ஈ.சி.ஆரில் 200 ஏக்கரில் ஆன்மீக சுற்றுலா மையம் -அமைச்சர் கொடுத்த குட் நியூஸ்
வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்களை பாதுகாப்பதில் இந்து அறநிலையத்துறை மட்டும் அல்லாது சுற்றுலாத்துறைக்கும் பெரும் பங்கு உண்டு.
ஈ.சி.ஆர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம் அமையவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “சுற்றுலாத்துறையில் ஆன்மீக சுற்றுலா மிகவும் முக்கியமான ஒன்று. கோயில்களில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்களை பாதுகாப்பதில் இந்து அறநிலையத்துறை மட்டும் அல்லாது சுற்றுலாத்துறைக்கும் பெரும் பங்கு உண்டு. அந்தவகையில் இந்து சமய அறநிலைத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து செயல்படும்.
ஈ.சி.ஆர் பகுதியில் திருவிடந்தை திருகோவிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் பரப்பில் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாதுறையின் முயற்சியில் ஆன்மீக சுற்றுலா மையம் அமையவுள்ளது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்தியாவிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவம் பார்ப்பதற்கு மட்டும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்து விபத்தில் சிக்கியவர்களில் 3.15 லட்சம் பேர் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 29 கோடி பேர் சுற்றுலாவுக்காக தமிழகம் வந்துள்ளனர். இதில் 11 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள். நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் அரசு சார்பில் முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ சிகிச்சைக்காக இலவசமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 2 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
What's Your Reaction?