அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் இனி பயன்படுத்தவே கூடாது...உறுதிசெய்த உயர்நீதிமன்றம்...

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது தடையை நிரந்தரமாக்கிய சென்னை உயர்நீதிமன்றம்.

Mar 18, 2024 - 15:49
அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் இனி பயன்படுத்தவே கூடாது...உறுதிசெய்த உயர்நீதிமன்றம்...

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என்ற இடைக்காலத் தடையை நிரந்தரமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஓபிஎஸ் தரப்பு தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் எனவும் ஓபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தவறு என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தன்னை அழைத்துக் கொள்வதில் தங்களுக்கு எந்தபித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என அழைப்பதை எதிர்ப்பதாகவும், வேண்டுமானால் வேறு கட்சி தொடங்கி ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் அழைத்துக்கொள்ளட்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், வழக்கில்  இன்று(மார்ச்-18) தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தரமாக்கி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து  தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் நாளை (மார்ச்-19) மேல்முறையீடு செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow