சிங்கத்தை அதிக நாள் சிறையில் அடைக்க முடியாது! கெஜ்ரிவால் மனைவி ஆவேசம்...
அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியதாகக் கடிதம் ஒன்றையும் சுனிதா கெஜ்ரிவால் வாசித்தார்
டெல்லியில் நடந்த I.N.D.I.A கூட்டணியின் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், சிங்கம் போன்ற அவரை அதிக நாள் சிறையில் அடைத்து வைக்க முடியாது என்று ஆவேசமாகப் பேசினார்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அம்மாநில முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதைக் கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் I.N.D.I.A கூட்டணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகாா்ஜுன் காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஜாா்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன், சரத் பவாா், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக சார்பில் எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய சுனிதா கெஜ்ரிவால், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம், சிங்கத்தை நீண்ட நாள் சிறை வைத்திருக்க முடியாது என்று கூறினார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியதாகக் கடிதம் ஒன்றையும் சுனிதா கெஜ்ரிவால் வாசித்தார்.
அதில், நாடு முழுவதும் 24 மணி நேரம், நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு இலவச மின்சாரம், ஒவ்வொரு கிராமத்திலும், உள்ளாட்சியிலும் சிறந்த அரசு பள்ளிகள் கட்டப்படும், ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா கிளினிக், சுவாமிநாதன் கமிஷனின் கீழ் விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவது என்பன உள்ளிட்ட 6 உத்தரவாதங்களை I.N.D.I.A. கூட்டணி சார்பாக அளிக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளதாக சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்தார்.
What's Your Reaction?