இளமையின் ரகசியத்தை உடைக்கும் ‘பூவே பூச்சூடவா’ நதியா!
‘பூவே பூச்சூடவா', ‘எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நதியா குமுதம் இதழுக்காக வழங்கிய எக்ஸ்க்ளூசிவ் நேர்காணல்.

எவர்க்ரீன் நடிகை, ஸ்டைல் ஐகான், ஃபிட்னெஸ் ப்ரீக்... இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவர், மக்கள் மனதில் என்றும் நிலைகொண்ட ‘பூவே பூச்சூடவா' நதியா. ஒரு தெலுங்குப் பட ஷூட்டிங் இடைவேளையில் அவரைச் சந்தித்தோம்.
ஹீரோயினா உச்சத்துல இருந்த நேரத்துல சட்டுன்னு சினிமாவை விட்டு விலகி, திருமணம் செஞ்சுக்கிட்டீங்க. பேரு, புகழ் இதையெல்லாம் விட்டுட்டு, திடீர்னு ஒரு முடிவை உங்களால் எப்படி எடுக்க முடிந்தது?
"நான் எப்பவும் பிராக்டிகல் வுமன். சினிமாவுல நடிக்கிறதுக்கு முன்பே எனக்கு என் கணவரைத் தெரியும். அப்போ அவர் படிச்சிட்டு இருந்தார். அவர் படிப்பு முடிஞ்சு ஒரு வேலையில் செட்டில் ஆன பிறகு, எங்க திருமணம்னு முடிவு பண்ணியிருந்தோம். அது மாதிரியே அவர் அமெரிக்காவில் செட்டில் ஆன பிறகு, நாங்க திருமணம் செஞ்சிக்கிட்டோம்.
லைஃப்ல அடுத்த கட்டத்துக்குப் போக, நான் சுயமா எடுத்த முடிவுதான் சினிமாவில் இருந்து விலகுனது. இந்தப் பேரு, புகழ், பணம் பத்தியெல்லாம் நான் பெருசா நினைக்கிறதே இல்லை."
உங்கள் கரியர்ல பெரிய இடைவெளி இருந்தாலும், உங்க புகழ் அப்படியே இருக்கே?
"நான் எங்கே இருந்தாலும் அது அமெரிக்கா, மும்பையா இருந்தாலும், தமிழ் மக்கள் மேல நான் வெச்சிருக்கிற அன்பு என்னைக்கும் மாறினதில்லை. அதே மாதிரி, தமிழ் மக்களும் என் மேலே வெச்சிருக்கிற அன்பு துளிகூட குறையாம இருக்கு. அதைப் பத்தி பேசறதுக்கு எனக்கு வார்த்தைகளே இல்லை. ஒருத்தர் இங்கே இல்லாம வேற ஊர்ல, அதுவும் சினிமாவைவிட்டு விலகி இருக்குறப்ப, இன்னும் என் பேர்ல அதே அளவு அன்பும் பாசமும் வெச்சிருக்கறதைப் பத்தி நான் என்ன சொல்றது? கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்."
வெளியில நீங்க எப்பவுமே ஒரு செலிபிரிட்டி. வெளி உலகுல கிடைக்கிற அதே பாராட்டு ஒருத்தருக்கு வீட்ல கிடைக்கிறது கஷ்டம். ஒரு பெண்ணா இதைப் பத்தி யோசிச்சிருக்கீங்களா?
"ஒரு விஷயத்தை நல்லா செய்றப்ப நிச்சயமா அதுக்குப் பாராட்டு கிடைக்கணும்னு நினைப்பேன். இதுவொரு சினிமா நடிகைக்கு மட்டும்னு இல்ல. வீட்டுல ரசிச்சு ஒரு சமையல் செய்றோம்னா, அது நல்லா இருந்து அதைச் சாப்பிடுற கணவர், குழந்தைகளிடமிருந்து பாராட்டு கிடைச்சாதான் அதுல ஒரு மரியாதையே இருக்கு.
அதே சமயத்தில நம்ம வேலையில ஏதாவது தப்பு செஞ்சோம்னா, உதாரணத்துக்கு ஒரு ஸீன்ல சரியா நடிக்கலைன்னா வெளியில இருக்கிறவங்க பாராட்டினாகூட, வீட்ல இருக்கிறவங்கதான் கரெக்டா அதைச் சுட்டிக் காட்ட முடியும். அதனால எப்பவுமே நமக்குப் பாராட்டு மட்டுமே கிடைக்கணும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன்.”
இப்போதும் இளமை மாறாமல் அப்படியே இருக்குறதுக்கு உங்க இன்ஸ்பிரேஷன் யாரு?
"இளமை அப்படீங்கிறது, வெறும் தோற்றம்னு மட்டும் நினைக்கவே மாட்டேன். நம்ம மனசு, எண்ணங்கள், ஆக்டிவிட்டீஸ்... இதெல்லாமும் சேர்ந்ததுதான். குண்டா இருந்தாலும், ஒல்லியா இருந்தாலும், சுறுசுறுப்பா இருக்கிறதுதான் ஒருத்தரோட இளமையின் அடையாளம்.
என் அப்பா சின்ன வயசுலேயே என்னையும் தங்கையையும் ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப என்கரேஜ் செய்வார். காலேஜ் படிக்குறப்ப ரன்னிங், த்ரோ பால்னு விளையாட்டுகள் விளையாடி, பரிசும் வாங்கி இருக்கேன். அதெல்லாம்தான் இப்பவும் என்னை ஆரோக் கியமா வெச்சிருக்கு முக்கியமா எது தேவையோ அதை மட்டும் சாப்பிடணும். தினமும் உடற்பயிற்சி செய்றதோட, மனசையும் ரொம்ப ஃபிட்டா வெச்சுக்கணும். எந்த வேலை செஞ்சாலும், அதுல முழுசா நம்மளோட கான்சன்ட்ரேஷன் இருக்கணும். அதுவே ஒரு தியானம் போல நமக்கு அமைஞ்சுடும்" என்றார்.
முழுமையான நேர்க்காணல் தொகுப்பிற்கு குமுதம் இதழினை காணவும். (கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா தேசிகன்/குமுதம் / 27.08.2025)
What's Your Reaction?






