BIG BOSS 8 MALAYALAM : நெஹா - தாஷி விவகாரம் ! தாஷி குடும்பத்தினரின் அதிரடி அறிக்கை !

பிக் பாஸ் மலையாளம் 8 நிகழ்ச்சியில் நெஹா பாத்திமா – தாஷி ராஜ் விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தாஷியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Nov 3, 2026 - 07:58
BIG BOSS 8 MALAYALAM : நெஹா - தாஷி விவகாரம் ! தாஷி குடும்பத்தினரின் அதிரடி அறிக்கை !
Bigg Boss Malayalam 8 : Tashi Family Breaks Silence!

பிக் பாஸ் மலையாளம் சீசன் 8 நிகழ்ச்சியில் நெஹா பாத்திமா மற்றும் சந்தோஷ் ராஜ் என்கிற தாஷி ராஜ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படும் நிலையில், நெஹாவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தங்களது மகளை அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏனென்றால், ஆண் போட்டியாளரான தாஷி ராஜ் ஒரு இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதாலும், பெண் போட்டியாளரான நெஹா பாத்திமா முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால்தான் நெஹாவின் பெற்றோர் வார இறுதி நிகழ்ச்சியில் நேரடியாகவே வந்து மகளை அழைத்து செல்லவேண்டும் என்றிருந்துள்ளனர்.

தொகுப்பாளர் மோகன்லால் முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவம், நிகழ்ச்சியைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, நெஹாவின் பெற்றோர் தங்களது மகளிடம் வீட்டிற்கு வருமாறு வலியுறுத்திய காட்சிகள் ரசிகர்களிடையே பல்வேறு கருத்துகளை உருவாக்கின.

தாஷி குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை!

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாஷியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது. இணையத்தில் பரவி வரும் விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளில் தாஷியும் அவரது குடும்பத்தினரும் எந்த வகையிலும் தலையிட விரும்பவில்லை என்று அதில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மேலும், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளில் தாங்கள் ஈடுபட விரும்பவில்லை என்றும், சம்பந்தப்பட்ட எந்த நபருக்கும் எதிராக வெறுப்பு, அவதூறு அல்லது எதிர்மறையான கருத்துகளை ஊக்குவிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மதம், நம்பிக்கையை வைத்து வெறுப்பை பரப்ப வேண்டாம்!

ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் மதம், நம்பிக்கை, பின்னணி மற்றும் தனிப்பட்ட முடிவுகளைப் பொருட்படுத்தாமல் மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று தாஷியின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் வெறுப்பாகவோ, பிரிவினையாகவோ அல்லது அவமரியாதையாகவோ மாறக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது, தனிப்பட்ட நபர்களை குறிவைத்து கருத்துகளை பதிவிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறும் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தாஷியின் பயணத்தை தனித்துவத்துடன் பாருங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாஷியின் தனித்துவம், அவரது ஆளுமை மற்றும் அவர் உருவாக்கிய நட்புறவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது பயணத்தை ரசிகர்கள் பாராட்ட வேண்டும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து நேர்மறையான எண்ணங்களுடனும், அன்புடனும், மற்றவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

யாருக்கும் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை!

இந்த அறிக்கை தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு தனிநபருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தெரிவிக்கப்பட்ட கருத்தாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தாஷியின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இறுதியாக, ஊகங்களை விட புரிதலையும், வெறுப்பை விட மரியாதையையும், அனைத்திற்கும் மேலாக மனிதநேயத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என தாஷியின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நெஹா – தாஷி விவகாரம் தொடர்ந்து ரசிகர்களிடையே பேசுபொருளாக இருக்கும் நிலையில், தாஷியின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow