அலறவிட்ட அர்னாப் புயல் ! அடுத்த மூன்று நாட்களுக்கும் மழை இருக்குமா ? வானிலை மையம் அப்டேட் !
நேற்று அர்னாப் புயல் கரையை கடந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சில இடங்களில் வெப்பநிலையும் உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 28) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், அங்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.
கரையை கடந்த அர்னாப் புயல் வலுவிழக்கிறது!
மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய மிகத் தீவிர புயலான அர்னாப், ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே இன்று அதிகாலை முதல் காலை வரையிலான நேரத்தில் கரையைக் கடந்தது.
கரையைக் கடந்த பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்த புயல் வலுவிழந்து தீவிர புயலாக மாறியுள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, ஆந்திரப்பிரதேசம், ஏனாம் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு – வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை மாற்றம் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் கடல் மற்றும் வானிலை நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிப்பது அவசியம்.
அக்டோபர் 30 வரை மழை பெய்யக்கூடிய பகுதிகள்
அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதர மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இந்தக் காலகட்டத்தில் வறண்ட வானிலை தொடர வாய்ப்புள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
மேலும், அக்டோபர் 28 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகப் பதிவாக வாய்ப்புள்ளது. அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
சென்னை வானிலை: 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 28), நாளை (அக்டோபர் 29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும். மழைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், வெப்பமான வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று எச்சரிக்கை
தமிழ்நாட்டின் வடக்கு கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரையிலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வரையிலும் அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
What's Your Reaction?



