நள்ளிரவில் பரபர மீட்டிங்.. பாஜகவை நோக்கி படையெடுத்த ”தலைகள்”.. ஆளுக்கு நாலு என முடிந்த டீலிங்?
மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை அழைத்து விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இதில் இருவருக்கும் தலா 4 தொகுதிகளை ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களுடன் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், அரசியலில் ஈடுபட்டு வரும் அவர், அண்மையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து அரசியல் மற்றும் பொது மேடைகளில் பகிர்ந்து வருகிறார்.
இருவரும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை கையில் எடுத்து செயல்பட்டு வரும் நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணையும் திட்டத்தை முன்னெடுத்தனர். அதன்படி, பாஜக தலைமை இருவரையும் தனித்தனியாக சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் இரு தரப்பும் தேனி தொகுதி கேட்டதால் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தேனி தொகுதியை டிடிவிக்கு வழங்குவதா?, ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்குவதா? என்ற குழப்பம் ஏற்பட்டது.
இதை முடிவுக்கு கொண்டு வர இருவரையும் ஒன்றாக அழைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷண் ரெட்டி, எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, யாருக்கு எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்டவைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது. பேச்சுவார்த்தையில் இறுதியில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுக்கு தலா 4 தொகுதிகளை உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடனான 2-ம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும், மெகா கூட்டணி அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். எந்த சின்னத்தில் போட்டி என செய்தியாளர்களின் கேள்விக்கு, இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
What's Your Reaction?