புரட்டாசியில் சிவ தரிசனம்...புண்ணியம் பெருக்கும் வழிபாடு!
புரட்டாசி பௌர்ணமியில் சிவனை வழிபட்டால் கர்வம், அகந்தை நீங்கி புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது திரிபுர சம்ஹார புராணம் சொல்லும் ஐதீகத்தை விரிவாக பார்போம்.
பலன் தரும் பரிகாரம்..! - வி.ராம்ஜி
புரட்டாசி மாதம் என்றால் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் என்பதும், விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மரபு என்பதும் தெரியும்தானே..! அதேபோல, புரட்டாசி மாதம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது பற்றியும் புராணம் தரும் தகவல் வியக்கவைக்கிறது!
விநாயகப் பெருமானைக் குறித்து கடுந்தவம் இயற்றிய கிருச்சமத முனிவர் என்பவர், விநாயகப் பெருமானின் தரிசனத்தைப் பெற்றார். வரத்தையும் கேட்டுவாங்கினார். ’’சிவபெருமானைத் தவிர யாராலும் அழிக்கமுடியாத வலிமை கொண்ட மகன் வேண்டும்!’’ என வரம் கேட்டார். அதன்படியே மகன் பிறந்தான். பலி என பெயரிட்டு, வளர்த்தார். அவன் தான் திரிபுரன் என்றானான்! ’அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு’ என்பது போல், மகனும் பிள்ளையாரை வேண்டினான். தவமிருந்தான். வரம் கேட்டான். அந்த வரம்... ’’மூவுலகங்களையும் தான் அடிமைப்படுத்தி ஆள வேண்டும்!’’ என்பது! வரம் தந்த ஆனைமுகன், இரும்புக்கோட்டை, வெள்ளிக்கோட்டை, தங்கக்கோட்டை என வழங்கினார். இந்த மூன்றும் தான் திரிபுரம். அதனால்தான் இவன் திரிபுரன்!
வரம் கொடுத்த பிள்ளையார் சும்மா இருந்துவிடுவாரா? ''பெற்ற வரங்களை நீ தவறாகப் பயன்படுத்தினால், சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும். அப்போதே, நீ எம்முடைய பக்தன் என்பதாலும், சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்படுவதாலும் உனக்கு வீடுபேறு உண்டாகும்'' என்றும் அருளினார்.
வரம் பெற்ற பலி, மூவுலகங்களையும் தன் வசப்படுத்தினான். தேவர்களை, முனிவர்களை, கண்ணில் எதிர்ப்படுபவர்களையெல்லாம் துன்புறுத்தினான். அனைவரும் நாரதரிடம் வந்து முறையிட்டார்கள். பிறகு சிவபெருமானைச் சரணடைந்தார்கள். ஆரம்பமானது சிவனாரின் திருவிளையாடல்!
திரிபுரனுடன் போருக்குச் செல்ல காரணம் வேண்டுமே...! அதற்கான அவசியத்தை விநாயகருக்குச் சொல்லிக்கொடுத்தார். வேதியர் உருவெடுத்து திரிபுரனிடம் சென்றார் விநாயகர். ’’திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவம் வேண்டும்’’ என்று தானமாகக் கேட்டார். அந்தண வடிவில் வந்த விநாயகரின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த திரிபுரன், திருக்கயிலைக்கு தூதர்களை அனுப்பினான். விளையாட்டைத் தொடங்கினார் சிவனார்!
சிந்தாமணி கணபதியைத் தர மறுத்தார். கடும் கோபமானான் திரிபுரன். போர்மூண்டது. நீண்ட நாட்கள் நடைபெற்ற போரின் முடிவில், சிவபெருமான் தன் திருக்கரத்தில் இருந்த கணையைச் செலுத்தி திரிபுரனை சம்ஹாரம் செய்தார். ஏவிய கணை திரும்பவும் சிவபெருமானின் திருக்கரத்தை அடைவதற்கு முன்பாகவே திரிபுரன் சிவபெருமானை திருவடிகளில் ஒன்றிக் கலந்தான்.
திரிபுரன் வீடுபேறடைந்த திருநாள்... புரட்டாசி பெளர்ணமி என்கிறது புராணம். ஆகவே புரட்டாசி மாதத்திலும் பெளர்ணமியிலும் சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையிலும் சிவாலயம் சென்று வழிபட்டால், கர்வம் அழியும்; அகந்தை அகலும்; ஆணவம் காணாமல் போகும் என்பது ஐதீகம்!
பெளர்ணமி மற்றும் ஏனையநாளில், சிவாலயத்துக்குச் சென்று சிவ தரிசனம் செய்யலாம். ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். நெய்தீபம் ஏற்றி வழிபடலாம். விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். எவருக்கேனும் தயிர்சாதம் வழங்கலாம்! நம்மை துன்பம் என்பதே நெருங்காது. கவலையும் துக்கமும் இல்லாமல் நிம்மதியாக வாழ அருளுவார் சிவனார் என்பது ஐதீகம்!
முற்பிறப்பில் செய்த பாவங்கள், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் என சகலமும் நீங்கப் பெறலாம். இம்மையிலும் மறுமையிலும் புண்ணிய பலன்களுடன் வாழலாம்!
What's Your Reaction?