விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? நவம்பர் 13-க்குப் பிறகு அரங்கேறப்போகும் அரசியல் ஆட்டம்!

தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடையும் நிலையில், விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nov 12, 2026 - 16:52
விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? நவம்பர் 13-க்குப் பிறகு அரங்கேறப்போகும் அரசியல் ஆட்டம்!

ஆட்சிக்கட்டில் என்பது பஞ்சு மெத்தை அல்ல, முள்படுக்கை என்பதை முதல்வர் விஜய் இந்நேரம் உணர்ந்திருப்பார். த.வெ.க. ஆட்சி அமைந்த ஆறே மாதங்களில் ஆட்சிக் கலைப்புக்கான அஸ்திரங்களை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஏவத் தொடங்கிவிட்டன. இந்த ஆட்சியின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, நவம்பர் 13ம் தேதியுடன் ஆறு மாத காலம் முடிவடைகிறது. இதையடுத்து, மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய, அதற்கு த.வெ.க. அரசுக்கு ஆதரவளிக்கும் சில கட்சிகளே கூட தலையசைக்க... தமிழக அரசியல் களமே அனல் தெறிக்கிறது!

இதுகுறித்து மூத்த அரசியல் பார்வையாளர் ஒருவர் நம்மிடம் விவரித்தார். "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி சொல்வதுபோல, விஜய் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலியின் நான்கு கால்களில் ஒன்றுதான் தவெகவுடையது. மீதமிருக்கும் மூன்று கால்களும் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுடையவை. அவற்றில் ஒரு கால் உடைந்தாலும் சிக்கலே. த.வெ.க. ஆட்சி அமைந்தது முதலே தி.மு.க. தலைவர் ஸ்டாலின், 'இந்த ஆட்சி ஆறு மாதங்கள் கூட நீடிக்காது என்று தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவதை வெறும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள முடியாது.

நவம்பர் 13 ஆரம்பம்!

பொதுவாக சட்டமன்றத்தில் ஒருமுறை பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுவிட்டால், அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆறு மாதங்களுக்குள் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது. அவ்வகையில், கடந்த மே 13ம் தேதி இந்த ஆட்சிக்கான பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டிருப்பதால், வரும் நவம்பர் 13ம் தேதியோடு ஆறு மாத காலம் முடிவடைகிறது. அதன்பிறகு எதிர்க்கட்சிகளால் எப்போது வேண்டுமானாலும் அரசு மீதோ, அல்லது சபாநாயகர் மீதோ நம்பிக்கையில்லா தீர்மானம் முன்மொழியப்படலாம். ஆனால், அதற்கும் சில விதிமுறைகள் உள்ளன.

கடனில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்

த.வெ.க எம்.எல்.ஏ.க்களில் கணிசமானோர் நடுத்தர மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கியவர்கள். என்னதான் பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றிபெற்றாலும், அவர்களில் பலர் தேர்தல் செலவு உள்ளிட்டவற்றுக்காக கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சுமார் 70 பேர் வரை 20 லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வாங்கி, வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஆறு மாதங்களில் திட்டங்களிலும், டெண்டரிலும் வருமானம் பார்ப்பதும் அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர். அமைச்சர்களையே மதிக்காத அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதனால் முதல்கட்டமாக அதிருப்தியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களை அதிமுக குறிவைத்துள்ளது.

சுற்றிவளைக்கும் தி.மு.க!

இன்னொரு பக்கம் தி.மு.க. தரப்பும் அவர்களிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. முதல்கட்டமாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் 18 பேரைத் தேர்வுசெய்து, அவர்களின் பிரச்னைகளை சரிசெய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, நவம்பர் மாத இறுதிக்குள் தவெக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமோ அல்லது அதற்கு ஆழம் பார்க்கும் வகையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டுவர தி.மு.க. தரப்பு முடிவு செய்திருக்கிறது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அதிருப்தி எம்.எல்.ஏ.களை பங்கேற்காமல் செய்வதுதான் ப்ளான்.

இதுகுறித்த தகவல்கள் உளவுத்துறைக்கும் கசிந்திருக்கிறது. எனினும், இந்த ஆபரேஷனை செய்வது யார், அந்த 18 எம்.எல்.ஏக்கள் யார் என்பதை உளவுத்துறையால் துல்லியமாக  கண்டுபிடிக்கமுடியவில்லை. அதேசமயம், இதன் பின்னணியில் மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜி இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை, ஆட்சிக் கலைப்பில் உடன்பாடு இல்லாதவர். அதேசமயம் அவரால், முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான், அவர் ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்க முன்வந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அதிமுகவைப் பொறுத்தவரை, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான கோஷ்டி த.வெ.க. ஆட்சி அமைவதற்கு ஆதரவு அளித்து, அதற்காக அவர்கள் கொடுத்த விலை பெரிது என்பதால், மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.விலேயே நீடிக்கத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

நம்பி களமிறங்கும் எதிர்க்கட்சிகள்!

இந்த நிலையில், நவம்பர் 13க்குப் பிறகு ஆட்சி மீதோ, சபாநாயகர் மீதோ எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரலாம். இதற்கு சட்டப்பேரவை விதிகளின்படி 35 எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் கூடிய கடிதம் சபாநாயகரிடம் அளிக்கப்பட வேண்டும். கடிதம் கொடுத்த நாளில் இருந்து 14 நாட்களுக்குள் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டிட வேண்டும். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், சட்டசபைக் கூட்டத்தில் அதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்துவிட்டு சபாநாயகர் தனது நாற்காலியில் இருந்து வெளியேறிவிடுவார். துணை சபாநாயகர் தான்  அவையை நடத்துவார்.

கையெழுத்திட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இத்தீர்மானத்தின் மீது தங்கள் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். விவாதம் முடிந்து தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். மே 3ம் தேதி அரசு மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் மீது எப்படி வாக்கெடுப்பு நடந்ததோ அதே பாணியில்தான் நடக்கும். ஒவ்வொரு வரிசைப் பிரகாரம் எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்து நின்று வாக்களிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வெற்றி பெற்றால் சபாநாயகர் பதவி விலகுவார். ஒருவேளை அது தோல்வியடைந்தால், வாக்கெடுப்பு முடிந்ததும் மீண்டும் சபாநாயகர் அவரது இருக்கைக்குத் திரும்புவார், அதோடு கூட்டம் முடித்துவைக்கப்படும்.

ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கும் இதே ஃபார்முலா தான். ரகசிய வாக்கெடுப்பை எதிர்க்கட்சிகள் கோரினாலும் அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்க மறுப்பதும் சபாநாயகரின் உரிமை. அதனால் வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் திமுக பேசி வைத்திருக்கும் 18 எம்.எல்.ஏக்களையும் அன்றைய தினம் ஆப்சென்ட் ஆகச் செய்தாக வேண்டும். தீர்மானம் வென்றுவிட்டால் ஆப்சென்டான எம்.எல்.ஏ.க்களுக்குப் பிரச்னையில்லை, தோற்றுவிட்டால் கொறடா உத்தரவை மீறியதற்கான விளைவை அவர்கள் சந்தித்தாக வேண்டும்.

இந்த நிலையில்தான், நேரடியாக ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்பாக, சபாநாயகர் மீது அத்தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆழம் பார்க்க தி.மு.க. திட்டமிட்டிருக்கிறது. இதற்காக தி.மு.க. அதிருப்தி தவெக எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாமல், அதிமுக, சி.பி.ஐ. சி.பி.எம். பா.ம.க. ஆகிய கட்சிகளின் ஆதரவையும் கோரியிருக்கிறது. ஒருவேளை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் சபாநாயகர் பதவி விலக நேரிட்டால், 'ஆட்சி நடத்துவதற்கான அருகதை த.வெ.க.வுக்கு இனி இல்லை' என்று குற்றம்சாட்டி முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என தி.மு.க காய்நகர்த்தும் அடுத்த சில மாதங்களிலேயே ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரவும் முயற்சிக்கும். அதேசமயம் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய சிக்கல்தான்!

வாட் நெக்ஸ்ட்?

இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது. தவெக ஆட்சி மீதான குறைகளை, ஆளுநர் பார்வைக்கு தி.மு.க. எடுத்துச்சென்று, அதன்பேரில் ஆட்சி மீது ஆளுநருக்கு சந்தேகம் ஏற்பட்டால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி மீண்டும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் சொல்வதற்கு அதிகாரம் உண்டு. அதனால், பா.ஜ.க.விடமும் தி.மு.க. தரப்பு ரகசியமாக பேசிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள். தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியைக் கலைக்க நீங்கள் உதவினால், கைமாறாக, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை சட்டத்துக்கு முழு ஆதரவைக் கொடுக்க நாங்கள் தயார்' என திமுக தரப்பு பா.ஜ.க.விடம் சொல்லியிருக்கிறது என சொல்லப்படுகிறது.

அதேநேரம், ஆட்சியைக் கவிழ்த்தபின் 'வாட் நெக்ஸ்ட்?' என்ற கேள்விக்கும் விடை வைத்திருக்கிறது திமுக அதாவது, தற்போதைய நிலவரப்படி த.வெ.க. அரசுக்கு ஒருபக்கம் ஆதரவு, மறுபக்கத்தில் கடும் எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடுடன் இடதுசாரிகள் இயங்கிவருகிறார்கள். வி.சி.க அமைச்சர் பதவியை அனுபவித்து வந்தபோதும், இடதுசாரிகளும், காங்கிரஸும் கழன்றுகொள்ளும் பட்சத்தில் வேறு வழியின்றி அக்கட்சியும் வெளியேறிவிடும் என்றே தெரிகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை மாணிக்கம் தாகூர், அமைச்சர்கள் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ்குமார் என ஒருசிலரைத் தவிர மற்ற அனைவருக்குமே தி.மு.கவுடன் செல்வதே விருப்பம். விஜய்க்கு என்னதான் மாஸ் இருந்தாலும் அது நாடாளுமன்றத் தேர்தலின்போது 'கை' கொடுக்காது என்ற சிந்தனை சோனியா மற்றும் பிரியங்கா காந்தியிடம் இருக்கிறது.

அதேசமயம், தி.மு.க.வுடன் பயணித்தால் தேர்தல் பணிக்கான நெட்வொர்க் மற்றும் தொகுதிக்கான செலவு ஆகியவற்றைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படத் தேவையில்லை. மத்தியில் உள்ள பாஜக அரசை எதிர்ப்பதிலும் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் கனிமொழியிடமும், திருமண பத்திரிகை அளிக்க வந்த கலாநிதி மாறனிடமும்கூட சோனியாவும், பிரியங்காவும் சமாதானம் பேசியிருக்கிறார்கள். முறுக்கிக்கொண்டு வியட்நாம் சென்ற ராகுலும்கூட மனமிறங்கிவிட்டார் என்றே சொல்லப்படுகிறது. எனவே, மீண்டும் தி.மு.க.விடம் சரண்டர் ஆகிவிடலாமா என டெல்லி காங்கிரஸ் தலைமை தீவிர யோசனையில் மூழ்கியிருக்கிறது. அதேநேரம், திமுக மீண்டும் காங்கிரஸை ஏற்குமா என்பது தான் மிகப்பெரிய சஸ்பென்ஸ்" என்றார்.

ஆட்சிக்கவிழ்ப்பு சாத்தியமே இல்லை!

ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமா என்று அரசியல் விமர்சகர் நந்தகுமாரிடம் கேட்டோம். த.வெ.க.வைச் சேர்ந்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா மற்றும் மதுரை மத்தி எம்.எல்.ஏ. முஸ்தபா, தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோரின் கருத்துகளை வைத்து பார்க்கும்போது திமுகவும், அதிமுகவும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான செயலில் இறங்கியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால், த.வெ.க.வின் கூட்டணிக் கட்சிகளும், ஆதரவளிக்கும் கம்யூனிஸ்ட்டுகளும் அதற்குத் துணைபோக மாட்டார்கள். அப்படியே கம்யூனிஸ்டுகளும், வி.சி.சு.வும் சென்றால்கூட காங்கிரஸும், ஐயு.எம்.எல் கட்சியும் கண்டிப்பாக வெளியேற மாட்டார்கள். அதனால் ஆட்சிக் கவிழ வாய்ப்பில்லை.

தவெக எம்.எல்.ஏ.க்களில் யார் கோடிகளில் செலவு செய்தது.. இப்போது கடன்பட்டுக் கிடக்க? விஜய் என்கிற முகத்துக்காகத்தான் வாக்குகள் விழுந்தன. அப்படியே திமுகவின் மூளைச்சலவைக்கு அடிபணிந்து தவெக எம்.எல்.ஏக்கள் சென்றாலும், அக்கட்சியில் கவுன்சிலர் பதவிகூட கொடுக்க மாட்டார்கள். அ.தி.மு.க.வை 'அமித் ஷா திமுக' என விமர்சித்த திமுகவினர், அதே அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தால்கூட புதிய ஆட்சியை அமைக்க இயலாது. எனவே, ஆட்சிக் கவிழ்ப்புக்கான அஸ்திரங்கள் எதுவும் எடுபடாது" என்றார் தெளிவாக அரசியல் பரமபதம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow