வங்கிக் கணக்குகள் ஆட்டை.... குறைந்த விலைக்கு கிரிப்டோ காயின்... நூதன மோசடிக் கும்பல் கைது
பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை ஆட்டையைப் போட்ட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். யார் அவர்கள்? சிக்கியது எப்படி? பார்ப்போம்...
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அந்த புகாரில், தங்களது அலுவலகத்தின் கிளை அலுவலகம் ஒன்று துபாயில் இயங்கி வருவதாகவும், அந்த அலுவலகத்திற்கு தேவையான பணத்தை USDT (Crypto Coin) ஆக மாற்றி அனுப்புவது வழக்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக, குறைவான விலைக்கு USDT ஆக மாற்றி தருவதாக சிலர் தங்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது நிறுவண பணத்தை மீட்டுத்தருமாறும் கூறியிருந்தார்.
அதன்பேரில், தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தனியார் நிறுவனத்திடம் பணத்தினை தேனியில் உள்ள ஒரு வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டு, குற்றவாளிகள் அந்த பணத்தை எடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் தேனிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டபோது, மர்மநபர்கள், எதுவுமறியாத அப்பாவிகளிடம் பணம் கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கைப் பெற்றுக் கொண்டதும், தனியார் நிறுவனங்களிடம் இந்த வங்கிக் கணக்கை கொடுத்து பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டும், மோசடியில் ஈடுபட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த அபிராஜா, லோகநாதன், குமரேசன், மகேஷ்குமார், மதுரை பொன்மேனி நகர் அஸ்வந்த், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த முகமது இஸ்மாயில் பர்வேஷ் ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவர்களிடம் இருந்து 10லட்சத்து 92ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு சொகுசுக்கார், 8 செல்போன்கள், 3 ஐபேடுகள், 33 சிம் கார்டுகள், 20 ஏடிஎம் கார்டுகள், 4 வங்கி கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
What's Your Reaction?