தாய்ப்பால் தானம் செய்வதில் கின்னஸ் சாதனை- யார் இந்த ஆலிஸா ஆக்லெட்ரீ?
2,645.58 லிட்டர் அளவு தாய்ப்பாலினை தானம் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் ஆலிஸா. இவரால் சுமார் மூன்றரை லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகளவில் தாய்ப்பால் தானம் செய்து, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார், டெக்ஸாஸை சேர்ந்த ஆலிஸா ஆக்லெட்ரீ.
பச்சிளம் குழந்தைக்கு இறைவன் கொடுத்துள்ள வரம், 'தாய்ப்பால்'. இயல்பாகவே மகப்பேறுக்குப் பிறகு சுரக்கும் தாய்ப்பாலைப் பருகும் வாய்ப்பு, சில சமயங்களில் சிசுவுக்குக் கிடைக்காமல் போய்விடும். மருத்துவக் காரணங்களால் ஒரு பெண்ணுக்குப் போதுமான அளவு பால் சுரக்காமல் போவது, பிரசவத்தின் போது தாய் இறந்து போவது போன்ற தருணங்களில் இதுபோல நிகழ்வது உண்டு. அத்தகைய சமயங்களில் பாலூட்டும் தாய்மார்கள், தங்களின் குழந்தையின் தேவைக்கு அதிகமாகச் சுரக்கும் பாலை இதற்கெனவே இயங்கும் வங்கிகளுக்குத் தானமளிக்கிறார்கள்.
.
அதன்படி, 36 வயது பெண்ணான ஆலிஸா, இதுவரை தானம் செய்திருக்கும் தாய்ப்பாலின் அளவு 2,645.58 லிட்டர். இதன் மூலமாகப் பலனடைந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது மூன்றரை லட்சத்தைத் தாண்டும். தாய்ப்பாலையே தங்கள் வளர்ச்சிக்குச் சார்ந்திருந்தக் குறைப்பிரசவம் மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பலரும் பயன்பெற்றுள்ளனர். இதற்கு முன்பாக சாதனையாகக் கருதப்பட்டது, ஆலிஸா ஆக்லெட்ரீ 2014-ம் ஆண்டில் 1,569.79 லிட்டர் தானம் செய்த நிகழ்வுதான். அதைத் தற்போது இவரே முறியடித்துள்ளார்.
தனது முதல் மகன் கைல் பிறந்த பிறகு தாய்ப்பால் தானம் செய்யத் தொடங்கியுள்ளார், ஆலிஸா. இவர், தமது தாய்ப்பாலை வடக்கு டெக்ஸாஸில் இருக்கும் தாய்ப்பால் வங்கிக்குத் தானமாக அளித்து வந்திருக்கிறார். "நான் ஒவ்வொரு முறையும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை பாலை பம்ப் செய்து, குளிர்சாதனப் பெட்டியிலிருக்கும் 'ஃப்ரீஸர்' நிரம்பும் வரை சேமித்து, உறையவைத்து, தாய்ப்பால் வங்கிக்கு வழங்குவேன். தாய்ப்பால் தானமளிப்பதால் எனக்கு எவ்வித சிக்கலும் ஏற்பட்டத்தில்லை” என்று சொல்லும் ஆலிஸா, தாய்ப்பால் தானம் குறித்து மற்ற பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறாராம்.
தாய்ப்பாலின் நன்மைகள்:
குழந்தையின் சரியான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மற்றும் உயிரியல் ரீதியாகச் செயல்படும் இன்றியமையாத காரணிகளின் கலவை, தாய்ப்பாலில் அடங்கியிருக்கின்றன. குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப வைட்டமின்கள், புரதம், கார்போஹைட்ரேட்கள், தாது உப்புகள் மற்றும் கொழுப்புகளின் அளவைத் தாய்ப்பால் கச்சிதமாகக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல்; தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
நோயெதிர்ப்பு ஆற்றல்மிக்கது; எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது. குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவும் புரோலேக்டின், ஆக்ஸிடோசின் லெப்டின், க்ரெலின் உள்ளிட்ட ஹார்மோன்களும் தாய்ப்பாலில் உள்ளன. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு IQ அளவும், கற்றுக்கொள்ளும் ஆற்றலும் அதிகமிருக்கும் என்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






