் எனும் சிற்றூரில் உள்ளது இந்தக் கோயில். அரக்கன் ஒருவன் கவிழ்ந்து படுத்திருப்பதுபோன மலை ஒன்று இருக்கிறது இங்கே. அதன் அருகேதான், இவ்வூர் மக்களின் காவல்தெய்வமாகக் கோயில்கொண்டுவிளங்குகிறார், சுப்ரமண்யசுவாமி. புத்தூர் மா குமரன், புத்தூர் சுப்ரமண்ய சுவாமி என்றெல்லாம் இவரை அழைக்கிறார்கள்.

தலவரலாறு...

முன்னொரு காலத்தில் நரகாசுரன் எனும் அரக்கன் ஒருவன், எங்கிருந்தோ இப்பகுதிக்கு வந்தான். வந்த நாள் முதல் தொடர்ந்துவந்த நாள்கள் எல்லாம், இப்பகுதி மக்களுக்கு நொந்த நாள்களாகவே நகர்ந்தன. அந்த அளவுக்கு எல்லோரையும் கொடுமைக்கு ஆளாக்கினான், அவன். ஒருகட்டத்தில் அவனது கொடுமைகள் அதிபயங்கரமாக அதிகரிக்கவே மக்கள் தாங்க இயலாமல் தவித்தனர். தங்களின் தவிப்பையும் அசுரனின் கொடுமையையும் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.
அதீத வலிமையுடன் விளங்கிய அரக்கனை, எவ்வளவு பெரிய படையுடன் சென்றாலும் வெல்ல முடியாது என்பதனை உணர்ந்தான், அரசன்.

எனவே, அரக்கனை அழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனைகள் செய்தான். அமைச்சர் களைக் கூட்டி ஆலோசித்தான். அவர்களும் வழிதெரியாமல் தவித்த வேளையில் ஒருநாள் இரவு, மன்னனின் கனவில் வந்தார், மயில்வாகனக் கடவுள். 'மன்னா, என்னை பயபக்தியோடு வணங்கும் உன்னையும், உன் நாட்டு மக்களையும் நான் காப்பாற்றுகிறேன்!" என வாக்களித்தார்.

அரசனிடம் சொன்னவண்ணமே, வேலாயுதக் கடவுள் வேடன் வடிவில் தோன்றினார். மக்களைத் துன்புறுத்திய அசுரனை அம்புகளை வீசி, அழித்தார். பின்னர் மன்னனுக்குக் காட்சியளித்து, அருளாசிபுரிந்தார். கொடிய அசுரனை வீழ்த்தி, தன் நாட்டு மக்களைக் காப்பாற்றிய குமரக் கடவுளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார், மன்னர். காலம் பலகடந்தாலும் கோயில் இன்றைக்கும் இறையருள் மணக்கக் காட்சி தருகிறது.

கருவறையில் முருகன், அசுரனை அழிக்கத் தோன்றிய அதே வேடனைப் போன்ற தோற்றத்தில் அதாவது, காலில் பாதரட்சைகளும் கையில் வில்லும், இடுப்பில் கத்தியும் தாங்கி நிற்கும் வேடனைப் போலவே மூலவர் சிலையும் ஆதியில் எழுப்பப்பட்டிருந்தது. அந்த காலத்தில் குமரக் கடவுள் மட்டுமே எழுந்தருளி அருள்பாலித்ததால் இத்தலம் குமரன் கோயில் என்றும்; பாம்புப் புற்றுகள் நிரம்பிய சூழலில் காணப் பட்டதால் புற்றூர் என்றும் அழைக்கப்பட்டது. அதுவே மருவி புத்தூர் என்று இவ்வூருக்குப் பெயரானது!

மக்களைக் காக்க அசுர வேட்டைக்கு வந்து சம்ஹாரம் புரிந்து இங்கு பிரதிஷ்டை ஆனதால், மூலவர் முருகன் உக்கிர மூர்த்தியாக விளங்கினார்! இதனால், சாதாரண மக்கள் சற்றே பயந்தார்கள். இங்கே அருள்பாலித்த முருகனின் தோற்றம் குறித்து, திருமலை நாயக்க மன்னரிடம் பணியாற்றிய நல்லுத்தேவன்பட்டி வெள்ளையப் பின்னத் தேவர் மூலம் மன்னரிடம் பிரச்னையை எடுத்துரைத்தார்கள்.

அந்த சமயத்தில் மன்னரின் அரசவையில் பணியாற்றிய முத்து எட்டப்ப நாயக்கர் என்பவர், தனக்குக் குழந்தை பாக்கியம் இல்லாத வருத்தத்தில் இருந்தார்.
அரசர் கட்டளைப்படி இங்கே வந்து முருகப் பெருமானைப் பார்த்தார். அப்போது, தனக்குக் குழந்தைபாக்யம் கிடைத்தால் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து, மணிமண்டபம், மகாமண்டபம் உள்ளிட்டவற்றை அமைத்துத் தருவதாகவும் வேண்டினார்.

முருகப் பெருமானின் அருளால் அவருக்குக் குழந்தைவரம்கிட்டவே, மகிழ்ந்தார். எனவே சிறு கோயில் ஒன்றை அமைத்தவர், சுப்ரமண்யனுக்கு வள்ளி, தேவசேனா விக்ரஹங்களைப் பிரதிஷ்டை செய்து, திருமணத் திருவிழாவினை நடத்தி, குமாரக்கடவுளின் உக்ரத்தினைத் தணித்துக் குளிரச் செய்தார். அதையடுத்து இதோ இன்னும் கருவறையில் கருணையே வடிவாகக் காட்சியளிக்கிறார்.

நாகாசுரனை சம்ஹாரம் செய்தபோது அவன் குப்புற விழுந்து மடிந்ததாகவும், அவனே இங்கே மலையாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த மலை, வேறொரு கோணத்தில் மிகப்பெரிய பாம்பு சுருண்டு இருப்பது போலவும் காட்சியளிக்கிறது. குமரன் அசுர சம்ஹார மூர்த்தியாக விளங்குவதால் இப்பகுதியில் ஆணவம் அக்கிரமம், தலை தூக்க விடாமல் மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர். இதனை உணர்த்துவதுபோல், "புத்தூர் மண்ணில் ஆட்டம் போடாதே அழிந்து போவாய்!" என்கிற பேச்சு வழக்கு இன்றும் இப்பகுதி மக்களிடையே உலாவுகிறது.

கோயிலுக்குள் நுழைந்தவுடன் எதிரே பலிபீடம், நாலு கால் மண்டபத்தில் முருகனின் மயில் வாகனம், சுற்றி பல்வேறு தெய்வச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்று சொல்லப்படுகிறது. அதற்கு சாட்சியாக அர்த்த மண்டபத்தில் உள்ளே மேல் உத்திரத்தைத் தாங்கிப் பிடிக்கும் நடுக்கல்லில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ள திருமலை நாயக்க மன்னர் தனது மனைவியுடன் இறைவனை வணங்கும் சிற்பம் முன்மண்டபத்தில் உள்ளது மற்றும் யாளி சிற்பங்களும் உள்ளன. அர்த்த மண்டபத்துள் நுழையும் முன்னர் துவார பாலகர்கள் வரவேற்கின்றனர். மூலஸ்தானத்தில் சுப்ரமணிய சுவாமி ஆறு அடி உயரத்தில் கம்பீரமாக வள்ளி, தெய்வானை யுடன் காட்சி தருகிறார். அதேசமயம், மூலவரைப் பார்க்கும் போது குமரனின் காந்தக் கண்கள் மற்றும் திருவுருவத் தோற்றம் மட்டுமே கம்பீரமாகத் தெரிகிறது!

இங்கே குமரன் சம்ஹார மூர்த்தியாக விளங்குவதால் போர்க்களக் கோலத்தில் இடுப்பில் உடைவாள், வலது கையில் வில் ஏந்தி, காலில் பாதரட்சை அணிந்த திருவடிவினராகவே ஒரு காலத்தில் காணப்பட்டுள்ளார்.

வில் ஏந்திய நிலையில் இருந்த வேலவனின் திருவடிவில் பிற்காலத்தில் ஆன்மிக பெரியோரின் அறிவுரைப்படி வில்லுக்கு பதில் வேலனுக்குப் பிடித்த வேலாயுதமாக மாற்றப்பட்டிருக்கிறது! இது அவரது உக்ரத்தினை சற்று தணிப்பதற்காக மாற்றப்பட்டதாக சொல்லப் படுகிறது.
பிராகாரங்களை சுற்றி வரும் போது தெற்கில் தட்சிணாமூர்த்தி இருக்க கன்னிமூலையில் இரட்டை விநாயகர் அமர்ந்திருக்கிறார். அனுமான், துர்க்கையம்மன், காசி விஸ்வநாதர் மற்றும் பாலமுருகன் சன்னதிகளும் அமைந்துள்ளன.

வடக்குப் பிராகாரத்தில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், இலுப்பை மரமாகத் தோன்றிக் காட்சியளிக்கிறார். இத்திருக் கோயிலின் தலவிருட்சம் பவளமல்லி.
நாகநாதர் சன்னதியில் நடுநாயகமாக மூன்று அடி உயரத்தில் ஆவுடை இல்லாத சிவலிங்கம் அதாவது வெறும் பாணம் மட்டுமே இருக்கிறது. இத்தலத்தின் விசேஷமான இந்த சிவலிங்கத்தில், சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் ஒன்றாக இருப்பதாக ஓர் ஐதிகம் இந்த லிங்கத்தினை அகத்தியர் தமது தோஷம் நீங்கிட, நாரதரின் அறிவுரைப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். எனவே இது அகத்திய லிங்கம் என்றே வழங்குகிறது.

இன்றைக்கும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்குப் பிறகான நான்காவது நாளில் அகத்தியர் பெருமான் சூட்சும உருவில் இங்கே வந்து இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வ தாக நம்பிக்கை நிலவுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கே வந்து இந்த அகத்திய லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு செய்தால் குமரனின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

இந்த லிங்கத்தின் அருகே அஷ்ட நாகர்கள் அதாவது தட்சகன், கார்கோடகன், வாசுகி. அனந்தன், பத்மன், மகாபத்மன், சங்கன், குளிகன் ஆகியோர் எட்டுத் திசை நோக்கி இருக்க,நாகர்களின் நடுவே நாகாத்தம்மன் அமைந்துள்ளாள். சனீஸ்வரன் தனி சன்னதியில் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஜாதகத்தில் சனிநீசம் பெற்றாலும், அஷ்டமசனி, ஏழரை சனி, கண்டகசனி, போன்ற சனிதோஷம் உள்ளவர்களும் சனிக்கிழமைகளில் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.

ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கி கால பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கே தினமும் ராகு கால சர்ப்ப தோஷ வழிபாடு நடைபெறுகிறது.
பௌணர்மி, பிரதோஷம், கிருத்திகை சஷ்டி மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மற்றும் ஆயில்ய நட்சத்திரத்தில் சர்ப்ப சாந்தி, சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்டவை இங்கே விசேஷம் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்பட அனைத்து விஷேச காலங்களிலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுகின்றன.

கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர் புராணத்தில் இத்தலம் - பற்றிய குறிப்புகள் உள்ளதாகச் சொல்கிறனர். ஆணவத்தினை அழித்து, அன்பர்களின் அவசியமான ஆசைகள் அனைத்தையும் நிறைவேறச் செய்கிற, குமரக் கடவுளை நேரம் கிடைக்கும்போது நேரில் சென்று தரிசியுங்கள். உங்கள் வாழ்வில் உயர்வுகள் வந்து சேரும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow