நடிகர் திலகம்-னா சும்மாவா....ஹாலிவுட் படத்துக்கே ஆஸ்கர் விருதைக் கணித்த சிவாஜி!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடைசியாக திரையரங்கில் பார்த்த திரைப்படம் எது என்பது குறித்தும், அந்தப் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸின் நடிப்புப் பின்னணியை அவர் கணித்தது குறித்தும் அவரது மகன் ராம்குமார் பகிர்ந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் கவனம் பெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாகப் போற்றப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களையும் விரும்பிப் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளது. இந்நிலையில், அவர் கடைசியாகத் திரையரங்கில் பார்த்த திரைப்படம் குறித்த தகவலை அவரது மகனும் நடிகர், தயாரிப்பாளருமான ராம்குமார் கணேசன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், ராம்குமார் கணேசனின் ‘Truly Ram’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது சினிமா, புகழ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் உரையாடினர். அந்த உரையாடலின்போது சிவாஜி கணேசனின் ஹாலிவுட் திரைப்பட ஆர்வம் குறித்தும் ராம்குமார் நினைவுகூர்ந்தார்.
அப்போது, 1991-ம் ஆண்டு வெளியான ‘The Silence of the Lambs’ திரைப்படம்தான் சிவாஜி கணேசன் திரையரங்கில் கடைசியாகப் பார்த்த படம் என்று அவர் தெரிவித்தார்.
ஜோனதன் டெம்மி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜோடி ஃபாஸ்டர் மற்றும் அந்தோனி ஹாப்கின்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தனது தந்தையுடன் நடந்த உரையாடலையும் ராம்குமார் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, “அடுத்த வாரம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. அதில் ஜோடி ஃபாஸ்டர் சிறந்த நடிகைக்கான விருதை வெல்வார்” என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார் ராம்குமார்.
அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சிவாஜி கணேசன், “அந்தப் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் யார்?” என்று கேட்டுள்ளார். அதற்கு ராம்குமார், “அந்தோனி ஹாப்கின்ஸ்” என்று பதிலளித்துள்ளார். உடனே சிவாஜி கணேசன், “அவர் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்த நடிகரா?” என்று கேட்டுள்ளார்.
அதற்கு ராம்குமார் ஆம் என்று பதிலளித்துள்ளார். அந்தோனி ஹாப்கின்ஸ் ஒரு ஷேக்ஸ்பியர் நடிகர் என்பதை அவரது நடிப்பு மற்றும் உடல்மொழியை வைத்தே சிவாஜி கணேசன் அடையாளம் கண்டுகொண்டதாக ராம்குமார் தெரிவித்துள்ளார்.
இதில் மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சிவாஜி கணேசன் கணித்தபடியே ஜோடி ஃபாஸ்டர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும், அந்தோனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் வென்றனர். இதனை ‘Truly Ram’ நிகழ்ச்சியின் சமூக வலைதளப் பதிவிலும், “Both of them won, exactly as he predicted, sir” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அதில் நடித்த நடிகர்களின் திறமையையும், அவர்களின் நடிப்புப் பின்னணியையும் துல்லியமாகக் கணித்த சிவாஜி கணேசனின் சினிமா பார்வை ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
தாமஸ் ஹாரிஸின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘The Silence of the Lambs’ திரைப்படம் 1991-ம் ஆண்டு வெளியானது. 64-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை என ஐந்து முக்கிய விருதுகளையும் இப்படம் வென்றது.
குறிப்பாக, அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்த ஹன்னிபல் லெக்டர் கதாபாத்திரம் இன்றளவும் உலக சினிமாவின் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்தப் படத்தை சிவாஜி கணேசன் கடைசியாகத் திரையரங்கில் பார்த்ததும், அதில் நடித்தவர்களின் நடிப்புத் திறனை முன்கூட்டியே கணித்ததும் குறித்த ராம்குமாரின் பகிர்வு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
What's Your Reaction?



