முழங்கால் வலிக்கு குட்பை! ரோபோடிக் அறுவை சிகிச்சையின் அதிநவீன தீர்வு!
ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் கூடிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவரின் திறமையுடன் கணினியின் துல்லியத்தையும் இணைத்து செயற்கை மூட்டைச் சரியான இடத்தில் பொருத்த உதவுகிறது.
டாக்டர். வீரபாகு முத்துசாமி
மூத்த ஆலோசகர் – எலும்பியல் அறுவை சிகிச்சை,
அப்போலோ மருத்துவமனை, கிரீம்ஸ் ரோடு, சென்னை.
பல தசாப்தங்களாக, கடுமையான மூட்டுவலியால் அவதிப்படுபவர்கள் வலியின்றி நடப்பதற்கு முழு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உதவி வருகிறது. ஆனால், பாரம்பரிய அறுவை சிகிச்சைகள் செயற்கை மூட்டைச் சரியான இடத்தில் பொருத்துவதற்கு மருத்துவரின் கை கண் கணிப்பையே பெரிதும் நம்பியிருந்தன. இன்று, ரோபோடிக் தொழில் நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் இதில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன மருத்துவரின் திறமையோடு கணினியின் துல்லியத்தையும் இணைத்து இது செயல்படுகிறது.
இது எவ்வாறு செயல்படுகிறது?
அறுவை சிகிச்சைக்கு முன், இந்த ரோபோடிக் அமைப்பு நோயாளியின் முழங்காலின் முப்பரிமாண (3D) வரைபடத்தை உருவாக்குகிறது. இதற்கு ஸ்கேன் (Scan) அல்லது அறுவை சிகிச்சையின் போது பெறப்படும் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவான ஒரு அளவைப் பயன்படுத்தாமல், ஒவ்வொரு நபரின் எலும்பு வடிவம் மற்றும் தசைநார் அமைப்புக்கு ஏற்ப, செயற்கை மூட்டை எவ்வளவு துல்லியமாகப் பொருத்த வேண்டும் என்பதைத் திட்டமிட இந்த வரைபடம் மருத்துவருக்கு உதவுகிறது.
அறுவை சிகிச்சையின் போது, முன் திட்டமிடப்பட்ட எல்லைக்குள் எலும்பைச் செதுக்குவதற்கு ரோபோடிக் கை மருத்துவருக்கு வழிகாட்டுகிறது. மருத்துவரின் கை அந்த எல்லையைத் தாண்டிச் செல்ல முயன்றால், ரோபோடிக் அமைப்பு அதைத் தடுக்கும் இது கார்களில் உள்ள லேன் அசிஸ்ட்' (lane-assist) வசதி காரைப் பாதையிலிருந்து விலகாமல் தடுப்பதைப் போன்றது. அறுவை சிகிச்சை முழுவதும் மருத்துவரே முழு கட்டுப்பாட்டில் இருப்பார்; ரோபோ தானாகச் செயல்படாது.
துல்லியம் ஏன் முக்கியம்?
செயற்கை மூட்டின் அமைப்பில் சில மில்லிமீட்டர் வேறுபாடு இருந்தால் கூட, அது சீரற்ற முறையில் தேய்மானமடையலாம், மூட்டு விறைப்புத்தன்மையை ஏற்படுத்தலாம் அல்லது எதிர்பார்த்ததை விட விரைவாகவே பழுதடையலாம். ரோபோடிக் உதவி, துல்லியமான சீரமைப்பையும், தசைநார்களின் சரியான சமநிலையையும் பெற உதவுகிறது. இதனால் முழங்கால் இயல்பாக இயங்குவதுடன், விரைவான குணமடைதலும், செயற்கை மூட்டின் நீண்ட ஆயுளும் சாத்தியமாகிறது.
யாருக்கு இது பயனுள்ளது?
முழங்கால் மூட்டுவலி தீவிரமடைந்து, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பெரும்பாலான நோயாளிகளுக்கு இது ஏற்றது. குறிப்பாக, வழக்கமான கருவிகளைக் கொண்டு சீரமைக்கக் கடினமாக இருக்கும் சிக்கலான மூட்டுப் பிரச்சினைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது அனைவருக்கும் ஏற்றதா?
ரோபோடிக் தொழில்நுட்பம் என்பது ஒரு நவீன கருவியே தவிர, அது மருத்துவரின் திறமைக்கு மாற்றாகாது. அறுவை சிகிச்சையின் பலன் என்பது மருத்துவரின் அனுபவம், நோயாளியின் எலும்பு ஆரோக்கியம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய உடற்பயிற்சி (Physiotherapy) ஆகியவற்றை பொறுத்தே அமைகிறது. இது துல்லியத்தை அதிகப்படுத்துமே தவிர, சரியான திட்டமிடல் மற்றும் திறமையான அறுவை சிகிச்சையின் தேவையை குறைத்துவிடாது.
முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையைக் கருத்தில் கொள்ளும் நோயாளிகளுக்கு, இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை ஒரு நம்பிக்கையளிக்கும் நவீன தேர்வாகும் இதைப்பற்றி உங்கள் எலும்பு சிகிச்சை மருத்துவரிடம் (Orthopaedic surgeon) கலந்தாலோசிப்பது நல்லது.
What's Your Reaction?
