எண்ணெய் அபிஷேகம் செய்தால் ஆயுள் பலம்...திருநீலக்குடி மானோக்ஞநாதர் அற்புதம்!
நீலகண்டனாக சிவபெருமான் அருள்பாலிக்கும் திருநீலக்குடி திருத்தலத்தின் சிறப்புகளையும், மானோக்ஞநாதருக்கு நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம் மற்றும் மார்க்கண்டேயனுக்கு சிவன் அருளிய நீண்ட ஆயுள் வரம் குறித்த ஸ்தலபுராணத்தையும் விவரிக்கிறது இந்த ஆலய உலா.
பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி
’கண்டத்தில் இருந்து தப்பிச்சாச்சு’ என்று சொல்கிறோம். கண்டம் என்றால் கழுத்துப் பகுதி. அந்தக் கழுத்துப் பகுதியில் இருந்து வாய் வழியே மூச்சு வந்துவிட்டால் நல்லது. ஆலகால விஷத்தைக் குடித்ததால், சிவனாரின் கழுத்துப் பகுதி, அதாவது கண்டப்பகுதி நீலநிறமாக மாறியது என்கிறது புராணம். அதனால்தான் சிவனுக்கு நீலகண்டன் என்கிற திருநாமம் அமைந்தது. இந்தத் திருநாமத்துடன் சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில், கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. அந்த ஊரின் பெயரும் இதுதான்..! அதாவது திருநீலக்குடி.
கும்பகோணம் திருநீலக்குடி திருத்தலத்தின் நாயகன் சிவனாருக்கு இன்னொரு திருநாமம்... ஸ்ரீமானொக்ஞநாதர். அம்பாளின் திருநாமம் - அநூபமஸ்தனி அம்பாள். தலம், தீர்த்தம், மூர்த்தம் எனும் பெருமை மிக்க ஆலயம் இது. இங்கே உள்ள தேவி தீர்த்தம் சாந்நிதியம் நிறைந்தது. அதேபோல் பஞ்சவில்வம் கோயிலின் விருட்சமாகத் திகழ்கிறது.
ஆலகால விஷத்தை சிவன் உண்ட கதை தெரியும்தானே? தொண்டைப்பகுதியில் நின்றுவிட்ட விஷத்தின் தன்மையைப் போக்குவதற்காக், சிவனாரின் திருமேனிக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற ஆலயங்களில் இல்லாத அரிது என்கின்றனர் பக்தர்கள். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெறவேண்டும் என பக்தர்கள், நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.
இதிலொரு ஆச்சரியம்... அபிஷேகம் செய்தால், அபிஷேக திரவம் லிங்கதிருமேனிக்கு அருகில் வழிந்தோடும்தானே! ஆனால் மானோக்ஞநாதருக்கு அபிஷேகம் செய்தால், லிங்கத்திருமேனி அப்படியே நல்லெண்ணெயை உறிஞ்சிக்கொள்கிறது. பக்தர்கள் பிரார்த்தனைக்காகவும் நேர்த்திக்கடன் செலுத்தவும் எண்ணெய் வழங்கி குடம்குடமாக அபிஷேகித்தாலும் லிங்கத்துக்குள்ளேயே அத்தனையும் சென்று கலந்துவிடுகிறது.
இன்னொரு அதிசயம்... சந்தன அபிஷேகம் செய்தால், பிறகு தண்ணீரால் அபிஷேகித்து ஒரு மூர்த்தத்தை சுத்தம் செய்துவிட்டு, அடுத்த அபிஷேகம் செய்வார்கள். இங்கே, திருநீலக்குடியில் எண்ணெய் அபிஷேகம் செய்த பிறகு, தண்ணீர் விடுவதுமில்லை; துடைப்பதுமில்லை. எண்ணெய் ஊற்றிய பிசுபிசுப்பு கூட சிவலிங்கத்தில் இருக்காது என்பதை அதிசயித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
சிவாலயங்கள் பலவற்றிலும் லிங்கத்திருமேனிக்கு தைலாபிஷேகம், தைலக்காப்பு என்றெல்லாம் நடத்தப்படுவது வழக்கம். திருநீலக்குடி கோயிலின் சிறப்பு... எண்ணெய் அபிஷேகத்தை அம்பாளே தைலாபிஷேகத்துக்கு இணையாகச் செய்துவிடுகிறாள் என ஸ்தல புராணம் விவரிக்கிறது.
ஆயுள் தோஷ நிவர்த்தி ஸ்தலம் என திருநீலக்குடி திகழ்கிறது. அதேபோல் கிரக தோஷங்களைப் போக்கக்கூடிய க்ஷேத்திரம் என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் பக்தர்கள். மிருகண்டு முனிவருக்கு உள்ள ஒரே வருத்தம்... பிள்ளை பாக்கியம் இல்லையே என்பதுதான். அதற்காக இந்தத் தலத்து இறைவனை தவமிருந்து வேண்டினார். தவத்தின் பலனாக திருக்காட்சி தந்த சிவனார் ‘என்ன வரம் வேண்டும்’ எனக் கேட்டார்.
‘சந்தான பாக்கியம்’ என்றார் முனிவர். ’நீ கேட்டபடி நற்குணங்கள் கொண்ட மகன் பிறப்பான். ஆனால் அவனுக்கு அற்பாயுசு. பதினாறு வயது வரைதான் அவனுடைய ஆயுள்’ என்று சிவனார் சொன்னார். முனிவருக்கு மகனும் பிறந்தான். அவன் தான் மார்க்கண்டேயன். ‘என்றும் பதினாறு’, ‘என்றும் மார்க்கண்டேயன்’ என்கிறோமே... அந்த மார்க்கண்டேயன்.
மிகச்சிறந்தவனாக, நற்பண்புகள் கொண்டவனாக, சிவ பக்தனாக வளர்ந்த மார்க்கண்டேயனுக்கு பதினாறாம் வயது வந்தது. தந்தையும் தாயாரும் உண்மையை அவனிடம் சொல்ல, ‘அந்த சிவம்தானே நான் பிறக்க வரம் தந்தார். அவரிடமே முறையிடுகிறேன்’ என்று சொல்லி, பல சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டான் மார்க்கண்டேயன். அதன்படி திருநீலக்குடி எனும் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயன், அங்கே லிங்கத்திருமேனியாகத் திகழும் சிவனாரிடம் மன்றாடினான். கதறினான். கண்ணீர்விட்டான். ஆயுள் கேட்டான். வரம் கொடுங்கள் என வேண்டினான்.
’உன் பிறவிக்கு வயது பதினாறுதான். நீண்ட ஆயுளுடன் நீ வாழ்வாய். ஆனால் என்றும் பதினாறாகவே, பதினாறு வயது கொண்டவனாகவே நீ வாழ்வாய்’ என வரம் தந்தருளினார் சிவபெருமான் என்கிறது ஸ்தல புராணம்.
மிருகண்டு முனிவர், மார்க்கண்டேயன், பிரம்மா, வசிஷ்டர் முதலானவர்கள் தவமிருந்து வழிபட்ட புண்ணிய பூமி என திருநீலக்குடியைப் போற்றுகிறது புராணம். அப்பர் பெருமான் தேவாரம் பாடிய தலம் எனும் பெருமையும் இந்தக் கோயிலுக்கு உண்டு.
கும்பகோணத்துக்கு அருகிலும் திருவிடைமருதூருக்கு அருகிலும் அமைந்திருக்கிறது திருநீலக்குடி திருத்தலம். இங்கே வந்து, ஸ்ரீமானோக்ஞநாதரை எண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால், பிள்ளை பாக்கியம் கிடைக்கும். நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நீண்ட ஆயுள் பலம் தந்து காத்தருளுவார் மானோக்ஞநாதர்!
What's Your Reaction?



