டெங்குக்கு குட் பை.. இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் தகேடா நிறுவனம் உருவாக்கிய Qdenga தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Jul 21, 2026 - 16:30
டெங்குக்கு குட் பை.. இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதாக பொதுச் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 16 வரை மாநிலம் முழுவதும் 8,963 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை 1,656 பாதிப்புகளுடன் முதலிடத்திலும், கோவை 1,215 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

மேலும் சேலம், திருப்பூர், திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், ஈரோடு மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டெங்கு பாதிப்பால் இந்த ஆண்டு இதுவரை நாமக்கல், திருவள்ளூர், தேனி மாவட்டங்களில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 10,322 பாதிப்புகள் மற்றும் 9 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மொத்த பாதிப்பு குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். வீடுகள், காலி மனைகள், நீர்த் தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு கொசு இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புகைமருந்து தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், டெங்கு தடுப்பில் முக்கிய முன்னேற்றமாக ஜப்பானின் தகேடா (Takeda) நிறுவனம் உருவாக்கிய ‘கியூடெங்கா’ (Qdenga) தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 4 முதல் 60 வயதுடையவர்களுக்கு செலுத்தப்படும் இந்த தடுப்பூசி விரைவில் தனியார் மருத்துவமனைகள் மூலம் கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெங்கு அறிகுறிகளான கடுமையான காய்ச்சல், மூட்டு வலி, கண் வலி போன்றவை ஏற்பட்டால் சுய மருத்துவத்தைத் தவிர்த்து உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும் என பொதுச் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow