மக்களே, நமக்கு SAFETY முக்கியம்ல...கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை...கையில குடை வச்சுக்கோங்க!

தமிழ்நாட்டில் ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sep 29, 2026 - 15:00
Sep 29, 2026 - 15:11
மக்களே, நமக்கு SAFETY முக்கியம்ல...கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை...கையில குடை வச்சுக்கோங்க!
Rain Alert

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று (செப்டம்பர் 28) இரவு மியான்மர் அருகே கரையை கடந்தது. இதன் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், தெற்கு தெலங்கானாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் வட தமிழக பகுதிகளின் வழியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

இன்று ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் மழை தொடரும்

நாளை (30-09-2026) நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 1ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 2ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 3 முதல் 5ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை

செப்டம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் தமிழ்நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. சில பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.

அக்டோபர் 1 முதல் 3ஆம் தேதி வரை வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தற்போது எந்தவிதமான எச்சரிக்கையும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow