வைகை ஆற்றில் இறங்கி தடம் பார்த்த கள்ளழகர்.. அழகர் மலைக்கு புறப்பட்டார்.. கண்ணீருடன் விடை கொடுத்த மதுரை மக்கள்
சித்திரை திருவிழாவுக்காக அழகர்கோவிலில் இருந்து வந்த கள்ளழகர் வைகையில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்து விட்டு இன்று மீண்டும் புறப்பட்டார். அதிகாலையில் வைகை ஆற்றில் இறங்கி தடம் பார்த்த கள்ளழகரை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
மதுரையில் சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் அழகர் கோவில் கள்ளழகர் ஆலயத்திலும் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. கடந்த 19ஆம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 21ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணமும் நடைபெற்றது. அதே நாளில் மாலையில் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் மதுரை யை நோக்கி புறப்பட்டார்.
22ஆம் தேதி மாசி வீதிகளில் சித்திரை தேரோட்டம் நடைபெற்ற அதே நேரத்தில் மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. 23ஆம் தேதியன்று தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை, தொடர்ந்து கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி அழகரை வழிபட்டனர்.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் மாலையில் தங்கக் குதிரையில் வண்டியூர் வீர ராகவப்பெருமாள் ஆலயத்திற்கு சென்று தங்கினார். அடுத்து வண்டியூரிலிருந்து தேனூர் மண்டபத்திற்குச் சென்று அங்கிருந்து கருட வாகனத்தில் எழுந்தருளினார். அழகரின் வரவுக்காக எதிர்பார்த்து வைகை ஆற்றில் காத்திருந்த மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்தார்.
ஏப்ரல் 24ஆம் தேதி இரவு ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளிய கள்ளழகர் தசாவதார கோலத்தில் காட்சி அளித்தார். மச்ச அவதாரம், கூர்மாவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணா அவதாரம், மோகினி அவதாரம் என பல அவதாரங்களில் காட்சி அளித்த அழகரை விடிய விடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளினார் கள்ளழகர். ஏப்ரல் 25ஆம் தேதியன்று மீண்டும் மதுரைக்கு வந்த கள்ளழகர் தான் இறங்கிய தடம் பார்த்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் மீண்டும் கோவிந்தா முழக்கமிட்டு வழிபட்டனர். இதனையடுத்து இரவில் தல்லாகுளத்தில் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. கருப்பண்ணசாமி கோயில் முன்பு பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து தங்கப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை நோக்கி புறப்பட்டார். மூன்று மாவடியில் கூடியிருந்த பக்தர்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர் மலைக்கு திரும்பும் கள்ளழகருக்கு வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் பக்தர்கள் பிரியாவிடை கொடுத்து அனுப்புகின்றனர்.
மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு நாளைய தினம் மலைக்கு திரும்பும் அழகருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் 21 திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்து வரவேற்பு அளிப்பார்கள். அத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
What's Your Reaction?