பிரம்மாவின் தலையை கொய்த சிவன்... ஆணவம் அழிக்கும் திருக்கண்டியூர்!

பிரம்மாவின் ஆணவத்தை அடக்கிய சிவபெருமான் வழிபட்ட திருக்கண்டியூர், மும்மூர்த்திகளுக்கும் கோயில் அமைந்துள்ள சிறப்புமிக்க தலமாகவும், ஆணவம், கர்வம் நீக்கும் திருத்தலமாகவும் போற்றப்படுகிறது.

Sep 26, 2026 - 08:00
பிரம்மாவின் தலையை கொய்த சிவன்... ஆணவம் அழிக்கும் திருக்கண்டியூர்!

ஆலய உலா..! - வி.ராம்ஜி

காவிரியில் அமைந்துள்ள திருத்தலங்கள் ஏராளம். இதில் வடகரைத் திருத்தலங்கள், தென்கரைத் திருத்தலங்கள் என்று பிரித்துத் தொகுக்கப்பட்டுள்ளன. சோழதேசத்தின் காவிரி தென்கரையின் 12வது சிவஸ்தலமாகத் திகழ்கிறது திருக்கண்டியூர் திருக்கோயில். அஷ்ட வீரட்டானத் தலங்களில் இதுவும் ஒன்று. திருக்கண்டியூர், ஆதி வில்வாரண்யம், வீரட்டம் என்றெல்லாம் அழைக்கப்படும் திருக்கண்டியூர் கோயில், தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் தேவாரம் பாடிய தலம் இது என்கிறது ஸ்தல புராணம்!

இங்கேயுள்ள சிவனாரின் திருநாமம் பிரம்ம சிரகண்டீஸ்வரர். அதாவது பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கொய்த புராணத்தொடர்பு கொண்ட தலம் என்பதால், இந்தத் திருநாமம் சிவனாருக்கு! மேலும் பிரம்மநாதர், ஆதி வில்வவனநாதர், வீரட்டானேஸ்வரர் என பல திருநாமங்கள் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீமங்களநாயகி. கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வம். தலம், தீர்த்தம்,மூர்த்தம் எனும் பெருமைமிக்க திருக்கண்டியூரில், நந்தி தீர்த்தம், குடமுருட்டி, தட்ச தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கபால தீர்த்தம் என தீர்த்த விசேஷங்கள் நிறைந்த திருக்கோயில்தான் திருக்கண்டியூர்!

பிரம்மா வழிபட்ட தலம், சூரிய பகவான் வணங்கிய தலம், சேக்கிழார் பெருமான், அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் முதலானோர் வந்து வழிபட்ட தலம் என திருக்கண்டியூருக்கு புராணப் பெருமைகளும் புராதனப் பெருமைகளும் ஏராளம்.

சிவனாருக்கு ஈசானம், தத்புருஷம்,  அகோரம்,  வாமதேவம்,  ஸத்யோஜாதம் என ஐந்து திருமுகங்கள் உண்டு. இதேபோல் பிரம்மாவுக்கும் சிவனாருக்கு இணையான முகங்கள் உள்ளன. இதில் கர்வம் வந்து ஆட்டம்போட்டது பிரம்மாவுக்கு. இந்த ஆணவத்தை அடக்குவதன் பொருட்டு, பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கொய்தான். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்தத் தோஷத்தைப் போக்குவதற்காக , ஆனானப்பட்ட சிவபெருமான், தவமிருந்த திருத்தலம் என்றும் ஸ்தல புராணம் கொண்டாடப்படுகிறது.

ஹரன் என்றால் சிவன். ஈசனின் பிரம்மஹத்தி தோஷத்தை மகாவிஷ்ணு போக்கினார். இதனால் இங்கே சிவாலயத்துக்கு எதிரிலேயே பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இங்கே உள்ள பெருமாள், ஹர சாப விமோசனப்பெருமாள் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். அதேபோல், பிரம்மா தன் கர்வத்தையும் ஆணவத்தையும் தொலைத்துவிட்டு, மனைவி சரஸ்வதி தேவியுடன் சிவபெருமானை வணங்கியதால், வேறெந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் சரஸ்வதியும் சந்நிதி கொண்டிருக்கிறாள்.

கல்வெட்டில் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர்  என இந்தக் கோயில் குறித்து குறிப்புகள் உள்ளன. சிவனுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலம் இது. இங்கே, சிவலிங்கத்திருமேனியராக மேற்கு நோக்கியிருக்கிறார் ஈசன். திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கே இந்தக் கோயிலுக்கு வந்து எழுந்தருளிக் காட்சி தருகிற வழக்கம், இன்றைக்கும் உள்ளது. அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான  சடங்கு நடைபெறுவதை தரிசித்தாலே, திருமணத் தடைகள் நீங்கப்பெறலாம் என்பது ஐதீகம்!  அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பார்கள்.

பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள். இதனால்தான் பிராகாரத்தில் சரஸ்வதிதேவியுடன் பிரம்மாவுக்கும் சந்நிதி அமைந்துள்ளது. சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.

சாதாதாப என்ற முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இந்தத் தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் எனும் பெயர் அமைந்தது. ஆரண்யம் என்றால் காடு. வில்வ மரங்கள் அடர்ந்த வனமாகத் திகழ்ந்ததால் இந்தப் பெயர் அமைந்தது என்றும் சொல்லப்படுகிறது.

சப்த ஸ்தான திருத்தலங்களில் திருக்கண்டியூர் கோயிலும் உண்டு. அதேபோல, அஷ்ட வீரட்டான கோயிலும் இந்தத் தலமும் ஒன்று என்கிற பல பெருமைகள் கொண்ட திருக்கண்டியில் அமைந்துள்ள பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து வழிபட்டால், நம் ஆணவம் அழியும்; கர்வம் தொலையும்; பாவங்கள் நீங்கும்; புண்ணியங்களால் உண்டான பலன்கள் பெருகும்!

மேற்கு நோக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுறத் திகழ்கிறது ஆலயம். கொடிமரம், நந்தி, பலிபீடம் உள்ளன. அதேபோல், கொடிமர விநாயகரும் காட்சி தருவது சிறப்பு. வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் திகழ்வதை அரிது என்கிறார்கள்.

அம்பாள் மங்களாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நின்ற திருக்கோலத்தில், . அபயவரத முத்திரையுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் மங்கலம் ததும்ப, கருணையே உருவெனக் கொண்டு காட்சி தருகிறாள்!

அர்த்த மண்டபத்தில் சப்தஸ்தான தலங்களைக் குறிக்கும் ஏழு லிங்கங்கள், பஞ்சபூத தலங்களைக் குறிக்கும் ஐந்து லிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்திநாதர் சந்நிதி முதலான லிங்கத் திருமேனிகளைத் தரிசிக்கலாம்! நவக்கிரகங்களில் சூரிய பகவான் தன் இரண்டு மனைவியருடன் காட்சி தருகிறார் இங்கே! மேற்கு நோக்கிய சிவனாரும் கருவறை வாயிலின் இரண்டுபக்கமும் முருகப்பெருமானும் எழுந்தருளியிருப்பது அதிசயம், அரிது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

பிரம்மா, கரத்தில் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சி தருகிறார். அவருக்கு வலதுபுறம் சரஸ்வதி அழகிய திருமேனியுடன் காட்சி அளிக்கிறாள். இங்கே... அர்த்தநாரீஸ்வரர் திருமேனி கொள்ளை அழகுடன் திகழ்கிறது. ரிஷபத்தின் மீது தன் ஒரு கையை ஊன்றியபடி, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தர... இன்னொரு பாதியாக பார்வதிதேவி காட்சி தருகிறாள். ஆண் பாதியில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு ஏந்தியிருக்க, பெண் பாதியில் சேலை அணிந்த காலைக் குத்திட்டு உட்கார்ந்து அதன் மீது மலர் ஏந்தும் கரத்தை ஊன்றித் தலையைச் சுற்றி சாய்ந்து காட்சி, அரிதினும் அரிது!

ஒவ்வொரு மாசி மாதம் 13ம் தேதி, 14ம் தேதி, 15ம் தேதி ஆகிய தினங்களில், மாலையில் 5.45 முதல் 6.15 வரை அந்தி சாயும் நேரத்தில், சூரிய கிரணங்கள் சிவனாரின் திருமேனியின் மீது படுகிற அபூர்வமும் கோயிலின் தனிச்சிறப்பு!

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில், திருவையாறுக்கு மூன்று கிலோமீட்டர் முன்னதாக அமைந்துள்ள திருக்கண்டியூருக்கு பஸ் வசதிகள் உள்ளன. மேலும் சாலைக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது கோயில். திருக்கண்டியூர் தலத்தில், பிரம்ம சிர கண்டீஸ்வரர் எனும் சிவாலயம், ஹரசாப விமோசனப்பெருமாள் கோயில் இருப்பது போல், பிரம்மாவுக்கும் கோயில் உள்ளது. ஆக, மும்மூர்த்திகளுக்கும் கோயில் அமைந்த திருக்கண்டியூர், நம் பாவங்களையெல்லாம் போக்கி வரம் அருளுகிற தலமாகப் போற்றப்படுகிறது!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow