ஷீர்டி பாபாவை உள்ளசுத்தியுடன் அழைத்தால், பாபாவே நம்மைத் தேடி வருவார்; நமக்கும் நம் குடும்பத்துக்கும் அருளுவார்! இன்றைக்கும் பக்திப்பரவசத்துடன் ஆலய வழிபாடு செய்கிறோம். பாராயணம் செய்து வணங்குகிறோம். ஆழ்வார் பெருமக்களையும் நாயன்மார்களின் சரிதங்களையும் படித்து மனமுருக வேண்டிக்கொள்கிறோம். இந்த வகையில் மகான்களை வழிபடுகிற பக்தர்களும் ஏராளம்.
சொல்லப்போனால், கடவுளை வழிபடுவதற்கும் அவர்கள் மீது நம்பிக்கையுடன் கொண்ட பக்திக்கும் பாலமாக இருப்பவர்கள் மகான்கள் என்று ஒவ்வொரு பக்தரும் உணர்ந்து சிலிர்க்கிறார்கள். நாம் செலுத்துகிற வழிபாடுதான் நம்மை நமக்கே உணர்த்துகின்றன. கடவுளை எங்கும் தேடிப் பயனில்லை. அவர் நமக்குள்ளே, உனக்குள்ளே இருக்கிறார் என்று மகான்களும் சித்தபுருஷர்களும் யோகிகளும் அருளிச் சென்றிருக்கிறார்கள்.
அப்படி அருளியவர்களில் ஷீர்டி சாய்பாபாவும் ஒருவர். சோர்ந்து போகிற தருணங்களும் துவண்டு விழுகிற நேரங்களும் எல்லார் வாழ்விலும் நடக்கத்தான் செய்கின்றன. எல்லோருக்கும் இப்படி நடந்தாலும், துக்கத் துயரங்கள் எல்லோருக்கும் இருப்பதை உணர்ந்தாலும் ‘எனக்கு மட்டும் ஏனிப்படி?’ என்று புலம்பாதவர்களே இல்லை. ’நான் என்ன பாவம் செஞ்சேன்’ என்று வருந்தாதவர்களே இல்லை. கண்ணீர் விடாதவர்களே இருக்கமுடியாது.
நாமெல்லாரும் சாமான்ய மனிதர்கள். அப்படித்தான் துவளுவோம். கதறுவோம். கண்ணீர் விடுவோம். அந்த தருணங்களில், நம்மை ஆற்றுப்படுத்தவும் நமக்கெல்லாம் பலம் தரவும் நம்மை வளப்படுத்தவுமாக வருபவர்கள்தான் மகான்கள். அப்பேர்ப்பட்ட மகான் தான் பகவான் ஷீர்டி சாய்பாபா.
அதனால்தான், ‘நான் இருக்கிறேன். நீ ஏன் புலம்பிக்கொண்டே இருக்கிறாய்?’ என்கிறார் பாபா. ‘கவலைப்பட்டாலோ கண்ணீர் விட்டாலோ எதுவும் மாறப்போவதில்லை. உன் தவறுகளை நீ உணர்ந்து, தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொள்ளும் புத்தி உனக்கு இருந்தால், உன்னைத் தேடி நானே வருவேன்’ என்கிறது சாயி சத்சரிதம்.
உலகாயத விஷயங்களை, லெளகீகக் கடமைகளைச் செவ்வனே செய்வதற்கு பக்கபலமாக மகான்களின் உபதேசங்கள் நமக்கு வழியாக,வழிக்குத் துணையாக இருக்கின்றன. மகான்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் ஆகச்சிறந்த வழி. ஷீர்டி எனும் கிராமத்தை புண்ணியபூமியாக்கிய. பாபாவை ஒருவர் நெருங்கிவிட்டால், அவர்கள் பிறகு எதற்காகவும் கவலைப்படமாட்டார்கள்; புத்தியைத் தெளிவாக்கி, செயலில் கூர்மையைத் தந்தருளும் அற்புதத்தை நிகழ்த்தி அருளுவார் பாபா. நமக்கான சத்விஷயங்கள் தொடர்ந்து நம்மைத் தேடி வரும்; சூழ்ந்துகொள்ளும்; நம்மை ஆற்றுப்படுத்திக்கொண்டே இருக்கும் என்கிறார் சாய்பாபா பக்தரான ஐயப்பப் பாடகர் வீரமணி ராஜூ.
ஷீர்டி சாயிபாபாவை அழைப்பதற்கு எளிய வழிகள் இருக்கின்றன என்கிறார்கள் பாபாவின் பக்தர்கள். . முதலாவது... ஷீர்டி நாயகனின் மூல மந்திரம்.
ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி இந்த மூலமந்திரத்தை தினமும் சொல்லுவோம். 11 முறை சொல்லலாம். 24 முறை சொல்லலாம். முடியுமென்றால், தினமும் 108 முறை சொல்லி வணங்கலாம். பூஜையறையில் அமர்ந்தும் சொல்லலாம்; பயணத்தின் போது மனதுள் சொல்லிக்கொள்ளலாம்; நம்மைத் தேடி சாய்பாபாவே வருவார்!
ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெயஜெய சாயி!
- வி.ராம்ஜி