இந்தியனா? வெஸ்டர்னா? எந்த கழிப்பறை பெஸ்ட் தெரியுமா?
கழிப்பறைகள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு பற்றி ஒவ்வொருவருக்கும் விழிப்பு உணர்வு தேவை. உலகளவில் இரண்டு விதமான கழிப்பறைகள் தான் நாம் பயன்படுத்துகிறோம். ஒன்று இந்திய முறையில் குத்தவைத்து உட்கார்வது, மற்றொன்று மேற்கத்திய முறையில் நாற்காலியில் உட்கார்வது போன்று உட்கார்வது. சமீப வருடங்களாகவே நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் மட்டும் அல்லாமல் தனி வீடுகளிலும் மேற்கத்திய கலாச்சார பாணியில் வெஸ்டர்ன் கழிப்பறைகளைப் பார்க்க முடிகிறது. இவை இரண்டின் நன்மைகள் என்ன? அதன் தீமைகள் என்ன? என்பதைத் தெரிந்துகொள்வோமா?
ஜெமினி தனா
இந்தியன் கழிப்பறையின் நன்மைகள்
பாரம்பரியமாக நாம் பயன்படுத்திவந்த இந்திய கழிப்பறையில் உட்கார்வதே ஆசனம் செய்வது போன்று தான். குந்தவைத்து உட்கார்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. சிறுவயது முதலே இதை பழக்கும் போது மூட்டுகளுக்கு வலு கொடுக்கும்.
மலாசனம் என்று சொல்லும் இந்த முறையில் உட்காரும் போது உடலில் மலம் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அடிவயிறு தொடர்பான பிரச்சனைகள் இல்லாமல் செரிமானம் நன்றாக இருக்கும். முந்தைய காலங்களில் கர்ப்பிணிகளுக்கு இயற்கையான முறையில் பிரசவம் ஆக இதுவும் ஒரு காரணம்.
இந்தியன் கழிப்பறையில் உட்கார்ந்து மலம் கழிப்பதால் நோய்த்தொற்று இருக்காது. குறிப்பாக பெண்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்றுநோய் அபாயம் இருக்காது. மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.மேலும் கிருமித்தொற்று ஏற்படுவதும் தவிர்க்கப்படும். கழிவறை பயன்படுத்திய பிறகு தண்ணீர் குறைவாக தேவைப்படும். சுத்தம் செய்வது எளிது. பராமரிப்பும் எளிதாக இருக்கும். அதிக இடம் தேவைப்படாது.
இந்தியன் கழிப்பறையால் பாதிப்பு உண்டா?
வயதானவர்களுக்கு மூட்டு பிரச்னைகள் இருந்தால் அவர்களால் உட்கார முடியாது. சிலருக்கு அசெளகரியத்தை கொடுக்கும். நீண்ட நேரம் குந்துகால் இட்டு உட்கார முடியாதவர்களுக்கும் இது சிக்கலானது. அறுவை சிகிச்சை போன்ற மருத்துவ நிலைமைகளுக்கு பிறகு உட்கார்ந்த நிலையில் மலம் கழிப்பது கடினமாக இருக்கும்.
வெஸ்டர்ன் கழிப்பறையின் நன்மைகள்
வசதியான நிலையில் உட்கார்ந்து மலம் கழிக்கலாம். குந்துவதில் சிரமம் இருப்பவர்களுக்கு இந்த கழிப்பறை நன்மை பயக்கும். உடல் இயக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு இவை ஏற்புடையதாக இருக்கும். வயதானவர்கள், அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு இந்த வகை கழிப்பறை ஏற்புடையதாக இருக்கும்.
வெஸ்டர்ன் கழிப்பறையின் தீமைகள்
அதிக தண்ணீர் பிடிக்கும். தண்ணீர் செலவு அதிகமாக இருக்கும்.கிருமித்தொற்று எளிதாக பரவும். மலம் கழித்துவிட்டு, தண்ணீரை ப்ளஷ் செய்யும் போது கிருமிகள் ஆறு அடிக்கு மேல் பரவும் என்று எச்சரிக்கிறார்கள். இந்த வகை கழிவறையானது, பாக்டீரியாக்களின் கூடாரமாக இருக்கும். நேரடியாக மேற்பரப்பில் அமர்ந்திருப்பதால், துடைத்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்வது அவசியமாகிறது. அதனால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம்.மலம் முழுமையாக வெளியேறாததால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகலாம். செரிமான கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.வெஸ்டர்ன் கழிப்பறைகள் அமைப்பதற்கு அதிக இடம் தேவை.
வயதானவர்கள் இருக்கும் இடங்களில் கழிப்பறைகள் எப்படி இருக்க வேண்டும்?
வீடு கட்டும் போது கழிப்பறைகளில் வயதானவர்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நீண்ட கைப்பிடிகள் அமைக்க வேண்டும். வயதானவர்கள் பெரும்பாலும் கழிப்பறையில் வழுக்கி விழுவது அதிகம் என்பதால் கழிவறையை ஈரம் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். கழிப்பறை சுத்தம் செய்வதற்கு இயற்கையான கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும். கைகளை சுத்தம் செய்யவும் கிருமிநாசினிகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்த வேண்டும்.
கழிப்பறையில் குப்பைக் கூடைகள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதை அடிக்கடி சுத்தம் செய்யவும் வேண்டும். தாழ்ப்பாளை எளிதில் அகற்றும்படியாக கழிப்பறை கட்டுவது பாதுகாப்பானது. வீட்டில் அதிக கிருமிகள் வாழும் இடமாக கழிப்பறை உள்ளது என்கிறார்கள் சுகாதாரத்துறை நிபுணர்கள். இனி உங்கள் கழிப்பறை பயன்பாட்டிலும் கவனம் செலுத்துங்கள்.
What's Your Reaction?

