சிக்கிமை புரட்டிப்போட்ட கனமழை... சரியும் மலைகள்… மண்ணில் புதையும் வீடுகள்…!

சிக்கிமில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கியால்ஷிங் மாவட்டத்தின் ரிம்பி கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Sep 25, 2026 - 14:44
சிக்கிமை புரட்டிப்போட்ட கனமழை... சரியும் மலைகள்… மண்ணில் புதையும் வீடுகள்…!

வியாழக்கிழமை(செப்.,24) இரவு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அரசு குடியிருப்புகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிம்பி கிராமத்துக்கு மேலே உள்ள சிங்லிடம் மலைப்பகுதி தொடர்ந்து சரிந்து வருவதால், அங்கிருந்து மண், மணல், பாறைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் போன்றவை கீழ்நோக்கி அடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் 32 வீடுகள் மற்றும் 4 அரசு குடியிருப்புகள் மண்ணில் புதையவோ அல்லது வெள்ளத்தில் மூழ்கவோ அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் ரிம்பி பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பெரிய பாறைகள் மற்றும் மண் குவியல்கள் வீடுகளை நோக்கி அடித்து வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் யுக்சோம்-ரிம்பி பகுதியில் 224.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சிக்கிம் மாநிலத்திலேயே இதுதான் அதிகபட்ச மழைப்பொழிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ரிம்பி-யுக்சோம், ரிம்பி-கேச்சியோபேரி சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரிம்பி மற்றும் கேச்சியோபேரியை இணைக்கும் சாலை நிலச்சரிவால் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சாலைப் பகுதியில் அருகிலுள்ள இரண்டு வீடுகளும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு அபாயம் காரணமாக ஏற்கெனவே பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பெரும்பாலானோர் கெய்சிங் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். சிலர் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 32 வீடுகளில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் ரிம்பி பஞ்சாயத்து பவனுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் முதலே ரிம்பி பகுதியில் நிலைமை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. சிங்லிடம் மலைச்சரிவுகள் தொடர்ந்து கீழ்நோக்கி நகர்ந்து வருவதால், மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்ட மிட் கோலா பகுதியிலும் தற்போது மண் மற்றும் கழிவுகளுடன் கூடிய வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதற்கிடையே, சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் ரிம்பி பகுதி நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நிலைமை தீவிரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பும் நலனும் அரசின் முதன்மையான முன்னுரிமை என்று தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து உயர் எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை தொடரும் நிலையில், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் தமாங் கேட்டுக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கெய்சிங் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. ஏற்கெனவே ஆபத்தான பகுதிகளில் இருந்த சில குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், செயலில் உள்ள நிலச்சரிவு பகுதிகள், மண் மற்றும் கழிவுகள் குவிந்துள்ள இடங்கள், ஓடைகள் அருகே மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலைச்சரிவுகள் தொடர்ந்து நிலையற்ற நிலையில் இருப்பதுடன், கனமழையும் நீடிப்பதால், அடுத்தடுத்து ஏற்படும் நிலச்சரிவுகள் வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை மேலும் சேதப்படுத்தக்கூடும் என்ற அச்சம் ரிம்பி மக்களிடையே அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow