உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன் அதை தேவி தியேட்டருல தினம் தேடி தேடி அலைஞ்சேன் என்று திரைப்படங்களில் பாடல்கள் எழுதும் அளவிற்கு பிரபலமான ஒரு தியேட்டர் தான் உதயம் தியேட்டர். 80 களில் சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன் என தொடங்கி 90-களில் விஜய், அஜித் என தமிழ் சினிமா பிரபலங்களின் கோட்டையாக அந்தந்த காலக்கட்டங்களில் உதயம் தியேட்டர் திகழ்ந்துள்ளது. பல படங்கள் 100 நாட்களுக்கும் மேலாக ஓடிய தியேட்டர்களில் உதயம் தியேட்டரும் ஒன்று. குறிப்பாக ரஜினி படம் என்றாலே உதயம் தியேட்டரில் சென்று தான் பார்ப்போம் என்றளவிற்கு ரஜினியின் தீவிர ரசிகர்கள் இருந்துள்ளனர்.
தற்போது உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டகளில் முதல்நாள் முதல் காட்சியை பார்க்கும்போது மட்டும் தான் ஒரு ரசிகன் தன் கொண்டாட்ட உணர்வை எவ்வித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இரண்டாவது நாள் அதே ரசிகன் கோஷம் போட்டால் சுற்றியுள்ள பிறர் அந்த ரசிகனை ஏதோ வேற்றுகிரகவாசி போல் தான் பார்ப்பார்கள். ஆனால், உதயம் தியேட்டரை பொறுத்தவரை நிலைமையே வேறு. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு காட்சியும் எந்த ஒரு சினிமா ரசிகனாக இருந்தாலும், தன் கொண்டாட்டத்தை எந்தவித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தக் கூடிய ஒரே இடமாக தன் கடைசி நாட்கள் வரை இருந்துள்ளது உதயம் தியேட்டர்.
அன்றைய காலக்கட்டத்தில் என்னத்தான் பிற தியேட்டர்களில் டிக்கெட்டுகள் குறைந்த விலையில் விற்கப்பட்டிருந்தாலும், சிறிது அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்ட உதயம் தியேட்டரிலேயே தான் சாமானிய மக்கள் திரைப்படங்களை பார்க்க ஆர்வம் காட்டினர்.அந்த அளவிற்கு ஏழை, எளிய மக்களின் ஆதர்ச தியேட்டராக உதயம் தியேட்டர் இருந்துள்ளது.
உதயம், சூரியன், சந்திரன், மினி உதயம் என நான்கு திரைகளை கொண்டிருந்த உதயம் தியேட்டர், 40 ஆண்டு காலமாக சென்னை சினிமா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக, எண்ணற்ற நினைவுகளை சுமந்து நிற்கிறது.மல்டிபிளக்ஸ் கலாச்சாரம் சென்னையில் தலைத்தூக்கிய பிறகு ‘உதயம்’ தியேட்டரின் மவுசு என்பது மெல்ல மெல்ல குறைய தொடங்கியது என்பதே நிதர்சனம்.
பல்வேறு சட்ட சிக்கல்களால் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருந்த உதயம் தியேட்டர் 2009 ஆம் ஆண்டு பரமசிவம் பிள்ளையால் ரூ.80 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது. அன்று முதல் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக உதயம் தியேட்டரை சுற்றி ‘இப்போது விற்கப்படுகிறது, நாளை விற்கப்படுகிறது’ என்ற வதந்திகள் கிளப்பட்டு வந்தன. ஆனால், அது இம்முறை உண்மையாகியுள்ளது. இங்கு 25 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதால், உதயம் தியேட்டர் நிரந்தமாக தனது மூடுவிழாவை காணவிருக்கிறது. சென்னை சினிமா ரசிகர்களின் இதயமாக இருந்த உதயம் தியேட்டரின் நினைவுகள் சினிமா உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்.