RATHAVETTAI EPISODE 5 : "ஸ்கெட்ச் ரவி" உருவான கதை... அதிர வைக்கும் பின்னணி!

தமிழ்நாட்டின் கிரைம் உலகில் "ஸ்கெட்ச் ரவி" என அறியப்படும் சாமி ரவியின் பின்னணி, சர்ச்சைக்குரிய வழக்குகள் மற்றும் போலீஸ் விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்கள் குறித்து பார்ப்போம்.

Sep 26, 2026 - 19:00
RATHAVETTAI EPISODE 5 : "ஸ்கெட்ச் ரவி" உருவான கதை... அதிர வைக்கும் பின்னணி!
RATHAVETTAI EPISODE 5 : Sketch Ravi Crime Files !

திருநெல்வேலி ஜில்லாவில் பெரும் சண்டியர் அவர். கோயில் கொடையில் தொடங்கி ஊர் குளம் ஏலம் வரைக்கும் அண்ணன் கைவைக்காத இடமே இல்லை. இரண்டு கொலை வழக்குகள் வாங்கினதால், எப்போதுமே நான்கைந்து அருவாள்கள் இவரை குறிவைத்துக்கொண்டே இருந்தன. இதனால், அவரின் மனைவி பயந்து நடுங்கியபோது, 'ஏலே பத்து உசுர சாய்ச்சுட்டுதான் உன் அத்தானோட உசுர எவனும் நெருங்க முடியும். அது இந்த ஜென்மத்துல நடக்காதுல்ல' என்று தெனாவெட்டாக டயலாக் பேசியவர். ஆனால், எண்ணி எட்டு வாரத்தில் அவரது ஜோலிய முடித்துவிட்டது எதிரி டீம் ஒன்று. தனது நிழலுக்குக்கூட தெரியாமல் அந்த சண்டியர் மெயின்டெயின் செய்துவந்த ரகசிய தோழியின் வீட்டுக்கு சென்றபோதுதான் அவரை போட்டுத்தள்ளினார்கள். யாருக்குமே தெரியாத பொம்பளை விஷயத்தை எப்டி ஸ்மெல் பண்ணி, கரெக்டா அங்கே வந்து காரியத்தை பண்ணினானுவ? இந்த ஸ்கெட்ச்சே புதுசா இருக்குதே' என்று போலீஸே ஆச்சரியப்பட்டது. 'யாருலே பிளான் போட்டுக் கொடுத்தாவ?' என்று விசாரிக்கையில் கிடைத்த பெயர்தான் சாமி ரவி!

ஆம். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த கணிசமான கொலை வழக்குகளில், அதிலும் நெருங்கவே முடியாத நபர்களை சாய்ப்பதற்கு துணுக்கமான ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த மூளைக்கு சொந்தக்காரர்தான் சாமி ரவி. சாமி ரவி மீது தமிழகத்தின் பல்வேறு -மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் வழக்குகள் வரிசை கட்டுகின்றன. குணசேகரன், குணசேகர், ரவிக்குமார், சாமி ரவி, லண்டன் ரவி, பக்தன் ரவி, வக்கீல் ரவி, ஆக்டர் ரவி என எக்கச்சக்க பெயர்களில் வழக்குகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், தன்னை 'ஸ்கெட்ச் ரவி' என்று அழைப்பதுதான் அவருக்குப் பிடிக்கும்.

ஒருவனை சம்பவம் பண்ணும் முன்பாக நின்று நிதானித்து, மிகத் தெளிவாக அந்த நபரை ஃபாலோ செய்து, வெளியே தெரியாத அவனது நடவடிக்கைகளை லிஸ்ட் போட்டு, எதில் அந்த நபர் பலவீனமோ, அதை பக்காவாக பாயின்ட் எடுத்து, குறையேதும் இல்லாமல் கொலை சம்பவத்தை நடத்த ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதுதான் சாமி ரவியின் அசாத்திய திறமையே.

சாமி ரவியின் ஜகதலபிரதாபங்களை விளக்கக் கேட்டு ரிட்டயர்டு எஸ்.பி. ஒருவரைக் கோவையில் சந்தித்தோம். அவரது ஜீப்பில் லாங் டிரைவ் கூட்டிச் சென்றபடியே பேச ஆரம்பித்தார். "தமிழ்நாட்ல ரவுடிங்க ரெண்டு வகையா பிரிஞ்சு கிடக்குறாங்க ஆதிக்கசாதி பட்டியலினம் இந்த ரெண்டும்தான் அந்த பிரிவுகள். அரசியல் லாபத்துக்காக இப்படி ரெண்டாக பிரிச்சு வளர்த்து விடப்பட்டு, மோதவிடப்படுறாங்க. இவங்களை வெச்சும், இவங்களோட சாதி மோதல்களை வெச்சும்தான் அரசியல் நடக்குது.

இரண்டு தரப்பிலேயும் பெரும்பாலான ரவுடிகள் அரசியல்வாதிகளின் பலி ஆடுகளாகவே செத்துடுவாங்க. ஒரு சிலர் மட்டும் அரசியல்லேயோ அல்லது பொருளாதாரத்துலேயோ ஹெவியா வளருவாங்க. அப்படி ஒருத்தன்தான் இந்த சாமி ரவி. நிறைய சம்பவங்களை பண்ணியிருந்தாலுமேகூட மிகக் குறைவான வழக்குகள் தான் அவன் மேலே இருக்குது. இதுக்கு காரணம் அவனோட மூளை. போலீஸ் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தை தாறுமாறான பணத்தால் குளிப்பாட்டிடுவான் ரவி. இதன் மூலமாகவும் கேஸுக்குள்ளே தன் பெயர் வராம தப்பிச்சுடுவான். அப்படியே வந்தாலும் அது மோஸ்ட்லி பொய் பெயராதான் இருக்கும்.

சொந்த ஊர் மதுரை பக்கம் செட்டிலானது திருச்சியில, டால்மியாபுரம் பள்ளியில படிச்சுட்டு, எல்.எல்.பி. சேர்ந்திருக்கான் முடிக்கலைன்னு தெரியுது. இன்னைய தேதிக்கு 48 வயசிருக்கும். ஆளைப் பார்த்தா அவ்ளோ ஹேண்ட்ஸம்மா, ஏதோ கார்ப்பரேட் கம்பெனியில வேலை பார்க்கிறவன் மாதிரி இருப்பான். ஆனா, பண்றதெல்லாம் படு கிரிமினல்தனமான வேலைகள்.

ரவி நேரடியா இறங்கிப் பண்ணிய பண்ணுற சம்பவங்கள் அரிது. அப்படியே பண்ணினாலும் பேர் வெளியில தெரியாம பார்த்துப்பான். ஸ்கெட்ச் மட்டும் போட்டுக் கொடுத்துட்டு, அவன் எஸ்கேப் ஆகிடுறதை வெச்சு ரவிக்கு ரத்தம் பிடிக்காதுப்பா'ன்னு அவனோட கூட்டாளிக கிண்டல் பண்ணுவாங்க. அதுல சூடாகி, தன்னால் நேரடியாக இறங்கி சம்பவம் பண்ணமுடியும்னு நிரூபிக்க சில கொலைகளில் நேரடியாக இறங்கி வெட்டியிருக்கான்.

2000ம் காலகட்டத்தில் கடலூர் சிதம்பரம் பகுதிகளில் நடந்த முக்கிய கொலைகளில் ரவியின் தொடர்பை பிற்காலத்துல கண்டுபிடிச்சுது. எங்க டிபார்ட்மென்ட் புலவர் ஆறுமுகம், திருச்சி குறசிவா, பூம்புகாரில் ஸ்டேஷன் வாசலில் நடந்த இரட்டைக் கொலை, புதுக்கோட்டை மண்டையூர் நாகு பூதலூர் கொலை வழக்கு தோகூர் குமார் கொலைன்னு பெரிய லிஸ்ட் ரெடியாச்சு. ஆனா, இதில் பலவற்றில் ரவியின் பெயரைக்கூட கொலையாளிங்க உச்சரிக்கலை. விளைவு, அந்த உக்கிர கொலைகளுக்கு 'என்னங்க அநியாயமா இருக்குது. இப்டில்லாமா கொலை பண்ணுவாங்க படுபாவிங்கன்னு உச் கொட்டிட்டு கடந்து போயிட்டே இருந்தான் ரவி. ஆனாலும் சில கொலை, கொள்ளை வழக்குகளில் இவன் பெயர் பக்காவாக எஃப்.ஐ.ஆர்ல இருக்குது. அதனால போலீஸ் பிடி எப்பவுமே சாமி ரவி மீது இறுகிட்டேதான் இருக்கும்.

திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்ட தாதாக்களுடன் நெருக்கமான தொடர்பு ரவிக்கு உண்டு. அடியாளுங்க அசைன்மென்ட்ஸ், ஆயுதங்கள்னு பரிமாறிக்குவாங்க. தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த தாதாக்கள், ரவுடிகளின் கொலை பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் ரவி போட்டுக் கொடுத்த ப்ளூ பிரின்ட் சிக்கும். ஆள் பார்க்கிறதுக்கு ஸ்மார்ட்டா இருக்கிறதாலே தோழிகள் அதிகம் இவனுக்கு. இதனால் சில நேரங்களில் கூட்டாளிகளோடுகூட மோதல் உருவாகியிருக்குது.

அ.தி.மு.க.வை தன்னோட மிகப்பெரிய கேடயமா பயன்படுத்திக்கிறான் ரவி. மன்னார்குடி வகையறாக்களில் சிலர் இவனுக்கு முழு சப்போர்ட் குறிப்பா மன்னார்குடி முக்கிய புள்ளி ஒருவரின் மகனுக்கு ரவிதான் ஆல் இன் ஆல் பாடிகார்டே சாமி ரவி திருமணம் பண்ணியிருக்கிறதே ஒரு அரசியல் அமைப்பின் முக்கிய புள்ளியின் மகளைத்தான். அந்த கல்யாணத்துல திருச்சி, டெல்டா வட்டார அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளின் பெரிய முகங்கள் பலர் ஓப்பனா கலந்துகிட்டு வாழ்த்தினாங்க. சாமி ரவி ஒரு தடவை ஜெயிலுக்கு போயிட்டு வெளியில வந்ததும் மாஜி அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர் வெளிப்படையா மாலை போட்டு வரவேற்றார்னா அந்தக் கட்சி எந்தளவுக்கு சாமி ரவியின் பேக் போனா' இருக்குன்னு பார்த்துக்கோங்க.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின் கூவத்தூரில் அ.தி.மு.க. கூடி குழுமி கிடந்தப்ப பாதுகாப்பு ஏற்பாடு செய்த முக்கிய கைகளில் சாமி ரவியும் ஒருவன். சிலகாலம் லண்டனுக்கும் பறந்து பதுங்கிட்டு வந்தான் ரவி.

குமுதம் ரிப்போர்ட்டர் 'ரத்த வேட்டை தொடரில் இரண்டாவது கேரக்டரான திண்டுக்கல் மோகன் ராமின் எபிஸோடை வாசிச்சுட்டே பலர் வாய் பிளந்தாங்க. ஆனால், அந்த மோகன்ராமை விட பலமடங்கு முக்கியமான கிரிமினல் கை இந்த சாமி ரவி. தன்னோட வட்டார நபர்களிடம் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன், குளத்துக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு சாமி ரவி கிளம்பினாலே அடுத்த சில நாட்களில் துள்ளத் துடிக்க ஏதோ ஒரு குரூர கொலை விழப் போவுதுன்னு அர்த்தம். இப்படி பல முறை நடந்திருக்குது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் அழைச்சு விசாரிச்சா, 'அவரை கொன்னுட்டாங்களா! ப்ச்ச்ச் பாவம் சார். ஆனா கொலை நடந்த அந்த நாளில் இந்தக் கோயில்ல இருந்தேன். இங்கேதான் தங்கியிருந்தேன், இத்தனை மணிக்கு பூஜையில இருந்தேன்ன்னு ஆதாரத்தை காட்டுவான். அது உண்மையாகவும் இருக்கும். காரணம், சம்பவத்துக்கு முன்னாலேயே கிளம்பும் ரவி, கொலை நடப்பது தெற்கு திசைன்னா இவன் வடகிழக்கு திசையில ஒரு கோயில்ல போயி அந்த நாளில் உட்கார்ந்திருப்பான்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கிலும்கூட சந்தேகத்தின் அடிப்படையில் சாமி ரவி விசாரிக்கப்பட்டான். உண்மை அறியும் சோதனைவரை கொண்டு செல்லப்பட்டான். ஸ்கெட்ச் மட்டுமில்லை, செமத்தியான கொள்ளைகளிலும் சாமி ரவியின் கைகள் உண்டு. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது திருச்சி அருகே பெட்டவாய்த்தலை பகுதியில் பெரிய கட்சியால் கொண்டுசெல்லப்பட்ட பெரும் தொகை கொள்ளை போனதில் இவனுக்கு தொடர்பு இருக்குமோன்னு போலீஸுக்கு சந்தேகம் இருக்கு.

இப்பேர்ப்பட்ட கிரிமினல் ஹிஸ்டரி இருக்கிற சாமி ரவி மீது 'கத்தியைக் காட்டி மிரட்டி நாலாயிரம் ரூபாய் வழிப்பறி செய்தார்னு பெட்டி கேஸ் போட்டு ஃபைலை மூடத் துடிக்கிற போலீஸும் இருக்கிறாங்க. காரணம் சாமி ரவியின் கவனிப்பு அப்படி! மாச மாமூலில் துவங்கி தீபாவளிக்கு வழங்கப்படும் கிஃப்ட் பாக்ஸ் வரை சாமி ரவி பிராண்ட் அன்பளிப்புன்னா திருச்சி, டெல்டா மற்றும் தெற்கு போலீஸில் சிலர் சிலிர்த்துப் போய்தான் வாங்கிப்பாங்க. இப்போதைக்கு சிறையிலிருக்கும் சாமி ரவி மூளை எதை பிளான் பண்ணுதுன்னு யாருக்கும் தெரியாது" என்றபடி நம்மை டிராப் செய்தார் எக்ஸ் எஸ்.பி!

(ஏத்தம் தெறிக்கும்) - எஸ்.ஷக்தி .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow