படம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பிரச்னை... தனுஷ் ‘D56’ பூஜையில் என்ன நடந்தது? 

தனுஷின் ‘D56’ படத்தின் பூஜை மாரநாடு கருப்பண்ணசாமி கோயிலில் நடைபெற்ற நிலையில், உரிய அனுமதியின்றி கேமரா கொண்டுவந்ததாக எழுந்த எதிர்ப்பால் படக்குழுவினருக்கும் கோயில் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Sep 25, 2026 - 17:30
Sep 25, 2026 - 16:50
படம் ஆரம்பிக்கிறதுக்குள்ளயே பிரச்னை... தனுஷ் ‘D56’ பூஜையில் என்ன நடந்தது? 

மாரநாட்டில் உள்ள இந்தப் பிரசித்தி பெற்ற கருப்பண்ணசாமி கோயில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தனுஷின் 56-வது படத்தின் தொடக்க நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் இன்று (செப்.,25) கோயிலில் திரண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், வடிவேலு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தின் சார்பில் கோயிலுக்கு 18 அடி நீளமுள்ள பிரம்மாண்ட அரிவாளை நேர்த்திக்கடனாக வழங்கவும், கிடா வெட்டி வழிபாடு நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வுகளை படமாக்குவதற்காக கேமராவும் கோயில் வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அறநிலையத் துறை ஊழியர் பெரியசாமி எதிர்ப்பு தெரிவித்தார். கோயிலுக்குள் கேமரா பயன்படுத்துவதற்கு முன்பாக உரிய அனுமதி பெறப்படவில்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினருக்கும் கோயில் நிர்வாகத் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் பேசி நிலைமையை சமரசப்படுத்தினர். இதையடுத்து படக்குழுவினர் கோயில் வளாகத்திலிருந்து வெளியேறினர்.

இதற்கிடையே, தனுஷ் சார்பில் 18 அடி நீள அரிவாள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்காக 20 கிடாய்கள் வெட்டி மட்டன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து இயக்குகிறார். தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

‘D56’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் தொடக்க நிகழ்ச்சியிலேயே கேமரா அனுமதி தொடர்பான சர்ச்சை ஏற்பட்டிருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow