CM 2031.. டெஸ்லா பயணம்.. திருமாவிற்கு முதல்வர் ஆசையா? வைரல் போட்டோவுக்கு பின்னால் இப்படியொரு ட்விஸ்ட்!

“CM 2031” எனக் குறிப்பிடப்பட்ட திருமாவளவனின் டெஸ்லா புகைப்படம் வைரலான நிலையில், அது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் புதிய அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Sep 21, 2026 - 11:30
CM 2031.. டெஸ்லா பயணம்.. திருமாவிற்கு முதல்வர் ஆசையா? வைரல் போட்டோவுக்கு பின்னால் இப்படியொரு ட்விஸ்ட்!

தமிழ்நாடு அரசியலில் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கான கணக்குகள் இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் டெஸ்லா காரில் பயணிப்பது போலவும், அந்த காரின் முன்பகுதியில் “CM 2031” என்ற வாசகம் இருப்பது போலவும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தப் புகைப்படத்தை விசிக ஆதரவாளர்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனால், 2031-ல் திருமாவளவனை தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற அக்கட்சியினரின் எதிர்பார்ப்பு வெளிப்படையாகத் தெரிவதாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் கிளம்பியுள்ளது.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சமீபத்தில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றிருப்பதாகவும், அடுத்தகட்ட இலக்கு ஆட்சியை கைப்பற்றுவதாகவும் பேசியிருந்தார். இந்தப் பேச்சு, 2031 சட்டசபைத் தேர்தலை மையமாக வைத்து பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தது.

அதோடு, தற்போதைய ஆட்சியிலும் விசிக இடம்பெற்றிருந்தாலும், அரசு மற்றும் ஆளும் தரப்பின் சில நடவடிக்கைகள் தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவ்வப்போது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகளும், சில நேரங்களில் திருமாவளவனின் விமர்சனங்களும் அரசியல் கவனம் பெற்றுள்ளன.

இந்தச் சூழலில்தான் “CM 2031” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால்... இங்கேதான் எதிர்பாராத திருப்பம்!

வைரலாகும் அந்தப் புகைப்படம் உண்மையான புகைப்படம் அல்ல. அது AI மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, புகைப்படத்தில் இருக்கும் காரின் நம்பர் பிளேட் தொடர்பான விஷயமே இதற்கான முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

திருமாவளவன் பயணிப்பது போல காட்டப்படும் கார் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனம் என புகைப்படத்தில் தெரிகிறது. மின்சார வாகனங்களுக்கு இந்தியாவில் பொதுவாக பச்சை நிறப் பதிவு எண் பலகை பயன்படுத்தப்படும் நிலையில், இந்தப் படத்தில் “CM 2031” என வெள்ளை நிறப் பலகை இடம்பெற்றிருக்கிறது. 

சுவாரஸ்யம் என்னவென்றால், இந்தப் படத்தின் உண்மைத் தன்மை குறித்து விவாதம் எழுவதற்கு முன்பே, விசிக ஆதரவாளர்கள் மட்டுமின்றி சில முன்னணி நிர்வாகிகளும் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களும் அந்தப் பதிவுகளின் கீழ் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் ஒரு புகைப்படம் தற்போது தமிழக அரசியல் சமூக வலைதளங்களில் தனி விவாதமாக மாறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow