மின்சார உதடுகள்-இனியாவின் இடைநில்லா பயணம்!

மின்சார உதடுகள்" என்பது வாழ்க்கை, மரணம், காதல், ஆன்மிகம் மற்றும் மனித மனத்தின் ஆழங்களை ஆராயும் வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. "செத்து செத்து விளையாடலாமா?" என்ற நகைச்சுவை வசனத்தை நினைவுபடுத்தும் வகையில், வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான எல்லைகளை கேள்விக்குள்ளாக்கும் சிந்தனைகளை இந்த நாவல் முன்வைக்கிறது. பல்வேறு தத்துவங்கள், ஆன்மிகக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இணைத்து, வாசகர்களை ஒரு புதிய சிந்தனைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது. எழுத்தாளர் "ஒளித்துகள்" தனது தனித்துவமான நடைமுறையால், இறையன்பும் மனித உணர்வுகளும் கலந்த ஒரு ஆழமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறார்.

மின்சார உதடுகள்-இனியாவின் இடைநில்லா பயணம்!
மாலைமதி

தமிழ்நாட்டில் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவரின் மகன் இரண்டாம் பரமேசுவரவர்மன் பொதுயுகம் 725731 வரை ஆட்சியில் இருந்தார்.
அவரைப் பற்றிய கற்பனையில், இந்தக் கதையில் சிவசக்தி என்று ஒரு கற்பனைப் பெண்மயில் வருகிறார். அவர் கற்பனையில் இன்னொரு பெண்புலியின் முன்ஜென்மம் என்று தொடர்ந்து வருகிற பக்கங்கள் நம்மிடம் சொல்லும். இப்போது நடனமாடுகிற சிவசக்தியைப் பார்க்க செல்லப் போகிறோம்.
இரண்டாம் பரமேசுவரவர்மனின் மனதிலும் நடனமாடுகிற பாக்கியம் சிவசக்தியம்மைக்குக் கிடைத்தது. 'காதல்கள் எல்லாம் கல்யாணத்திலா முடிகின்றன?' என்கிற கேள்விக்கு காலப்போக்கில் பதில் வரப்போகிறது.

1,300 வருடங்களுக்கு முன்னால் மாமல்லபுரம் பக்கத்தில் சிவசக்தி நடனமாடிக்கொண்டு இருந்தாள். ஒரு சிற்பியின் மகள் என்பதால், சிற்பங்களைப் பார்த்துப் பார்த்துக் கற்களைத் தூக்கி நகர்த்தி, உளியோடு மொழி பேசி சிவசக்தியின் வடிவம் எழில் கொஞ்சும் தேவதைபோல மாறி இருந்தது.
மன்னன் மகன் தன்னை நேசிக்கிறார் என்கிற இறுமாப்பில் அவள் கொஞ்ச நாட்கள் பிரமித்துப் போயிருந்தது உண்மைதான்.

"நாடாளும் மன்னன் மகன் கற்களைக் கட்டியாளும் கல்சிற்பி மயனின் மகளைக் கரம் பிடிப்பது தகுமா?" என்று அரண்மனை வட்டாரத்தில் அரசல் புரசலாகச் செய்தி வந்தபோதே, மகளை அழைத்துக் கொண்டு கற்களைக் காதலிக்கிற மாமல்லபுரத்திற்கு வந்துவிட்டார் மயன்.
கடற்கரை ஓரமாக விளையாடிக் கொண்டே நடந்து கொண்டிருந்த சிவசக்தியம்மையின் தோழி, காக்கிச் சட்டையோடு கடல் அலைகள் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த இனியா மேடத்தைக் கண்டெடுத்தாள்.

இனியா மேடத்தைப் பார்க்கும்போது, அவரது காக்கிச் சட்டையில் இருந்த நட்சத்திரங்களையும் சிங்கத்தையும் சிவசக்திக்கு மிகவும் பிடித்துப் போனது.
கி.பி. 726ல் அங்கே வந்திறங்கிய ஒரு ஆண்மகன் போல சிகையலங்காரம் செய்திருந்த அந்த யவனச் சிலைபோன்ற பெண்ணைப் பார்த்ததும்... “இந்த வயதிலேயே இப்படி இருக்கின்றாரே! என் வயதில் எப்படி இருந்திருப்பார்!" என்று தோன்றியது.

அவருக்கு ஆண்கள் அணிவதுபோல அணிந்திருந்த கால்சராயை மாற்றி, தன்னுடைய சேலை ஒன்றை அணிவித்தாள்.
மயன் சிற்பி அடுத்த நாள் பார்த்துவிட்டு, "யாரம்மா இது புதுப் பெண்ணாக தெரிகிறதே? எந்த ஊரம்மா நீ?" என்று இனியாவிடமும் சிவசக்தியிடமும் கேட்டார்.
“அப்பா, இவர் என் தோழியின் தாய். நாகப்பட்டினத்திலிருந்து வந்திருக்கிறார். காஞ்சி கைலாசநாதரை தரிசிக்கச் செல்வதாக உத்தேசம். அடர்ந்த வனப்பகுதிக்குள் தங்களுடன் வந்த குழுவினரை விட்டு வழிமாறி இப்படி வந்துவிட்டார்.”

"இவர் மகள் செவ்வந்தியைச் சென்ற ஆண்டு நமது சக்கரவர்த்தி பரமேசுவர பட்டாபிஷேகத்தில் பார்த்தது!"
சிவசக்தி விளக்கமாகத் தான் தயாரித்து ஒத்திகை பார்த்து, இனியாவிற்கும் சொல்லித் தந்திருந்த பதிலைச் சொன்னாள்.
"அடடே.. அப்படியா! பேரரசரின் பொற்கால ராஜ பரிபாலனத்தில் நீங்கள் பேஷாக கைலாசநாதரைப் பார்த்துப் போகலாம். எவ்வளவு நாட்களானாலும் நீங்கள் நமது சிற்பச்சாலை பணி மகளிரோடே தங்கி மகிழலாம். என்னப்பன் ஏகாம்பரநாதன் அருளாலே உங்களுக்கு மகிழ்ச்சியன்றி வேறொன்றும் அமையாது!"
தேனும் தினைமாவும், கனிவகைகளும், போஜனத்திற்கு ஆனபின்னர் இனியாவை அவருக்கெனத் தங்குமிடம் ஒன்றில் விட்டுச் சென்றனர்.

அந்த அறையில் ஒரு கயிற்றுக் கட்டிலும், ஒரு பானையில் நீர்க் குவளை ஒன்றும் இருந்தது. அது ஒரு குடிசை என்றாலும், அடர்த்தியாக வேயப்பட்ட புல்லால் ஆன கூரை காரணமாக இயற்கையாகவே அந்த இடம் நல்ல சீதோஷ்ணத்தில் இருந்தது.
இனியா அனைவரும் அகன்ற பிறகு ஒரு வெற்றிலையை அங்கிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து எடுத்தார். கொஞ்சம் கண் மையை அதே பெட்டியின் உள்ளிருந்த சீசாவிலிருந்து எடுத்துத் தடவினார். அந்த வெற்றிலையில் ஒரு ஒளிவட்டம் உண்டானது அதில் ஒரு யுவதி தோன்றினாள். அது வேறு யாரும் அல்ல...
சில்வியாதான்!

"ஆன்ட்டி... லேண்டிங் ப்ராப்பரா இருந்துதா? டோக்கியோல இருந்து மஹாபலிபுரம் போய்ச் சேருவதற்கு மூன்று செகண்ட் கொஞ்சம் அதிக நேரம் தான்...”
வெற்றிலைக்குள் இருந்த காட்சியில் உதட்டசைத்துப் பேசினாள் சில்வியா,"சில்வியா, உன்னுடைய அறிவியல் தொழில்நுட்பத்தைக் கண்டு என்னுடைய பரத நாட்டிய மொழியில் சொன்னால் பிரமிப்பு பாவம் என் முகத்தில் வருகிறது. அடடா... இங்கே பூர்வ ஜென்ம பாசம் காட்டும் சிவசக்தியுடன் பேசிப் பேசி நிருத்யா, நாட்யா, நிரிட்டா, சாமா, அரமண்டி, ஹஸ்தா என்று பல நாட்டிய வொகாப்லரி என் லேங்வேஜில் நுழைந்துவிட்டது. நாளைக்குத்தான் சிவசக்தியிடம் நாம் சொல்ல வந்ததைச் சொல்லப் போகிறேன்..." அருகிலிருந்த தலையணைமீது கைகளை ஊன்றியவாறு பதில் சொன்னார், இனியா.

“நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. சில்வியா, உன்னுடைய சாதனைகள் இந்த வரலாற்றில் நிற்கும். எந்த வரலாறு என்றுதான் குழப்பம் நிலவுகிறது. எதிர்காலத்தையும் பழங்கால வரலாற்றுக்குள் இழுத்து வந்துவிட்டாய். 2025ல் வாழ்ந்துகொண்டிருந்த என்னை, மூன்றே விநாடிகளில் பல நூற்றாண்டுகள் பின்னே நகர்த்தியது எதிர்காலத்தில் இன்னும் சாதாரணமாகலாம்."

இருவரும் சில நிமிடங்கள் பேசிய பிறகு... வெற்றிலையை மடித்து வைத்துவிட்டு, விளக்கை அணைத்துவிட்டுக் கட்டிலில் சாய்ந்தார், இனியா.
அதுவரை இனியா பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு மர்ம உருவம் மெதுவாகப் பின்னால் நகர்ந்து, பூனை போல வெளியேறியது.
பாவம் அதற்குத் தெரியாது... இனியாவிற்கு முதுகில் கண்கள் மட்டுமல்ல; காதுகளும் உண்டு என்று.
மூடியிருந்த இனியாவின் கண்கள் அப்படி மூடியிருந்தவாறே புன்னகைத்தன!
பார்க்கலாம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow